ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஸ்டி அரசியலமைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று லண்டனுக்குப் பயணமானார்.

அவருடன் இணைந்து கொள்வதற்காக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், நாளை லண்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், இதற்கான யோசனையை தயாரிக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இறங்கியுள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்தின் போது, அதியுச்ச அதிகாரப் பகிர்வை அளிக்கும் சமஷ்டி தீர்வை வலியுறுத்துவோம் என்று இரா.சம்பந்தன் கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

உலகில் அதிஉச்ச சமஷ்டி அரசியலமைப்பு ஸ்கொட்லாந்தில் நடைமுறையில் இருக்கின்ற நிலையிலேயே, இரா.சம்பந்தனும், சுமந்திரனும், லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்துக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

லண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்தும் கலந்துரையாடலில் பங்கேற்கும் இவர்கள், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனையும் சந்திக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் சந்திப்புகளின் பின்னர், ஸ்கொட்லாந்து சென்று சமஷ்டி அரசியலமைப்பு குறித்து இவர்கள் ஆராயவுள்ளனர்.

Share.
Leave A Reply