அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என சவால் விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, சர்வதேச நீதிமன்ற விசாரணை வரவிருப்பதால் அதற்கு எதிராக பௌத்த குருமார் வீதிகளில் இறங்குவதை தடுக்க குருமாரை கட்டுப்படுத்தும் சட்டத்தை அரசு நிறைவேற்ற முயற்சிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி வரை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி எம்மிடம் இருந்தது. நல்லாட்சியாளர்கள் எமது குடும்பத்தை ஆசியாவிலேயே செல்வந்தர் குடும்பமாக வர்ணிக்கின்றனர்.

அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரசதரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.

அமெரிக்க வங்கியில் எனது பெயரில் ஒரு அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிரூபித்தால் எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்.

முடிந்தால் அரசு தரப்பினர் இதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் சவால் விடுகின்றேன்.

எமது நாட்டுக்கு எதிராக ஹைபிறிட் நீதிமன்றம் விசாரணை (சர்வதேச நீதிமன்ற) நடைபெறவுள்ளது. இவ்வாறான நிலையில் பெளத்த குருமார்கள் இதனை எதிர்த்து வீதியில் இறங்குவார்கள்.

இதனை தடுப்பதற்காகவே பெளத்த குருமாரை கட்டுப்படுத்தும் சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு துடிப்பாக முயற்சிக்கின்றது. இவ்வாறானதொரு விசாரணை இடம்பெறாது என ஜனாதிபதி கூறுகின்றார். இது இடம்பெறும் என அரசுக்குள் வேறொரு கூட்டம் தெரிவிக்கின்றது. எனவே இவ்விடயத்தில் உண்மையைக் கூறுவது யார்? பொய் கூறுவது யார்? உண்மை தெரியாமல் உள்ளது.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனக் கூறும் அரசாங்கம் ‘பியர்’ மதுபானம் தயாரிப்பதற்காக குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்கின்றது. என்ன நடக்கின்றது என்பது ஜனாதிபதிக்கு தெரியவில்லை. இதனால் அரிசியின் விலை இன்று உயர்ந்துள்ளது.

நான் நிர்மாணித்த வீதிகளில் பயணித்துக் கொண்டு என்னை விமர்சிக்கின்றனர். இன்று கொழும்பு நகரில் துர்நாற்றம் இல் லை. ‘சுத்தமான மணற்தரையில் மக்கள் உறங்குகின்றார்களா என்பதை மக்களிடமே கேட்க வேண்டும்’ என்றும் மஹிந்த ராஜ பக் ஷ தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply