இலங்கையில், 1995, 1997, 2000ஆம் ஆண்டு ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

1995ஆம் ஆண்டு, சந்திரிகா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு பேசி, நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவர சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.

அவ்வரைவு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்வைக்கப்பட்டதன் பின், அவர்களுடனும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாத நிலையில், 1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி அரசியலமைப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின் திருத்தங்களுடன் 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்; நாடாளுமன்றதெரிவுக் குழுவால் திருத்தப்பட்ட அரசியலமைப்பு வரைபு, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் முன்வைக்கப்பட்டது.

13 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆயினும், அதை ஏற்றுக்கொள்ள ஐ.தே.க முன்வரவில்லை.

இந்த இரு அரசியலமைப்பு வரைவுகளிலும் ஐ.தே.க முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டும், புதிய அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கும் போது, அவர்கள் வேண்டுமென்றே வெளிநடப்புச் செய்து இரு முயற்சிகளையும் தோல்வியடையச் செய்தனர்.

2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு இதே விதமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு, இதேவிதமான ஒரு விளையாட்டினை ஐக்கிய தேசியக் கட்சி விளையாடியது.

அந்நேரம் ‘அரசியலமைப்பிலே, நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டினை இல்லாதொழித்துவிட்டதாக’ பொய்பிரசாரம் செய்தனர்.

பிராந்திய சபைகளை, வடக்கு, கிழக்குக்கான இடைக்கால சபையினை இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், இது இன்று  நிலவும் மாகாணசபையை ஒத்த அதிகாரப் பரவலாக்கமாகவே இருந்தது.

மாகாண சபை முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது. இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின்னரான 13ஆம் சீர்த்திருத்தத்திலேயாகும்.

இதை அறிமுகப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சி என்றாலும், சுதந்திரக் கட்சி அறிமுகப்படுத்தும் ஓர் அரசியலமைப்பு என்ற காரணத்தினால் மட்டுமே, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதை எதிர்த்தது.

இந்த அரசியல் நடவடிக்கையொன்றும் இலங்கை வரலாற்றில் புதியதல்ல. பண்டா – செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கட்சியொன்றின் முயற்சியை அதில் உள்ள விடயம் நாட்டின் நலனுக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது என்பதைப் பாராது, மற்றையகட்சி தனது சுயநலத்துக்காக எதிர்ப்பது வழக்கமான விடயமாகிவிட்டது.

இது இலங்கையின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.

2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவமளித்து, பிராந்தியசபைகள் உள்ளிட்ட சுயாதீன கட்டமைப்பு, பிராந்திய அமைச்சரவை, சிறுபான்மையினர் சார்பாக இரண்டு உப- ஜனாதிபதிகள், அதிகாரம் பரவலாக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் நீதிமுறை புனராய்வு அதிகாரம், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் அமரும் மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பினை மீளாய்வு செய்யும், அதேநீதிமன்றத்தின் முழுக்குழாம் எனும் நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் இல்லாத புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

அத்தோடு, 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு, ‘இலங்கைக் குடியரசானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களை அடக்கிய ஒரு சுதந்திர இறைமைத்துவ தன்னாதிக்க அரசாகும் எனக் கூறுகின்றது.

‘அரசு குடியரசின் தன்னாதிக்கத்தையும் இறைமையையும் ஒற்றுமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல் வேண்டுமென்பதுடன் இலங்கையின் சமுதாயத்தின் பல்லின, பல்மொழி, பல்மத இயல்பினை ஏற்றங்கரித்து ‘இலங்கையராம்’ அடையாளத்தை காத்தலும் முன்னெடுத்துச் செல்லுதலும் வேண்டும்.’ எனக் கூறுகிறது.

மேலும், ‘பிராந்திய சபைகள் குடியரசிலிருந்து தனிவேறாதல், பிரிந்துப் போதல் இடப்பரப்பின் எல்லைகளை மாற்றுதல், ஏதேனும் பிராந்தியத்திலிருந்து ஆட்புலத்தை தனிவேறாக்குதல் மூலம் அல்லது இரண்டு அதற்கு மேலதிகமான பிராந்தியங்களை ஒன்றிணைப்பதனால் புதியதொரு பிராந்தியத்தை அமைத்தலை, முயற்சிசெய்தல் ஊக்குவித்தல் அல்லது வேறுவகையாக எத்தனித்தல் ஆகாது.’ என ஏற்பாடு செய்கிறது.

இது சுயாதீனமான பிராந்தியசபைகள் பிரிந்து போவதை தடுப்பதாகவும் ஒரு சமஸ்ட்டியாக செயற்படுவதாகவும் அமைந்துள்ளது.

எனினும், சிறுபான்மையினரின் உரிமைகளை அபிலாஷைகளை நசுக்கும் விதமாக, தனது ஜனநாயகப் பலத்தினை ஐ.தே.க பிரயோகித்து, 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவைத் தடைசெய்தமை சிறுபான்மையினருக்குச் செய்த மிகப் பெரிய துரோகமாகும்.

இப்போது புதிய அரசியலமைப்பு வரைவு நாடகத்தை மேடையேற்றுகின்றது? 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையினை இல்லா தொழிக்கவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, அப்போதைய ஐ.தே.க தலைவர் எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விவாதத்திலிருந்து விலகி நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

கடந்த காலங்களில், தமிழ் மொழியில் தேசியகீதம் பாடக்கூடாது என பல்வேறு இனவாதக் கட்சிகளும் குழுக்களும் ஊழையிட்டிருந்தன.

ஆனால், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு தேசியகீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் ஏற்று அங்கரித்திருந்தது.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பினைப் போல் அல்லாமல், மனித உரிமைகள் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பினைப் போல அடிப்படை உரிமைகள் பரந்த ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன.

இது இலங்கையின் அரசியலமைப்புகளிலேயே அடிப்படை உரிமைகள் விடயத்தில் என்றும் எட்டமுடியாத விரிவான ஏற்பாடு எனலாம்.

உயிர் வாழும் உரிமை, சித்திரவதைக்கு, கொடுரமான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருக்கும் சுதந்திரம், ஏதேட்சதிகரமான கைது, சட்டவிரோதமாக தடுத்து வைத்தலுக்கு எதிரான உரிமை, சமத்துவ உரிமை, நடமாடும் உரிமை, இரகசிய உரிமை, சிந்தனை, மதச் சுதந்திரம், தகவல், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், ஒருங்கு சேரும் சுதந்திரம், கலாசார உரிமை, தொழில் உரிமை, ஆதன உரிமை, சிறுவர் உரிமைகள் பாதுபாப்பான வேலை செய்யும் உரிமை, சமூக உரிமை, என விரிவான அடிப்படை உரிமைகள் ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.

நாடாளுமன்றம், அமைச்சரவைக்கு அதிக அதிகாரங்களை கையளித்து நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் ஒரு ஜனாதிபதி, இரு உப ஜனாதிபதிகள் அரசின் தலைவர்களாக செயற்படுவர் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரு தடவைக்குமேல் தெரிவு செய்யப்பட முடியாது எனும் மட்டுப்பாடு, பிரதமரின் ஆலோசனையின்பேரில் ஈ:டுபடவேண்டும் எனும் ஏற்பாடுகள் காணப்பட்டன.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள், எவ்வாறு அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தனர் என்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

நீதிமன்றங்கள் மீதான தாக்குதல், உயர்நீதிமன்ற பிரதம நீதியரசரை மிகக் கேவலமாக நடாத்தியமை, நீதிபதிகள் சட்டத்தரணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன நீதித்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாதொழித்தது.

இதில் அதிகாரம் படைத்தோரும் குற்றவாளிகளும், ஏன் சில நீதிபதிகள், சட்டத்தரணிகள் கூட நலன் பெற்றார்கள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை.

மேனிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவி நீக்கம் விடயத்தில் தெளிவான ஏற்பாடுகள் 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைபில் காணப்படுகின்றன.

உயர்நீதிமன்ற பிரதமநீதியரசர் பதவி நீக்க விடயத்தில் பொதுநலவாய நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளை கொண்ட விசாரணைக் குழுவினால் விசாரனை நடாத்தவும் குற்றம் நிரூபிக்கப்பட்டாலன்றி, நாடாளுமன்றம் தலையிட முடியாத ஏற்பாடு நாடாளுமன்றத்தின் தற்துணிவு அதிகாரத்தினை குறைத்து நீதித்துறை சுதந்திரத்தையும் தடையையும் சமநிலையையும் உறுதிப்படுத்துவதோடு, அரசியலமைப்புவாதம் அல்லது அரசியலமைப்பிமாணியக் கோட்பாட்டினை மேம்பாட்டடையச் செய்கிறது. தற்போது காணப்படும் அரசியலமைப்புப் பேரவை, முழுக்க முழுக்க அரசியல் மயப்படுத்தப்பட்டது.

ஆனால், 2000ஆம் ஆண்டு அரசியலமைப்பு வரைவில், உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்றங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளை உள்ளடக்குவதுடன், மாகாணசபைகளின் முதலமைச்சர் கூட்டவையின் தவிசாளர் ஒருவரையும் உள்ளடக்ககூடிய ஏற்பாடு காணப்பட்டது.

புதிய அரசியலமைப்பு அரசியல் மயப்படுத்தப்பட்ட ஓர் அரசியலமைப்பு பேரவையல்லாத சுதந்திரமான பேரவையை உருவாக்ககூடிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது.

இல்லாத பட்சத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவமுடியாது என்பதோடு ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவும் முடியாது.

ஏற்கெனவே, நீதிமன்றங்களிடமிருந்த அதிகாரங்களை ஓர் அரசியலமைப்பு அல்லது சட்டம் இல்லாதொழித்தல், சுதந்திர நீதித்துறையை பாதிப்படையச் செய்யும் கடந்த காலங்களில் உயரநீதிமன்ற தீர்ப்புக்கள் பல இதை நன்கு விவரித்துள்ளன.

மக்களின் உரிமைகளையும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தையும் பாதுகாப்பது நீதிமன்றங்களின் கடமை. எனவே, அரசியலமைப்பாயினும் சரி, வேறு சட்டங்களாயினும் சரி மக்களிலிருந்து நீதிமன்றங்களிடமிருந்து பிரிக்க முடியாத விடயங்களை பிரித்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதனின் உயிர் வாழும் உரிமையை பிரிப்பதும் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம், நீதிமன்ற சுதந்திரம் என்பவற்றை பிரிப்பதும் ஒன்றே.

இலங்கை நீதிமன்றங்களின் வழக்குகளில் பல, சட்டமாதிபர் திணைக்களத்தின் தாமதத்தால் தேங்கிக் கிடப்பதோடு, சட்டமாதிபர் அறிக்கைகள் இன்றியே சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் சிறைக்கைதிகள், குற்றவியல் சிறைக்கைதிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

சட்டமாதிபர் திணைக்களம் சேயாவின் வழக்கிலும் தாஜுதீனின் வழக்கிலும் மிகவிரைவாக மரபணு அறிக்கை பெற்றுக்கொண்டு, வழக்கினை துரிதப்படுத்தியதை நாம் வரவேற்கிறோம்.

இதேநிலைமை ஏனைய வழக்குகளிலும் பின்பற்றுவதற்காக, சட்டமாதிபர் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வழக்குகளை விரைவாகக் கொண்டு நடாத்த போதுமான சட்டஏற்பாடுகளை அரசியலமைப்பு உள்ளடக்குவது காலத்தின் தேவையாகும்.

(தொடரும்…)

எஸ்.மோகனராஜன்
சட்டத்தரணி

Share.
Leave A Reply