ஜூலை மாதம் 23-ம் தேதி நள்ளிரவுக்கு கிட்டிய நேரத்தில சில இளைஞர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கண்ணிவெடி ஒன்றை புதைத்து வைத்ததுவிட்டு வீதியின் இருபுறமும் காத்திருந்தார்கள் என்பதில் கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

அந்த இளைஞர்களில் ஈழ விடுதலை போராட்டத்தின் மிக முக்கியமானவர்கள் சிலரும் இருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்க ஆரம்ப உறுப்பினர்களான கிட்டு, ஐயர், விக்டர், புலேந்திரன், செல்லக்கிளி, சந்தோஷம், அப்பையா என்பவர்களுடன், புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், இரவில் வீதியில் கண்ணிவெடி வைத்துவிட்டு காத்திருந்த அந்தக் குழுவில் இருந்தார்.

அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் இருந்தன.

அந்த நாட்களில் அவர்களிடம் பெருமளவு ஆயுதங்கள் இல்லை என உளவுத்துறை ‘ரா’ அதிகாரி குரு டில்லியில் வைத்து கூறியது குறிந்து கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம் அல்லவா? உளவுத்துறை ‘ரா’ வைத்திருந்த தகவல் சரியானதுதான். புலிகள் இயக்கத்தில் அப்போது மிக சொற்ப எண்ணிக்கையிலேயே ஆயுதங்கள் இருந்தன. அப்போதுதான், ஆயுதங்களை சிறிது சிறிதாக சேர்க்க தொடங்கியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைகளுக்கு கிடைத்த முதலாவது ஆயுதம் ஒரு கைத்துப்பாக்கி. .38 ரக பிஸ்டல் அது. இந்தியர் ஒருவரிடமிருந்து அந்த நாட்களில் இந்திய ரூபா 300-க்கு வாங்கப்பட்டது. அதன் பின்னர், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து மற்றொரு ரைபிள் 3000 ரூபா கொடுத்து வாங்கப்பட்டது.

இப்படித் தொடங்கிய ஆயுதச் சேகரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிடும் சம்பவம் நடந்த 1983-ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தின் கைகளில் சுமாரான அளவிலான ஆயுதங்கள் சேர்ந்திருந்தன.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி வீதியில் கண்ணிவெடித் தாக்குதலுக்கு சென்றபோது, விடுதலைப் புலிகளின் சேகரிப்பில் இருந்த அனைத்து ஆயுதங்களும் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

இந்த இடத்தில், கட்டுரையின் கடந்த பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயத்தை மீண்டும் பாருங்கள்.

டில்லி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி சங்கர் பாஜ்பாய், “இந்த இளைஞர்கள் அங்கே (யாழ்ப்பாணத்தில்) என்ன செய்ய போகிறார்கள் என்பதில்தான், நாம் (இந்தியா), இலங்கை விவகாரத்தில் தலையிடுவதா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.

அவர்கள் அங்கே எல்லோரும் இலங்கை ராணுவத்தின் கைகளில் அகப்பட்டால், இந்த ஆலோசனை கூட்டத்துக்கே அவசியமல்லை. நாங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை. ஆனால், இந்தியா ஒரு அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிடும்” என்று சொன்னார் அல்லவா?

இந்த வீதி கண்ணிவெடி தாக்குதலில் அப்படி ஒரு ரிஸ்க்கைதான் விடுதலைப் புலிகள் எடுத்திருந்தனர்.

அவர்கள் அதுவரை காலமும் ஒவ்வொன்றாக சேர்த்துவைத்த அனைத்து ஆயுதங்களும் அன்றிரவு ஒரே இடத்துக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது. புலிகள் இயக்கத்தில் அப்போதிருத்த அனைத்து முக்கிய உறுப்பினர்களும், புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட, அன்றிரவு அந்த தாக்குதலை நடத்த வந்திருந்தனர்.

ஒரு வேளை முன்கூட்டியே தகவல் கிடைத்து இவர்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டிருந்தால் சேகரிப்பில் இருந்த அனைத்து ஆயுதங்களும், இயக்கத்தில் இருந்த னைத்து முக்கியஸ்தர்களும் ஒரே இடத்தில் சூழப்பட்டிருப்பார்கள்.

உங்களுக்கு தெரியுமா… அப்படி ஒரு உளவுத்தகவல் இலங்கை உளவுத்துறைக்கு இன்பார்மர் ஒருவரால் கொடுக்கப்பட்டது என்பது!

இந்த கட்டுரையின் அடுத்தடுத்த பாகங்களில்   அந்த நபரின் சங்கேதப் பெயர் என்ன என்பது உட்பட சில விபரங்களை பார்க்க போகிறீர்கள். இந்த திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதல் நடப்பதற்கு முன், “அடுத்த ஒருசில நாட்களுக்குள், யாழ்ப்பாண எல்லைக்குள் வைத்து இப்படியான தாக்குதல் ஒன்று நடக்கப் போகிறது” என்று தகவல் கொடுத்திருந்தார் அந்த ‘சங்கேதப் பெயர்’ இன்பார்மர். அதை பின்னர் பார்க்கலாம்.

ஆனால், அந்த நாட்களில் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியான ரிஸ்க் ஒன்றை எடுக்கவே வேண்டியிருந்தது. காரணம், ஆட்பலமும் குறைவு. ஆயுத பலமும் குறைவு. இதனால், அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, அனைத்து முக்கியஸ்தர்களும் இந்த தாக்குதலை செய்ய வந்திருந்தனர்.

வீதியில் வைக்கப்பட்ட கண்ணிவெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்ட தாக்குதலுக்கு, இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது?

1980களுக்கு பிறகு பிறந்த பல வாசகர்களுக்கு அது தெரியாதுகூட இருக்கலாம். 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி வீதியில், இலங்கை தொலைபேசி இலாகாவால் போடப்பட்ட துவாரம் ஒன்றில் சக்திவாய்ந்த கண்ணிவெடி ஒன்று வெடித்ததில், 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்த 13 பேரின் உடல்களும் கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டபின், அதை வைத்தே ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த இனக்கலவரம் தொடங்கியது. இனக்கலவரம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த இந்தியா, இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட்டது. ஈழ போராளி இயக்கங்களுக்கு, இந்திய மத்திய அரசு ஆயுத பயிற்சி வழங்கினார்கள்.

அதன்பின் ஈழ ஆயுதப் போராட்டம் பல்வேறு திருப்பங்களை சந்தித்து, முடிந்தது.

சுருக்கமாக சொன்னால், 1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், யாழ்ப்பாணம் திருநெல்வேலி வீதியில், இலங்கை தொலைபேசி இலாகாவால் போடப்பட்ட துவாரம் ஒன்றில் இருந்து வெடித்தது ஒரு கண்ணிவெடி மட்டுமல்ல, ஈழ ஆயுதப் போராட்டமும் அதே துவாரத்தில் இருந்துதான் வெடித்து விஸ்வரூபம் எடுத்தது.

இப்படிப்பட்ட சிறப்பு பெற்ற துவாரத்தில் கண்ணிவெடியை புதைத்து வைத்துவிட்டுதான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட மற்றவர்களும் காத்திருந்தனர், ராணுவ வாகனத் தொடர் ஒன்றை எதிர்பார்த்து!

அதோ பாருங்கள்… வீதியில், தொலைவில், ராணுவ வாகனம் ஒன்றின் ஹெட்லைட் தெரிகிறது அல்லவா? இன்னமும் சிறிது நேரத்தில் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான அந்த வாகனம் கண்ணிவெடியில் சிக்கி, மேலே தூக்கி எறியப்பட்டு, கீழே விழப் போகிறது!

அந்தக் கணத்துக்கு போவதற்கு முன், இந்த ராணுவ வாகனங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை பார்க்கலாமா? இதற்குள் உள்ள ராணுவத்தினர், கடந்த 2 மணி நேரத்தில் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாமா?

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் அமைந்திருந்த இலங்கை ராணுவத்தின் ராணுவ முகாம்.

அந்த நாட்களில், ஒவ்வொரு நாள் இரவும், வழமையான இரவு நேர ரோந்துக்காக மாதகல் முகாமில் இருந்து வாகனங்களில் கிளம்பும் ராணுவத்தினர், யாழ்ப்பாணம் டவுன் வீதிகள் ஊடாக சென்று குருநகர் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமை சென்றடைவார்கள். அங்கேயுள்ள மிலிட்டரி மெஸ்ஸில் இரவு உணவை முடித்து கொண்டு, மீண்டும் மாதகல் முகாமுக்கு மற்றொரு பாதையால் திரும்புவார்கள்.

இதுதான், யாழ்ப்பாணத்தில் செய்யப்படும் அவர்களது வழமையான இரவு ரோந்து.

சம்பவம் நடந்த தினத்திலும், மாதகல் ராணுவ முகாமில் இருந்து ஒரு ஜீப்பும், அதைத் தொடர்ந்து மற்றொரு ராணுவ ட்ரக்கும் ரோந்துக்காக கிளம்பின.

ராணுவ முகாமில் இருந்து ராணுவ வாகனங்கள் ரோந்து செல்லும்போது, அந்த வாகனத் தொடருக்கு ஒரு சங்கேத பெயர் கொடுக்கப்படும். காரணம் என்னவென்றால், ஒரு வேளை இவர்கள் கிளம்பி சென்றபின், ராணுவ முகாமை யாராவது தாக்க தொடங்கினால், ராணுவ முகாமில் உள்ளவர்கள், முகாமுக்கு வெளியே உள்ள இலக்குகளை நோக்கி சுட வேண்டும் அல்லவா?

அந்த சூடு, முகாமுக்கு வெளியே ரோந்து சென்றவர்கள் மீதும் படலாம் அல்லவா?

இதனால், ரோந்து சென்றவர்கள் தங்களது சங்கேதப் பெயரை ரேடியோ மூலம் கூறினால், அவர்கள் மீது சுடமாட்டார்கள். அதுதான், ராணுவ முகாமில் இருந்து வெளியே போகும் ஒவ்வொரு வாகனத் தொடருக்கும் ஒரு சங்கேதப் பெயர் கொடுக்கப்படும் காரணம்.

சம்பவ தினத்தில், மாதகல் ராணுவ முகாமில் இருந்து கிளம்பிய ரோந்து வாகன தொடரின் சங்கேத பெயர் Four Four Bravo (44-B). அதற்குத் தலைமை தாங்கிச் சென்றவர் இரண்டாவது லெப்டினென்ட் வாஸ் குணவர்தனே.

வாஸ் குணவர்தனே முன்னே சென்ற ஜீப்பில் அமர்ந்திருக்க, ஜீப்பை பின்தொடர்ந்த ராணுவ ட்ரக்கில் மற்றய ராணுவத்தினர் ஏறிக்கொள்ள, அந்த வாகன தொடர், மாதகல் ராணுவ முகாமின் காவலரண்களை கடந்து வெளியே வீதிக்கு வந்தது.

இந்த ட்ரக்கிலும், ஜீப்பிலும் வாகனங்களில் செல்பவர்களில் பலர் மீண்டும் ராணுவ முகாமுக்கு உயிருடன் திரும்பப் போவதில்லை என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.

இது நடந்த காலத்தில், யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமில்தான், இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவ உளவுத்துறை (MI – Military Intelligence) இயங்கி வந்தது.

மாதகலில் இருந்து வந்த ஜீப்பும், ட்ரக்கும் குருநகர் ராணுவ முகாமுக்குள் நுழைந்தவுடன் வாஸ் குணவர்த்தனேவுக்கு ஒரு செய்தி காத்திருந்தது. “உடனடியா போய் சரத் முனிசிங்கேேவை பாருங்கள். அவர் உங்களுக்காக காத்திருக்கிறார்”

சரத் முனிசிங்கேதான் அந்த நாட்களில், இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண பகுதிக்கான ராணுவ உளவுத்துறையின் தலைவர். மேஜர் தர அந்தஸ்திலுள்ள அதிகாரி.

வாஸ் உடனே சென்று அவரைப் பார்த்தார்.

“நீங்கள் Four Four Bravo-வில் வரும்போது வீதியில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் எதையாவது பார்த்தீர்களா?”

“இல்லையே… அசாதாரணமாக எதுவும் இல்லை. என்ன விஷயம்? ஏதாவது அசம்பாவிதத்தை எதிர்பார்க்கிறீர்களா?”

“ஆம்”

“எங்கள் மீது தாக்குதலா?” சிரித்தார் வாஸ்.

“கிட்டத்தட்ட அப்படித்தான்” என்று முகத்தை சீரியஸாக வைத்தபடி கூறினார் சரத் முனிசிங்கே.

“சொல்லுங்கள். என்ன விஷயம்” இப்போது, தாமும் சீரியஸானார் வாஸ் குணவர்த்தனே.

“இன்று நள்ளிரவுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு தாக்குதல் முயற்சி நடைபெறலாம் என்று நம்பத்தகுந்த இன்பார்மர் ஒருவரிடம் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. நீங்கள் சீக்கிரம் இரவு உணவை முடித்துக் கொண்டு, நள்ளிரவுக்கு முன்பே யாழ்ப்பாணம் நகர எல்லையை கடந்து சென்று விடுங்கள்” என்றார் சரத்.

“தாக்குதல் முயற்சியா? யார்?”

“எல்.டி.டி.இ. (விடுதலைப் புலிகள்). செல்லக்கிளி தலைமையில் ஒரு தாக்குதல் இன்றிரவு இருக்கலாம் என்பது தகவல். இந்த இன்பார்மர் கொடுக்கும் தகவல்கள் துல்லியமானவை. எச்சரிக்கை தேவை” (தொடரும்)

Share.
Leave A Reply