1972ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டார நாயக்காவினால் கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பு அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவில் 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட யாப்பு, அதன் பின்னர் செய்யப்பட்ட 19 யாப்பு திருத்தங்களுக்கு பதிலாக புதிய அரசியல் யாப்பை மக்கள் ஆலோசனைகளை பெற்று முன்வைக்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழர் தரப்பும் யாப்பு திருத்தத்தில் தமது கோரிக்கைகளை முன்வைக்க தயாராகி வருகின்றன.

தமிழர்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பாக ஒற்றுமையாக தமது கோரிக்கையை முன்வைக்க முடியாத நிலையில் தனித்தனியாக தமது யோசனைகளை தமிழர் தரப்பு முன்வைக்க உள்ளன

தமிழர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்பதில் சிங்கள தரப்பு ஒன்றுமையாக இருக்கிறது. ஆனால் தமக்கு என்ன தீர்வு என்பதை முன்வைப்பதில் தமிழர் தரப்பிடம் ஒற்றுமை இல்லை.

சிங்கள மகாசபையின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கா இலங்கைக்கு சமஷ்டி ஆட்சியே பொருத்தமானது என்ற யோசனையை முன்வைத்த போது அப்போது இருந்த தமிழ் தலைவர்கள் சமஷ்டி வேண்டாம் நாம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

அதன் பின்னரான காலத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகம் சமஷ்டியை முன்வைத்த போது தமிழ் காங்கிரஷ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் 50க்கு 50கோரிக்கையை முன்வைத்தார். அன்று தொட்டு இன்றுவரை தமிழர் தரப்பு ஒற்றுமையாக தமக்கான தீர்வை முன்வைத்தது கிடையாது.

அதன் தொடர்ச்சியாகவே இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும், தமிழ் மக்கள் பேரவை தனியாகவும், வடமாகாணசபை தனியாகவும் இது தவிர உதிரிகளாக முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாள், சட்டத்தரணி குமரகுருபரன், சட்டத்தரணி விநாயகமூர்த்தி போன்றவர்களும் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த நகல் யோசனை இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எட்டமுடியாத கிடைக்க முடியாத கோரிக்கைகள் என தெரிந்தும் அவற்றை முன்வைப்பதால் என்ன பிரயோசனம் கிடைக்கப்போகிறது.

வட்டுக்கோட்டையில் தீர்மானத்தை நிறைவேற்றினோம், திம்புவில் நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்தோம் என காலம் காலமாக சொல்லிக்கொண்டிருக்கலாம். அதனால் என்ன பிரயோசனம்?

தமிழ் மக்கள் பேரவை தயாரித்த நகலின் உள்ளடக்கப்பட்ட சில விடயங்கள் உத்தியோகப்பற்றற்ற வகையில் வெளியாகியிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் 6ஆவது திருத்த சட்டத்தை மீறாத வகையிலேயே புதிய அரசியல் யாப்பை கொண்டுவரப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் நகல் யோசனைகள் அரச தரப்பால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை பார்க்க வேண்டும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த இரு தேசக்கொள்கையை அடியொற்றியதாக இலங்கையில் தமிழர் தேசம் சிங்கள தேசம் என இரு தேசங்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு பூரண சுயாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையின் நகலில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாலும் வடக்கு கிழக்கு தனியே தமிழர் தேசம் என்பது வடக்கு கிழக்கில் வாழும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்களிடையே விரிசல்களை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக் கூடாது.

வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39.5வீதமாகவும், முஸ்லீம்கள் 36.6வீதமாகவும், சிங்களவர்கள் 23.1வீதமாகவும் பறங்கி இனத்தவர்கள் 0.5வீதமாகவும் உள்ளனர்.

மூன்று இனங்கள் வாழும் ஒரு மாகாணத்தில் தனியே ஒரு இனத்திற்கு சொந்தமாக அடையாளப்படுத்துவது இனங்களுக்கிடையில் மேலும் விரிசலையே ஏற்படுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சிக்கான கோரிக்கை நியாயமானது.

ஆனால் அது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது என கோருவது எந்த வகையில் நியாயம்?

இன ரீதியாக தமிழர் தேசம் சிங்கள தேசம் என பிரித்து பார்ப்பது மலையகத்தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து அல்லது பூர்வீகமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும் சிங்கள தேசம் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவருவதாக அமைந்து விடும்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான தீர்வு திட்டம் என்பது வெறுமனே வடக்கு கிழக்கு தமிழர்களுக்கானது என பார்ப்பது மலையகத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என அடையாளப்படுத்துவது தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு தீனி போடுவதாகவும் அடைந்து விடும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் வளங்கள், நிதியைக் கையாளும் அதிகாரங்கள் சமஸ்டி ஆட்சி முறைக்குள் வரவேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் நகல் யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளன.

சமஷ்டி ஆட்சிக்கு முன் உதாரணமாக திகழும் சுவிட்சர்லாந்தில் கூட விமான நிலையங்கள், தொடருந்து போன்ற பொதுப்போக்குவரத்துக்கள் மத்திய அரசாங்கத்தின் கீழேயே உள்ளன.

இதை விட குடிவரவு குடியகல்வு திணைக்களம் சமஷ்டி அல்லது சுயாட்சி அதிகாரம் உள்ள சுவிட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா, போன்ற நாடுகளில் மத்திய அரசாங்கத்தின் கீழேயே உள்ளன.

தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாட்டில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதிக்கம் இருப்பதன் காரணமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள 10 இலட்சம் தமிழர்களுக்கான இரண்டைப்பிரஜா உரி;மை வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான பொறுப்புரிமை வடக்கு கிழக்கை உள்ளடக்கிய சமஸ்டி அரசாங்கத்திடம் வரவேண்டும் என்றும் நகல் யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களில் 10 இலட்சம் மக்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமையை பெற்றிருக்கிறார்கள் என்பது தவறான தகவலாகும்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களில் 25வீதத்திற்கு குறைவானவர்களே அந்தந்த நாடுகளின் குடியுரிமையை பெற்று வாழ்கிறார்கள். ஏனையவர்கள் இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்களாக இலங்கை பிரஜைகளாகவே வாழ்கின்றனர்.

உதாரணமாக சுவிட்சர்லாந்தில் அண்ணளவாக 60ஆயிரம் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 5வீதத்திற்கு குறைவானவர்களே சுவிஸ் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். ஏனைய 95வீதமானவர்களும் இலங்கை குடியுரிமையுடன் வாழ்கிறார்கள்.

சமஷ்டி அல்லது மாநில சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட அனைத்து நாடுகளிலும் குடியகல்வு குடிவரவு அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளன.

ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிந்து கொண்டும் யோசனைகளை முன்வைப்பது நியாயமான கோரிக்கைகளையும் நிராகரிப்பதற்கு வழிவகுத்து விடும்.

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரங்களில் யாழ்ப்பாணம் கண்டி கொழும்பு ஆகிய இடங்களில் சமஷ்டி அதிகாரங்கள் பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களுக்கும் கொழும்பு கண்டி ஆகிய இடங்களில் சிங்கள முஸ்லீம் தரப்பினருக்கும் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசியல் அமைப்பு என்பது உலகில் இரண்டாவது பழமைவாய்ந்த சமஷ்டி ஆட்சியை கொண்டதாகும். 1848ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசியல் யாப்பு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசியல் யாப்பில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்ட பின் மாகாணங்களால் கையாள முடியாதவற்றையே மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக வெளிநாட்டு விவகாரம், விமான, மற்றும் தொடருந்து போக்குவரத்து, தபால் தொலைத்தொடர்பு, இராணுவம், குடிவரவு குடியகல்வு ஆகியன மத்தியில் உள்ள சமஷ்டி கூட்டாட்சியின் வசம் உள்ளன. நீதியியல் மாகாணத்திற்கும் சமஷ்டி கூட்டாட்சிக்கும் பகிரப்பட்டுள்ளது. ஏனைய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமஷ்டி கூட்டாட்சி மூன்று பிரதான கட்டமைப்பை கொண்டது. அவை நாடாளுமன்றம், சமஷ்டி கூட்டாட்சி ஆட்சிக்குழு, சமஷ்டி கூட்டாட்சி உயர்நீதிமன்றம் ஆகும்.

சுவிஸ் அரசாங்கம் என்பது ஒரு கட்சி ஆட்சியை கொண்டதல்ல. 1956ஆம் ஆண்டிலிருந்து முக்கிய நான்கு கட்சிகளின் தேசிய அரசாங்கமே ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 7பேர் கொண்ட அமைச்சரவையிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது.

இந்த அமைச்சரவையின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் இருந்த போதிலும் சட்ட திருத்தங்கள் அனைத்தும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்ற முடியும். இதனால் தான் சுவிஸில் நேரடி மக்களாட்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுவதன் மூலம் மக்களால் அதனை மாற்றியமைக்க முடியும்.

நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை மக்கள் எதிர்க்கலாம், அதற்கு அவர்கள் அச்சட்டத்திற்கு எதிராக 100 நாட்களுக்குள் 50,000 கையொப்பங்களைப் பெற்று சமர்ப்பித்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எட்டு மாநிலங்கள் ஒன்றிணைந்தும் சமஷ்டி கூட்டாட்சி சட்டத்தின் மீதான பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க முடியும்.

சர்வஜன வாக்கெடுப்பு என்பது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உதாரணமாக கிரிமினல் குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் சட்டம், திருமணச்சட்டம், உட்பட சில சட்ட திருத்தங்களுக்காக பெப்ரவரி 28ஆம் திகதி 26 மாநிலங்களிலும் சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

தேசிய மட்டத்திலான விடயமாக இருந்தாலும் மாகாண மட்டத்திலான விடயமாக இருந்தாலும் அனைத்தும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்தியே சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதோடு மக்களின் அதிகாரங்கள் அவர்களின் கைகளை விட்டு போய்விடுகிறது. மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் மக்களிடம் இல்லை.

ஆனால் சுவிட்சர்லாந்து போன்ற மக்கள் ஆட்சி நடைபெறும் நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் மட்டுமல்ல சட்ட மூலங்களை நிறைவேற்றும் அதிகாரமும் மக்களிடம் தான் உள்ளன.

எனவே சுவிட்சர்லாந்தை போன்ற மக்கள் ஆட்சியுள்ள சமஷ்டி ஆட்சி ஒன்று இலங்கையில் உருவாக இடமுண்டா என்பது சந்தேகமே.

இலங்கை போன்ற பல மொழி இன மக்கள் வாழும் நாட்டிற்கு ஒற்றையாட்சி பொருந்தாது என பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற சிங்கள தலைவர்கள் அன்று கூறியிருந்தாலும் அவர்களே பின்னாளில் அதனை நிராகரித்திருந்தனர்.

அதிகாரங்கள் இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் பகிரப்படுகிறது என்ற உண்மையை மறுத்து அதிகாரங்கள் தமிழர் கைகளில் போய்விடும் என்ற குறுகிய எண்ணங்களுடனேயே சிங்கள பௌத்த பேரினவாதிகள் செயல்படுகின்றனர்.

தமிழ் மக்கள் பேரவை நகல் யோசனையை முன்வைத்திருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அதி உச்ச சமஷ்டி, சுயாட்சி பற்றி அறிந்து கொள்வதற்காக ஸ்கொட்லாந்திற்கு சென்றிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. 2010ஆம் ஆண்டு, 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியையே கோரியிருந்தார்கள்.

அவ்வாறு சமஷ்டியை கோரியவர்கள் அந்த சமஷ்டி ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நகல் திட்;டம் ஒன்று இல்லாத நிலையிலா சமஷ்டி தீர்வு வேண்டும் என கோரிவந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஸ்கொட்லாந்து பெரிய பிரித்தானியாவின் கீழ் உள்ள தீவாக இருந்தாலும் அதிஉச்ச சுயாட்சி அதிகாரம் கொண்ட நாடாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை, பிரிக்க முடியாத, ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு.

ஆனால் சம்பந்தன் இப்போது சமஷ்டி பற்றி அல்லது சுயாட்சி பற்றி அறிந்து கொள்ள சென்றிருக்கும் ஸ்கொட்லாந்து எந்த நேரத்திலும் பிரிந்து செல்லும் அதிகாரத்தை கொண்ட நாடு. ஸ்கொட்லாந்து மக்கள் விரும்பினால் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பிரிந்து செல்லும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மேமாதம் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் ஸ்கொட்லாந்து தேசியக்கட்சி பெரும்பான்மைய வென்றது.

இதனையடுத்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமா என ஸ்கொட்லாந்து மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் பிரிந்து செல்வதற்கு ஸ்கொட்லாந்து மக்கள் ஆதரவு வழங்கவில்லை.

பிரித்தானிய அரசு விரும்பாவிட்டாலும் ஸ்கொட்லாந்து மக்கள் விரும்புகின்ற நேரத்தில் பிரிந்து செல்கின்ற சுயநிர்ணய உரிமையை கொண்டவர்களாக ஸ்கொட்லாந்து மக்கள் விளங்குகிறார்கள்.

1707ஆண்டுவரை ஸ்கொட்லாந்து தனியான இறைமையுள்ள அரசாக விளங்கியது. இங்கிலாந்தில் ஆறாம் ஜேம்ஸ் மன்னராக முடிசூடியதை தொடர்ந்து வணிக மற்றும் பொருளாதார பாதுகாப்பு நலன் கருதி ஸ்கொட்லாந்து இங்கிலாந்துடன் விரும்பிய ஒன்றிணைவு ஒப்பந்தம் ஒன்றை செய்து பெரிய பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இணைந்து கொண்டது.

ஐரோப்பாவில் மிகப்பெரிய வணிக மையங்களில் ஒன்றான எடின்பரோவை தலைநகராக கொண்ட ஸ்கொட்லாந்து ஐரோப்பாவில் எண்ணெய் வளம் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.

ஸ்கொட்லாந்து பெரிய பிரித்தானியாவுடன் இணைந்து கொண்டாலும் தனிநாடு ஒன்றைப்போலவே காணப்படுகிறது. ஸ்கொட்லாந்தின் எண்ணெய் வளம் உட்பட எந்த வளங்களையும் பிரித்தானிய தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாது.

ஸ்கொட்லாந்தின் சட்டங்கள் கூட இங்கிலாந்து, வேல்ஸ், வடஅயர்லாந்து சட்டங்களிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. சட்டம், கல்வி, உட்பட அனைத்து துறைகளின் சட்டங்களும் இங்கிலாந்தை விட வேறு பட்டே காணப்படுகிறது.

நாணயம் மற்றும் வெளிவிவகார குடிவரவு குடியகல்வு துறைகளை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களும் ஸ்கொட்லாந்து அரசிடம் காணப்படுகிறது.
ஸ்கொட்லாந்து மக்கள் பிரிந்து செல்வதற்கு விரும்பினால் அதனை தடுக்கும் அதிகாரம் பிரித்தானியாவுக்கு கிடையாது.

எந்த நேரத்திலும் பிரிந்து செல்லும் அதிகாரங்களை கொண்ட ஸ்கொட்லாந்திற்கு பிரிக்க முடியாத ஒற்றையாட்சிக்குள் தீர்வை பெற விரும்பும் சம்பந்தன் எதற்காக போனார் என்பதுதான் புரியாமல் இருக்கிறது.

( இரா.துரைத்தினம். )

Share.
Leave A Reply