எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம்.
அலப்போ என்பது முன்னொரு காலத்தில், அதாவது 2011 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் பரபரப்பான வர்த்தக நகரம். சிரியாவின் மிகப்பெரிய நகரமும் கூட.
ஆனால் ஜனாதிபதி அஸாத் அரசை துரத்த எதிர்ப்பாளர்கள் கையில் ஆயுதத்தை ஏந்தியதன் பின்னர் அந்த நகரம் சுக்குநூறாகிவிட்டது.
என்றபோதும், அலப்போ சிரிய கிளர்ச்சியாளர்களின் கோட்டை என்று குறிப்பிடலாம். எல்லையில் துருக்கி இருப்பதால் ஆயுதங்கள் மற்றும் உதவிகள் கிடைப்பதில் பஞ்சம் எதுவும் இல்லை.
ஆனால் இப்படிப்பட்ட அலப்போ நகரை கைப்பற்ற அரச படை கண்டபடி தாக்குதல் நடத்தி கடந்த வாரத்திற்குள் குறிப்பிடும்படி முன்னேற்றமும் கண்டிருக்கிறது.
வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள், சிரியாவின் துருக்கி எல்லையில் நிர்க்கதியாகி இருக்கின்றனர். மறுபக்கம் அலப்போ தாக்குதலால், ஆரம்பமான சிரிய அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடங்கும் முன்னரே ஒத்திப் போடப்பட்டது.
இப்படி, சிரியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் ஒன்றை நடத்த அரச படைக்கு இத்தனை காலம் இல்லாமல் எப்படி தைரியம் வந்தது? எல்லாம் ரஷ்யா கொடுத்த தைரியம் என்பது பார்க் வெளிப்படையாக தெரிகிறது.
ஆயுதம் வேண்டுமா இதோ வைத்துக்கொள், இராணுவ ஆலோசனை, யுத்த களத்தில் படை உதவி, சர்வதேசத்தின் முன் அஸாத்தை பாதுகாக்க நல்லவர் வல்லவர் புகழ்ச்சி என்று உதவிகளுக்கு பஞ்சமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலே சிரிய வானில் அஸாத் சொல்லும் இடமெல்லாம் குண்டு போட்டு விட்டு செல்லப்பிள்ளையாக ரஷ்ய போர் விமானங்கள் மாறிவிட்டன. ரஷ்யாவின் இந்த வான் தாக்குதல்களே சிரிய படை அலப்போவில் வேகமாக முன்னேற காரணம்.
ரஷ்யா இப்படி அளவுக்கு அதிகமாக சிரியாவின் மீதும் அஸாத் அரசின் மீதும் அன்பு வைப்பதற்கு என்ன காரணம்? நிச்சயமாக மனிதாபிமானம், இறைமை, அரசியல் ஸ்திரத்தன்மை என்று மழுப்பலான பதில்கள் இங்கே செல்லாது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் சண்டித்தனம் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது ஒன்றும் சிரியாவின் நலன் சார்ந்த விடயமல்ல. முழுக்க முழுக்க ரஷ்யாவின் அரசியல், பொருளாதார லாபம் கருதியதாக இருக்க வேண்டும்.
Syrian_Naval_Base_at_Tartus-hr. port
மத்தியதரைக் கடல் பக்கமாக இருக்கும் சிரியாவின் டார்டுஸ் கடற்கரை நகர் எல்லோரையும் விட ரஷ்யாவுக்கு மிக முக்கியமானது.
இங்குதான் ரஷ்யாவின் கடற்படைத் தளம் இருக்கிறது. அது சோவியட் காலத்தில் இருந்து இந்த கடற்படைத் தளத்தை பேணிப் பாதுகாத்து வருகிறது.
இங்கிருந்துதான் ரஷ்யா மத்தியதரைக் கடலில் உலவும் தனது போர் கப்பல்களுக்கான விநியோகங்கள், பழுது பார்க்கும் வேலையை செய்கிறது.
அதாவது மத்தியதரைக் கடலில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஒரே ஒரு கடற்படை தளம் இதுதான். எனவே இதனை பாதுகாப்பது ரஷ்யாவுக்கு எத்தனை முக்கியம் என்பது பற்றி வியாக்கியானம் சொல்லத் தேவையில்லை.
டார்டுஸ் கடற்படை முகாமை பாதுகாக்க வேண்டுமானால் சிரியாவின் அஸாத் அரசை பாதுகாப்பது கட்டாயம் என்பது புடினுக்கு நன்றாக தெரியும்.
எனவே, ரஷ்யா சிரியா பற்றி அதிகம் கவலைப்பட காரணம் தேடினால், இதனை முக்கிய காரணியாக எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த கால வரலாற்றை பார்த்தால் அமெரிக்காவின் மூக்கு நுழைப்பால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யாவின் செல்வாக்கு படிப்படியாக குறைந்து வருகிறது.
அமெரிக்கா ஈராக்கிற்கு படையெடுத்து சதாம் ஹுஸைனை துரத்தியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு லிபியாவுக்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வானில் இருந்து குண்டு போட்டு முஅம்மர் கடாபியை கொன்றே போட்டது.
அதாவது பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு தோளில் கைபோட்டு நட்பு கொண்டாடும் ஒரு சில நண்பர்களையும் மேற்குலம் துரத்திவிட்ட நிலையில் அஸாத் மாத்திரமே இப்போது ரஷ்யாவுக்கு இருக்கும் ஒரே உற்ற நண்பன்.
உக்ரைனில் அண்மையில் நடந்தது இதுதான். அதாவது உக்ரைனின் ரஷ்ய ஆதரவு தலைவர் விக்டர் யனுகோவிச்சை மேற்குலகம் போடவேண்டிய தகிடுதத்தங்களை போட்டு வெளியேற்றி அங்கு தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
சும்மா இருக்காத ரஷ்யா உக்ரைனின் கிரிமயா பிராந்தியத்தை கைப்பற்றி, பின்னர் அந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஒன்றையே தொடங்கி வைத்தது. எனவே ரஷ்யா மத்திய கிழக்கிலும் இதே பாணியைத் தான் கையாண்டு வருகிறது.
ரஷ்யா சிரியாவில் தாக்குதல் நடத்ததை சாக்காக சொல்லும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவிடம் இருந்தும் உண்மையிலேயே ரஷ்யாவுக்கு ஆபத்திருக்கிறது.
இஸ்லாமியவாத போராளிகளிடம் அதிகம் அடிவாங்கிய நாடுகளில் ரஷ்யாவையும் சேர்க்கலாம். ரஷ்யாவின் சுயாட்சி பிராந்தியமான செச்னியாவை ஒட்டி இஸ்லாமிய போராளிகளிடன் ரஷ்யா இன்றும் பெரும் தலையிடியை சந்தித்து வருகிறது.
ஐ.எஸ். குழுவில் செல்வாக்கு செலுத்தும் பெரும் புள்ளிகளை பார்த்தால் அங்கு செச்னியர்கள் அதிகம். எனவே சிரியாவில் ஐ.எஸ். தலை தூக்கினால் ரஷ்யாவுக்கு ஆபத்து அதிகம். அந்தவகையிலும் ரஷ்யாவுக்கு சிரிய பிரச்சினையை ஓர் இருப்பு சார்ந்த பிரச்சினையாகக் கூட பார்க்கலாம்.
இன்னொரு பக்கம் சிரிய பிரச்சினை ரஷ்ய உள்நாட்டு அரசியல் சூழலை சமாளிக்கவும் புட்டினுக்குத் தேவைப்படுகிறது. சரியாக, கிரிக்கெட் போட்டியின்போது பொருட்களின் விலை அதிகரிப்பது போல புட்டின், சிரியாவை ஒரு கிரிக்கெட் மைதானமாகவும் பயன்படுத்துகிறது.
அதாவது உலகின் எண்ணெய் விலை, அடிமாட்டு விலைக்கு போகும்போது அதில் அடிபட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
ஏனென்றால் ரஷ்யாவின் பொருளாதாரம் கணிசமாக எண்ணெயில் தங்கி இருக்கிறது. எனவே, நாட்டில் மானியக் குறைப்பு, விலை அதிகரிப்பு என்று தலைக்கு மேல் பிரச்சினை அதிகம்.
புடினுக்கு நாட்டு மக்களை திசை திருப்பி தன்னை தொடர்ந்து ஹீரோவாக காட்டிக் கொள்ள, சிரியா நல்லதொரு பூச்சாண்டியாக இருக்கும்.
மற்றது, சிரிய ஆயுத சந்தையை ரஷ்யாவால் துறக்க முடியாது. அங்கு வியாபாரத்திற்கு நல்ல பருவமும் கூட. அஸாத் அரசு கட்டு கட்டாக ஆயுதம் கேட்டு வருகிறது.
விற்றால் டொலர் டொலராக பணம். எனவே அஸாத் அரசுக்கு ஆதரவாக நின்றால் தான் இந்த வியாபாரத்தை செய்ய முடியும்.
எனவே, சிரியா எக்கேடுகெட்டால் என்ன, எங்களது அரசியல், பொருளாதார, கெளரவ பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் போதும் என்பதே ரஷ்யாவின் உத்தமமாக கொள்கையாக இருக்கிறது.
எஸ். பிர்தெளஸ்