தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார்.
அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப் போராட்டங்களை முன்னொடுக்கும் நோக்கிலானது அல்ல.
மாறாக, தங்களுடைய அரசியல் ஆளுமைக் குறைபாட்டையும், பொறுப்பற்ற தனங்களையும் மூடி மறைப்பதற்கானது. ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், நேரடியாக தாக்கம் செலுத்திய அரசியல் பரப்பு முடிவுக்கு வந்து ஆறரை ஆண்டுகளாகிவிட்டது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் ஏற்ற இறக்கங்களோடு தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய அரசியலில் செலுத்திய ஆளுமை மிகப்பெரியது. அது, இறுதி முடிவுகளை எடுக்கும் வல்லமை பெற்றிருந்தது. அப்படிப்பட்ட தலைமையொன்றின் வெற்றிடத்தினை மீள் நிரப்புவது என்பது அவசரமாக முடியாத ஒன்று.
ஆனாலும், கடந்த ஆறாரை ஆண்டுகளில் அந்தப் பெரும் வெளியை, ‘தலைவர் மீண்டும் வருவார், ஆயுதப் போராட்டம் தொடரும்’ என்கிற யதார்த்தத்துக்கு முரணான பல போலியான நம்பிக்கைகளினால் நிரப்ப சில தரப்புக்கள் முனைந்தன.
அந்த முனைப்புக்கள் ஆரம்பத்தில் ஓரளவுக்கு வெற்றியைத் தேடித்தந்தாலும், காலம் செல்லச் செல்ல அது காணாமற்போனது. மக்களுக்கு உண்மை விளங்கத் தொடங்கியது. யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உரையாடல்களை மாத்திரம் நிகழ்த்திவிட்டு ஒதுங்கும் தரப்புக்கள் சில சூன்ய வெளியொன்றுக்குள் மாட்டிக் கொண்டது.
தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தி சில உணர்வுரைகளை ஆற்றிவிட்டு, ‘தங்களது பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன’ என்று இறுமாப்போடு இருக்க முடியாமல் போனது.
இப்போது ஏதாவது செய்தாக வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு அவசரமாக மீண்டுமொரு பிரபாகரனை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது.
அதனைத் தான் பல்வேறு வழிகளில் நிறைவேற்ற முனைந்து கொண்டிருக்கின்றார்கள். தலைவர் பிரபாகரனின் போராட்ட முறைமைகளில் தமிழ் மக்களுக்கு நிறைய ஒத்திசைவு உண்டு. அதேபோல, விமர்சனங்களும் உண்டு.
பெரும்பான்மையான தமிழ் மக்கள் ‘ஏக இறைவன்’ என்கிற ரீதியில் தலைவரை அணுகவில்லை.
மாறாக, ‘காதலும் (அன்பும்)- வெறுப்பும்’ கலந்த உணர்வுடனேயே அணுகினார்கள்.
அது, எப்படிப்பட்டது என்றால், குடும்பத்திலிருக்கும் கணவன்- மனைவிக்கு இடையிலான உறவுமுறை போன்றது. கணவன் – மனைவிக்கு இடையில் நிறையக் காதலும், சில தருணங்களில் வெறுப்பும், விமர்சனங்களும் எழுவதுண்டு.
ஆனால், முக்கியமான தருணங்களில் ஒருவருக்கு ஒருவர் ஒத்திசையாமல் அந்தக் குடும்பம் சீராக இயக்க முடியாது. வளரவும் முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தினை தலைமையேற்றதும், பிரபாகரன் தலைவராக உணரப்பட்டதும் அப்படித்தான். அதுதான், அவர் விட்டுச் சென்ற பெரும்வெளியை நிரப்ப முடியாமல் இருப்பதற்கான காரணமும் ஆகும்.
கடந்த வாரம் புலம்பெயர் தேசத்து தொலைக்காட்சியொன்றின் அரசியல் உரையாடல் நிகழ்ச்சியொன்றை பார்க்கக் கிடைத்தது.
சுமார் ஒரு மணிநேரம் நீண்ட அந்த நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
அதில், வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கேள்வி எழுப்புவதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடும் பகுதியும் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. கருத்துக் கூறியவர்களில் அதிகமானவர்கள், ஆரம்பத்திலேயே அதிக பரபரப்போடும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பேசத் தொடங்கினார்கள்.
அந்தப் பரபரப்பும் உணர்ச்சிவசப்பட்ட நிலையும் ஆற்றாமையின் போக்கிலானது. அல்லது, அரசியல் சதுரங்கத்தின் யதார்த்த களத்தினை உணர்ந்து ஆடுவதற்கான பெரும் அச்சம் சார்ந்ததாக இருந்தது.
கருத்துக் கூறியவர்கள், ஒன்றில் ஏக வசனத்தில் குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பின் மீது (எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைகள் மீது) சுமத்துவதில் குறியாக இருந்தனர்.
இல்லையென்றால், பழம்பெருமைகள் தொடர்பில் ஏதோவொன்றை ஒப்புவிப்பது தொடர்பில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
குறிப்பாக, ‘தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களின் நிர்வாகத்திறமையை வெளிநாடுகள் வியந்தன’ என்றார்கள். அதன்மூலம், தமிழர்களின் நிர்வாகத்திறன் சிறந்தது, பெருமை வாய்ந்தது என்று நிறுவ முயன்றார்கள்.
இன்னொரு பக்கம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அரசியலும், அதற்கான முனைப்பும் மிகவும் சரியானது, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று வாதிட்டார்கள்.
அவர் நீதியரசர், அவரின் அனுபவம் பெரிதென்றார்கள். கிட்டத்தட்ட முதலமைச்சரை அடுத்த பிரபாகரன் என்கிற உணர்நிலையை அவர்கள் இன்னொரு வடிவில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இவ்வாறான, வெளிப்பாடு புலம்பெயர் தேசத்தில் குறிப்பிட்டளவானர்களிடம் உண்டு. அவற்றை ஊடகபரப்பில் காண முடியும்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திறன் தொடர்பில் மக்களுக்கு பெரும் விமர்சனமுண்டு.
மாகாண சபைக்கான அதிகார வரம்புகள் எப்படிப்பட்டது. அதன் குறைபாடுகள் எப்படிப்பட்டது என்பது தொடர்பிலும் மக்களுக்கு தெளிவான புரிதல் உண்டு.
ஆனாலும், இருக்கின்ற சிறிய அதிகார வெளிக்குள் ஆற்றப்பட வேண்டிய அல்லது ஆற்றப்பட்டிருக்க வேண்டிய விடயங்கள் இன்னும் அதிகமானவை என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அது தொடர்பிலேயே வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திறன் தொடர்பில் விமர்சனங்களை மக்கள் கொண்டிருக்கின்றார்கள். மக்களிடம் விமர்சனமில்லை என்று யாராவது நிறுவ முனைவார்கள் என்றால் அது அபத்தமானது.
மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கு ஆதரவான வெளிநாடுகளோ, தரப்புக்களோ வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திறன் குறைபாடு தொடர்பில் கேள்வியெழுப்புவதாலோ, அல்லது, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் கேள்வியெழுப்புவதாலோ அவற்றை தமிழ் மக்கள் புறந்தள்ள வேண்டும் என்பதல்ல.
தனிப்பட்ட அரசியல் – இராஜதந்திர முனைப்புக்கள் சார்ந்தும் தவிர்த்தும் கூட வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
ஏன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புதிய தலைமையாக கொள்ளும் சில தரப்புக்களே கூட, அவர் நிர்வாகத்திறனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றன.
மாறாக, வடக்கு மாகாண சபையின் நிர்வாகக் குறைப்பாட்டினை மறைப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்து பெருமைகளைப் பேசுவதோ, எம்.ஏ.சுமந்திரனை திட்டித் தீர்ப்பதோ சரியான அரசியல் போக்கு அல்ல.
இந்த இடத்தில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எப்படியாவது அடுத்த பிரபாகரனாக்கிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களில் ஈடுபடும் தரப்புக்கள் தொடர்பிலும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஏனெனில், சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடுகள் அல்லது நிர்வாகத்திறன் தொடர்பில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு விமர்சனங்களை வைக்கக் கூடாது என்பதில் இந்தத் தரப்புக்கள் கரிசனை வெளிப்படுத்துகின்றன.
கடந்த பொதுத் தேர்தலின் போது சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த அரசியல் முடிவுகளுக்கு எதிராக, மக்கள் ஒருங்கிணைந்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதற்காக, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் எனும் நிலைப்பாட்டிலிருந்து அவரை நிராகரித்தாகக் கொள்ள வேண்டியதில்லை.
அவரை, முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராகவே மக்கள் இன்னமும் கொள்கின்றார்கள். மாறாக, அவரை பிரபாகரனாக்கிவிட்டு கடமைகளை புறந்தள்ளிவிட்டு செல்வதற்கு தயாராக இல்லை.
தலைவர் பிரபாகரனின் எழுச்சியும்- வீழ்ச்சியும் பெரும் அர்ப்பணிப்புக்கள் சார்ந்தவை. அவர் காலத்து கள யதார்த்தம் வேறு, இன்றைய கள யதார்த்தம் வேறு.
பிரபாகரன்களின் தேவை என்பது பொறுப்புப்பினைத் தட்டிக்கழிப்பதற்காக கோரப்படுகின்ற போது, அது அபத்தமான முடிவுகளை வழங்கும்.
தமிழ்த் தேசிய அரசியல் போராட்டக்களத்தில் நேரடியாக பங்களிக்கவில்லை என்கிற குற்றவுணர்ச்சி சார்பில் அல்லது, பொறுப்பற்ற தன்மைகளை நியாயப்படுத்தும் போக்கில் எந்தவொரு ஏக தலைமையும் உருவாக்கப்பட வேண்டியதில்லை.
உரிமைப் போராட்டங்கள் உண்மையான அக்கறையோடும், அரசியல் களமாடுதலுக்கான ஆளுமையோடும் உருவாக வேண்டும். அது, மக்கள் சார்பிலானதாக இருக்க வேண்டும்.
மாறாக, போலியான பிம்பங்கள் ஊடக மாயைகள் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. தென்னிலங்கை அரசியலில் ஆளுகை செலுத்த முனையும் தரப்புக்களில் பலவும் ‘பிரபாகரனின் மீள் வருகை அல்லது புலிகளின் உருவாக்கம்’ தொடர்பில் ஒரு போலியான பிம்பத்தை திருப்பத் திருப்ப உருவாக்கி வந்திருக்கின்றன.
தலைவர் பிரபாகரனை, இறுதி மோதல்களில் வீழ்த்திவிட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பும் கூட பிரபாகரனை வைத்து அரசியல் செய்வதை இன்னமும் நிறுத்தவில்லை.
சாதாரண சிங்கள குடிகளிடம் புலிக்கிலேசத்தை உருவாக்குவதில் குறியாக இருக்கின்றார்கள். அது, ஆட்சியதிகாரத்தைப் பெற்றுத்தருமென்று கருதுகின்றார்கள்.
இப்படிப்பட்ட நிலையொன்றில் மற்றொரு வடிவத்தையே, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அவசரமாக பிரபாகரன் ஒருவரை உருவாக்க நினைக்கின்றர்களும் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில், இரண்டுமே போலியானவை. பிம்பங்கள் சார்ந்தவை மட்டுமே.
-புருஜோத்தமன் தங்கமயில்-