இலங்கையில், எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் களஞ்சியப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முனைப்புகளை இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது.
திருகோணமலையில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்சியப்படுத்தி, அவற்றை விநியோகிப்பது பற்றிய திட்டங்கள், இரண்டு நாட்டு அரசாங்கங்களினதும் கலந்துரையாடலுக்குரிய விடயமாகியிருக்கிறது.
அண்மையில் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் நகரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, இந்தியாவின் பெற்றோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாபைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதில் கலந்துரையாடப்பட்ட முக்கியமான விடயம், திருகோணமலையில் இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் களஞ்சியங்களை அமைப்பது தான்.
ஏற்கனவே இந்தியன் ஒயில் கோப்பரேசன், திருகோணமலையில் எண்ணெய் களஞ்சியங்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திருகோணமலையில் அமைப்பதன் மூலம், தனது நடவடிக்கைகளை இலங்கையில் விரிவாக்கிக் கொள்ளவும், எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடவும் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.
இதுபற்றிய பேச்சுக்கள் இப்போது தான் தொடங்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதே இதுபற்றிய பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.
இலங்கையை பிராந்திய எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா உதவத் தயாராக இருக்கிறது என்று அப்போதே அறிவித்திருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இப்போது அதன்படி தான், திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு, களஞ்சியப்படுத்தல், விநியோகத்துக்கான தளத்தை உருவாக்க இந்தியா முனைப்புக் காட்டுகிறது.
திருகோணமலையில், சிறப்பு பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்கு, ஏற்கனவே இருநாடுகளும் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.
அந்த முதலீட்டு வலயத்தின் ஒரு அங்கமாக, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் அமைப்பதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது.
ஏற்கனவே சம்பூரில், இந்தியாவின் தேசிய அனல்மின் கழகமும், இலங்கை மின்சார சபையும் கூட்டுமுயற்சியாக 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையத்தை அமைக்க இணக்கம் கண்டிருக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2017ஆம் ஆண்டு முடிவடையும் வகையில், இந்த திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இதுவரையும் இந்த அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
இலங்கை தரப்பில் இழுபறிகள் காணப்படுவதால், இந்த கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியா இதனை விரைந்து ஆரம்பிப்பதற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
ஏற்கனவே, திருகோணமலைத் துறைமுகத்தை அண்டியதாக, சீனக்குடாவில் உள்ள பிரித்தானியர் காலத்து எண்ணெய்க் குதங்களை இந்தியா நீண்டகாலக் குத்தகைக்குப் பெற்றுப் பயன்படுத்தி வருகிறது.
இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, திருகோணமலைப் பிரதேசத்தையும், துறைமுகத்தையும் கிட்டத்தட்ட தனது முழுமையான செல்வாக்கிற்குள் கொண்டு வருவதே இந்தியாவின் திட்டம்.
திருகோணமலைத் துறைமுகம், மீது இந்தியாவுக்கு மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் கண் இருந்தது.
1980 களின் தொடக்கத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஒரு வெள்ளோட்டப் பயணத்தையும் மேற்கொண்டிருந்தது.
அதற்குப் பின்னர், அமெரிக்காவும், இலங்கையும் உறவுகளை பலப்படுத்திக் கொண்ட போது தான், அந்த உறவுகளை சிதைப்பதற்கு தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுத்து, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது இந்தியா.
1987இல், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், இந்தியா வடக்கு கிழக்கில் தனது படைகளை நிறுத்தியது. அதன் மூலம், அமெரிக்காவின் கனவு தகர்க்கப்பட்டது.
1990இல் இந்தியா தனது படைகளை விலக்கிக் கொண்டாலும், திருகோணமலையை யாருடைய கைகளிலும் விழுந்து விடாதபடி உன்னிப்பாக கவனித்து வருகிறது இந்தியா.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், திருகோணமலையின் மீது சீனாவின் கவனம் திரும்பிய போது, புதுடில்லி வெளிப்படையாகவே எச்சரித்து அங்கு விமானப் பராமரிப்பு தளத்தை அமைக்கும் சீனாவின் முயற்சியை முடக்கியது.
ஆனாலும், திருகோணமலையை பிற நாடுகளின் கண்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே, அங்கு தனது பொருளாதார முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது.
பெற்றோலிய வளங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் மட்டுமன்றி, அவற்றைக் கட்டுப்படுத்தும் மையங்களும், கொண்டு செல்லும் வழிகளும் எதிர்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்கவையாக இருக்கும்.
இதனை அடிப்படையாக வைத்தே சீனா தனது பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. ஜப்பானும் அதனைச் சார்ந்தே செயற்படுகிறது.
தமக்கான மூலப்பொருள் / பிரதானமாக / எரிபொருள் கிடைக்கும் மற்றும் தமது பொருட்களை சந்தைப்படுத்தும் வழியான, இந்தியப் பெருங்கடலில் தளங்களையும், துறைமுகங்களையும் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சீனாவின் கனவுத் திட்டம்.
ஜப்பானுக்கு கடல் கடந்த தளங்களை நிறுவும் திட்டம் இப்போதைக்கு இல்லாவிடினும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தி, அதனைச் சாத்தியமாக்க முனைகிறது.
எதிர்காலப் பாதுகாப்புத் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் எண்ணெய் வளக் கேந்திரங்கள், விநியோகக் கட்டமைப்புகளைச் சார்ந்தே வடிவமைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அதனால் தான் இந்தியா, திருகோணமலையை, தனது எண்ணெய் கேந்திர மையமாக மாற்ற முனைகிறது.
பாதுகாப்பானதும், போதிய ஆழம் கொண்டதுமான இயற்கைத் துறைமுகம், தேவைக்கும் அதிகமாகவே உள்ள- நன்கு உறுதியானதும், பழைமை வாய்ந்ததுமான எண்ணெய்க் குதங்கள் எல்லாமே, இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றன.
அதைவிட, இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் வசதிகளுக்காகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
போர் போன்ற சூழல்களின் போது, தனது நாட்டுக்கு வெளியே எண்ணெய் சேமிப்பு கட்டமைப்பு, விநியோக கட்டமைப்பு ஒன்றைப் பேணுவதும், இந்தியாவுக்கு உதவியாக இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்தியா திருகோணமலையின் மீது குறி வைத்திருக்கிறது.
சபுகஸ்கந்தையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஈரானிய எண்ணெயை மட்டும் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. அங்கிருந்து மசகு எண்ணெய் வருவது தடைப்பட்டால், எரிபொருளை வேறு இடங்களில் இருந்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தநிலையில் தான், இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கு இருக்கின்ற வாய்ப்புகளையும், இந்தியாவின் எதிர்கால எண்ணெய்த் தேவைகள், கப்பல் போக்குவரத்து வழிகளின் தன்மைகளைக் கருத்தில் கொண்டும், திருகோணமலை மீது குறிவைத்திருக்கிறது இந்தியா.
திருகோணமலையை பிராந்திய எண்ணெய் கேந்திரமாக மாற்ற இந்தியா, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறது.
ஏனென்றால், இது இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு உதவக் கூடிய திட்டங்களில் ஒன்றாகும்.
எனவே, இலங்கையில் தான் செய்யும் முதலீடு வருமானத்தை ஈட்டித் தருமா என்று கூடச் சிந்திக்காமல், பெருமளவில் நிதியைக் கொட்டவும் தயாராக இருக்கிறது இந்தியா. காரணம், திருகோணமலையின் கேந்திர அமைவிடம் தான்.
ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு சிறப்பு முதலீட்டு வலயம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், திருகோணமலை மீதான இந்தியாவின் கவனமும் கரிசனையும் இன்னும் அதிகரிப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.
-என்.கண்ணன்