தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னுடைய சிதைவுக் காலத்தின் முக்கிய கட்டத்தை அடைந்து நிற்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அகற்றத்துக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்தின் பிரதான ‘குறைநிரப்பு’ தரப்பாக மக்களினால் தொடர்ந்தும் முன்மொழியப்பட்டு வந்த த.தே.கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற இன்றைய குழப்பகரமான நிலையும் அதன் போக்கிலான சிதைவும் சிக்கலானதுதான்.
இப்படியொரு நிலைமை ஏற்படுமென்று மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது தொடர்பில் சலிப்படைவார்கள். அது தேவையற்ற நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.
தீர்க்கமான அரசியல் முடிவுகளின் அடிப்படையில், கட்டமைக்கப்படாத கூட்டுக்களும் அணிகளும் தன்னுடைய நீட்சி தொடர்பில் எந்தவித நம்பிக்கையையும் கொள்ள வேண்டியதில்லை.
அதுபோலவே, தேர்தல்களை வெற்றி கொள்வதற்காக மாத்திரம் ஓரணியில் இணைந்திருப்பதும் எந்தவித நியாயப்பாடுகளின் போக்கிலும் வெற்றிகரமானது அல்ல.
அப்படியானதொரு கட்டத்தினை த.தே.கூ அடைந்து நீண்ட காலமாகின்றது. அப்படிப்பட்ட நிலையில், அதன் சிதைவினை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாதுதான்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, மேதினத்தை இம்முறை யாழ்ப்பாணத்தில் பெருமெடுப்பில் நடத்தியது.
த.தே.கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் மாதிரியான தோற்றப்பாடு மேம்போக்காக கட்டமைக்கப்பட்டிருந்தாலும், முழுவதுமாக தமிழ் அரசுக் கட்சியின் வல்லமையை வெளிப்படுத்துவதற்கான கூட்டமாகவே நடத்தப்பட்டிருந்தது.
சபை நாகரிகத்துக்காகத் தானும், பங்காளிக் கட்சிகள் எவையும் அழைக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று தனிக் கட்சியொன்றின் மே தினக் கூட்டமாகவே நடந்து முடிந்திருக்கின்றது.
தேர்தல் கூட்டணிகளில் பங்கேற்கும் கட்சிகள் தனித்தனியே மே தினக் கூட்டங்களை நடத்துவது வழமையானதுதான்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை தனித்த அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு, அதன் சார்பில் தீர்மானங்களை அறிவித்துக் கொண்டு தனிக் கட்சியாக தமிழ் அரசுக் கட்சி, மே தினக் கூட்டத்தினை நடத்தியதுதான் இங்கு சிக்கலானது.
தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பிரதான உரையை ஆற்றியிருந்த இரா.சம்பந்தன், ‘தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையாகச் செயற்படுமாக இருந்தால், 2017ஆம் ஆண்டு புதியதொரு சூழலில் மே தினத்தைக் கொண்டாட முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
த.தே.கூட்டமைப்புக்குள் கூச்சல்களும் குழப்பங்களும் கழுத்தறுப்புக்களும் நீடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
ஆனால், தொடர்ச்சியாக பெருமெடுப்பில் ஒருங்கிணைந்து வந்திருக்கின்ற தமிழ் மக்களிடையே ஒற்றுமையின்மை காணப்படுகின்றது என்ற மாதிரியான தோற்றப்பாடு கொண்ட உரையொன்றை ஆற்றவேண்டிய தேவை, இரா.சம்பந்தனுக்கு ஏன் ஏற்பட்டது என்கிற கேள்வி எழுகின்றது.
த.தே.கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், அதன் உறுதிப்பாடு- ஒருங்கிணைவு சார்ந்து அவர் இயங்குவதற்கான ஆர்வத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.
மாறாக, தனியொரு கட்சியின் மேலோங்குகை சார்ந்து, அதற்கான ஒத்துழைப்புக்களின் போக்கில் பயணிப்பதானது அரசியல் முரணானது.
த.தே.கூட்டமைப்பினை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பிலான பேச்சுக்களின் போது உடன்படாத தமிழ் அரசுக் கட்சி, இன்றைக்கு ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற வாக்குக் கொட்டும் அடையாளத்தை விட்டுத் தரவும் தயாராக இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வந்ததும் கூட அந்தக் கட்சியின் ஏகாந்தமான, எகத்தாள அரசியல் முடிவுகளுக்கு காரணமாகியிருக்கின்றது.
ஏனெனில், எதிர்காலத் தேர்தல்களிலும் தமிழ் அரசுக் கட்சி, தன்னுடைய வீட்டுச் சின்னத்தை முன்வைத்து மக்களிடம் செல்லும். மக்களும் பழைய பாசத்தில் வாக்களிக்கக் கூடிய நிலையும் உண்டு.
மாவை சேனாதிராஜாவுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை அடைய வேண்டும் என்கிற போட்டியில் எம்.ஏ.சுமந்திரனும் சிவஞானம் சிறிதரனும் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊடக பலத்தினை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய உணர்வூட்டல்களின் மூலம் அந்த இடத்தினை அடைந்துவிடலாம் என்பது தொடர்பில் சிவஞானம் சிறிதரன் பெரும் ஆர்வம் கொண்டிருக்கின்றார்.
அதற்கான வேலைத்திட்டங்களின் போக்கில் சில காலமாகவே ஈடுபட்டும் வந்திருக்கின்றார். அந்த நடவடிக்கைகளில் பலர் வெட்டி வீழ்த்தப்பட்டும் இருக்கின்றார்கள்.
ஆனால், எம்.ஏ.சுமந்திரனைப் பொறுத்தளவில், தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து எதிரலைகளைத் தோற்றுவித்து, அதிலிருந்து வெற்றிக்கனிகளைப் பறிக்கும் உத்தியையே கையாண்டு வந்திருக்கின்றார்.
அதாவது, தமிழ்த் தேசிய உணர்வுக்கு அல்லது அது நம்பிக்கொண்டிருக்கும் சில விடயங்களோடு முரண்பட்டுக் கொண்டு யதார்த்த அரசியல் நிலைப்பாடுகள் சொல்லும் செய்தியை பேசுதல்.
அதனூடு, எதிரலைகள் பெருமளவில் எழும்போது, அந்த அலைகளைக் கடத்தல் என்பது, ஆளுமை பெற்ற அரசியல்வாதியாக, தலைவனாக தன்னை அடையாளப்படுத்தும் என்கிற ரீதியிலானது அது.
அவரின் அண்மைய வெற்றிகள் அல்லது அடைவுகள் அனைத்துமே, அதன் போக்கில் பெற்றுக்கொள்ளப்பட்டதுதான்.
அவரின் எதிர்பார்ப்புத் தெரியாமல் எதிரலைகளைத் தோற்றுவித்து அதற்குள்ளேயே அடிபட்டுப் போனவர்கள் பலர்.
அதில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முக்கியமானவர். இன்னொருவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
ஆக, தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியின் போக்கில் எம்.ஏ.சுமந்திரன் இரண்டாம் மட்டத் தலைவர்களின் அபிமானத்தையும் ஆதரவினையும் பெற்றுக் கொள்வதில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றார்.
முரண்டுபிடிக்கின்றவர்களை, அவர்கள் போக்கில் சென்று தன்னுடைய பக்கத்துக்கு இழுத்து வருவதிலும் வெற்றிபெற்று வருகின்றார். இரா.சம்பந்தனும், தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவம் ஆளுமை மிக்க ஒருவரின் கையில் சென்று சேரவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக, சட்டத்தரணிகள் மாத்திரமே அரசியல் செய்வதற்கு இலாயக்கானவர்கள் என்கிற தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்பகால மனநிலையின் போக்கிலிருந்து யோசிக்கின்றார்.
அதுதான், எம்.ஏ.சுமந்திரனை பல முக்கியஸ்தர்களைத் தாண்டி, கட்சியின் அதிகார பீடத்துக்குள் தனக்கு அடுத்த நிலையில் முடிவுகளை எடுக்கும் நபராகக் கொண்டுவருவதற்கும் காரணமானது.
இப்படிப்பட்ட நிலையில்தான், தமிழ் அரசுக் கட்சியின் மே தினக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடையாளத்தை வேறு தரப்பிடம் விட்டுக் கொடுக்காமல் நடத்தப்பட்டிருக்கின்றது.
அந்தக் கூட்டத்தில் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர் வெளிநாடு சென்றிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
அத்தோடு, எம்.ஏ.சுமந்திரனே தமிழ் அரசுக் கட்சியின் மேதினத் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் என்று தெரிவித்து, வாசித்துமிருந்தார்.
குறித்த மே தினக் கூட்டம், இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் என்கிற ஆளுமைகளை முன்னிறுத்தியே நடத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்கிற போதிலும், அவருக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த இடத்தில், கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளோட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமிழ் அரசுக் கட்சியை எதிர்கொள்வதில், குறிப்பாக, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் என்கிற அதிகாரபீடத்தினை எதிர்கொள்வதில் பெரும் பின்னடவைச் சந்தித்து நிற்கின்றன.
குறிப்பாக, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு, த.தே.கூ என்ற அடையாளத்தினை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் பெரும் ஆர்வமுண்டு. ஆனாலும், அது தன்னுடைய கைகளை மீறிச் சென்றுவிட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஓரளவுக்கு தமிழ் அரசுக் கட்சியோடு மல்லுக்கட்டி விடயங்களை வெற்றி கொண்டு வந்த கட்சியாக ஈ.பி.ஆர்.எல்.எப்-இனைக்கொள்ள முடியும்.
ஆனால், கடந்த பொதுத்தேர்தலில் சுரேஷ் பிரேமச்சந்திரனைத் தோற்கடித்ததன் மூலம், அந்தச் சிக்கலையும் தமிழ் அரசுக் கட்சி வெற்றிகொண்டு விட்டது.
புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பெரிய எதிர்வினைகளை ஆற்றுபவர் அல்லர். அவர், ‘சம்பந்தன் அண்ணன், மாவை அண்ணன்’ என்கிற மொழிநடைகளோடு விடயங்களைக் கடக்க நினைக்கின்றார்.
அதாவது, அவர்களை எதிர்ப்பது தொடர்பில் எந்தவித முனைப்புக்களையும் எடுப்பதில்லை. அதுபோலவே, ரெலோவும் தமிழ் அரசுக் கட்சியைப் பகைத்தால் தம்முடைய எதிர்காலம் அடிபட்டுப் போய்விடும் என்கிற விடயத்தை முன்னிறுத்தி மௌனியாக மாறிநிற்கின்றது.
காலம் பூராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்தினூடு தேர்தல்களை வெற்றிகொள்ள வேண்டும் என்கிற நிலைக்குள் நிற்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், தமிழ் அரசுக் கட்சி எந்தவித எதிர்வினைகளையும் ஆற்றாமல் ஒட்டிக் கொண்டிருக்கின்ற கட்சிகளை, ஒரு சாக்குக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற அடையாளத்துக்குள் வைத்துக் கொண்டிருக்க விரும்புகின்றது.
எதிர்வினையாற்றும் மாற்றுக் கட்சிகளின் தலைவர்களையும் அதிகாரங்களற்ற தரப்புக்களாக மாற்றி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் மீண்டும் தன்னை பிரதான தரப்பாக மாற்ற எண்ணி நிற்கின்றது.
-புருஜோத்தமன் தங்கமயில்-