மீண்டும் சர்ச்சை: மெர்லின் மன்ரோ எனும் ஹொலிவுட் ஔிச்சுடர் அணைந்ததா அல்லது அணைக்கப்பட்டதா?
ஹொலிவுட் உலகின் ஔிச்சுடராக வர்ணிக்கப்பட்டவரும் அமெரிக்க அரசியலின் பின்புலத்தில் முக்கிய கதாப்பாத்திரமாகத் திகழ்ந்தவருமான புகழ்பெற்ற நடிகை மெர்லின் மன்ரோவின் மரணத்தில் மீண்டும் சர்ச்சை ஆரம்பித்துள்ளது.
CIA இன் இரகசிய உளவுப்பிரிவு அதிகாரியென தன்னைக் கூறிக்கொள்ளும் ஒருவர் மெர்லின் மன்ரோவைத் தாம் தான் கொலை செய்ததாக மரணத்தருவாயில் கூறியதால் அது தொடர்பான சர்ச்சை மீண்டும் கிளம்பியுள்ளது.
Martin Edward Mortensen மற்றும் Gladys Pearl Baker ஆகியோரின் மகளாவார் மெர்லின் மன்ரோ.
இவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் அழகுக்கலை நிபுணராகப் பிரசித்தி பெற்றதுடன், மெர்லின் மன்ரோ என தன்னுடைய பெயரை மாற்றி ஹொலிவுட்டில் பிரவேசித்தார்.
ஹொலிவுட் திரையுலகில் இவருடன் காதல் வயப்பட்ட பலர் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.
நடிகர் மாலன் பென்ரோ, பேஸ்பால் வீரர் ஜோ டிமெகியோ, நடனக் கலைஞரான ஆர்த்தர் மிலர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடி மற்றும் அவரது சகோதரர் ரொபட் கென்னடி ஆகியோர் மெர்லின் மன்ரோவைக் காதலித்த பிரபலங்களாவர்.
1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி மெர்லின் மன்ரோ உயிரிழந்தார்.
அதிக செறிவு கொண்ட மாத்திரையை உட்கொண்டதே உயிரிழப்புக்குக் காரணமென மெர்லின் மன்ரோவின் மரணப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக அந்த மருந்தைப் பயன்படுத்தினாரா அல்லது வேறு யாராவது பலவந்தமாக மருந்தைக் கொடுத்து அவரைக் கொலை செய்தனரா என்பது இன்றும் சர்ச்சையாகவே இருக்கிறது.
உயிரிழந்த நிலையில் அவருடைய ஒரு கை தொலைபேசியை நோக்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், CIA எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவராக தன்னைக் கூறிக்கொள்ளும் நோர்மன்ட் ஹொர்ஜ் என்பவர் கூறியுள்ள கருத்து மன்ரோவின் மரணத்தில் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
78 வயதான குறித்த புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் மரணத்தின் இறுதித்தருவாயில் பல விடயங்களை ஒப்புவித்துள்ளார்.
1959 ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமது அமைப்பின் ஆலோசனைக்கு ஏற்ப 37 பேரைக் கொலை செய்ததாகவும் அவர்களில் மெர்லின் மன்ரோ என்ற பெண்ணும் அடங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
CIA அமைப்பில் தான் 41 வருடங்கள் பணத்திற்காகக் கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் காரணமாக தான் மௌனமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே மெரலின் மன்ரோவைக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மெர்லின் மன்ரோவின் உயிரிழப்புக்கு அதிக செறிவு கொண்ட ஒருவகை மருந்தே காரணம் என்பது உறுதியாகும் வகையில் தமது அமைப்பின் உயர் அதிகாரியொருவர் திட்டம் தீட்டியதாக நோர்மன்ட் ஹொர்ஜ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட ஃபிடல் கெஸ்ட்ரோவுடன் மெர்லி்ன் மன்ரோ தொடர்பு வைத்திருந்ததால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தக்கூற்றின் உண்மைத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
நோர்மன்ட் ஹொர்ஜ் தனக்கு கட்டளையிடும் அதிகாரியென குறிப்பிட்டவரும் மற்றைய மூவரும் தற்போது உயிருடன் இல்லாததே அதற்குக் காரணமாகும்.
இதேவேளை, நோர்மன்ட் ஹொர்ஜின் கூற்றை அறிக்கையிடுவதற்காக அனைத்து சர்வதேச ஊடகங்களும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் புகைப்படத்தையே பயன்படுத்தியுள்ளதாக கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நபர் மைக்கல் டிரில் எனவும் அவர் உயிரிழப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவருடைய மகள் குறித்த நிழற்படத்தை எடுத்ததாகவும் கார்டியன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி வாகன விபத்தொன்றில் பலியான இளவரசி டயானா தொடர்பாகவும் இதுபோன்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர் முஸ்லிம் இனத்தவரான டொடி அல்பிராயிடைக் காதலித்ததாகவும் இது அரச குடும்பத்திற்கு இழுக்கு என்பதால் பிரித்தானிய மற்றும் அமெரிக்க இரகசிய உளவுப்பிரிவினர் அவரைக் கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஹொலிவுட் ஔிச்சுடர் அணைந்ததா? அல்லது அணைக்கப்பட்டதா?