லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள சாதிக் கானுக்கு விதிவிலக்கு அளித்து அவர் அமெரிக்காவுக்குள் நுழைய  அனுமதி அளிக்கப்படுவார் என அந் நாட்டின் குடியரசு கட்சி ஜனாதி­ப­தி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ட்ரம்ப் அளித்த செவ்­வி­யில் , “லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விடயம். எனக்கு அதில் மகிழ்ச்சி.

அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர் பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என நினைக்கிறேன்.

அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படும் என நான் கூறியிருந்தாலும் லண்டன் மேயருக்கு மட்டும் விலக்கு அளிப்பேன். எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கு இருக்கும் தானே.

அப்படித்தான் லண்டன் மேயருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிப்பதும்” என கூறி­யுள்­ளார்.

நவம்பர் மாதம் நடைபெறப் போகும் ஜனா­தி­பதி தேர்தலில் ட்ரம்ப் ஒரு­­வே­ளை வெற்றி பெற்­றால், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதைத் தடை செய்யப் போவதாக சூளுரைத்திருப்பதை நிறைவேற்றுவதற்கு முன்னரே, அமெரிக்காவுக்கு ஒரு முறை சென்றுவிடப் போவதாக புதிய லண்டன் மேயர் சாதிக் கான் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply