அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பாட்டி ஒருவர், தனது திடகாத்திரமான தோற்றத்தினால் வியக்க வைக்கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வயதானவர் போன்று காணப்படுகிறார்.
எனினும் இவருக்கு 41 வயதான ஒரு மகள் மற்றும் 40 வயதான ஒரு மகனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 3 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.
உடற்பயிற்சியில் ஈடுபடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர் வென்டி இடா. 57 கிலோகிராம் எடையுடன் இவர் காணப்படுகிறார். துன்புறுத்தல்கள் மிகுந்த தனது திருமண வாழ்க்கை முடிவுற்றதன் பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தாராம் இவர்.
பெண்களுக்கான உடற்கட்டுப் போட்டிகளில் ஏராளமான பரிசுகளை வென்ற வென்டி இடா கின்னஸ் சாதனைகளையும் படைத்தவர். தனது திருமண வாழ்வின்போது கணவரின் பெரும் துன்புறுத்தல்கள், கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறும் வென்டி இடா, 43 ஆவது வயதில் அத் திருமண பந்தத்திலிருந்து விடுபட்டார்.
அப்போது சுமார் 89 கிலோகிராம் எடையுடையவராக அவர் காணப்பட்டாராம்.
‘தொல்லைகள் மிகுந்த எனது திருமண வாழ்விலிருந்து தப்புவேன் என நான் எண் ணியிருக்கவில்லை.
பின்னர் அதிலிருந்து விடுபட்டவுடன் எனக்கு ஏதேனும் மாற்றம் தேவையாக இருந்தது. எனது கவனத்தை திசைதிருப்பி எனது தலையை தெளிவாக்கிக் கொள்வதற்காக நான் உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன்’ என்கிறார் வென்டி இடா.
‘உடற்பயிற்சிக்கு சிறந்த பலன் கிடைத்தது. முன்னர் நான் 89 கிலோகிராம் எடையுடன் இருந்தேன்.
இப்போது எனக்கு 64 வயதாகுகிறது. 57 கிலோகிராம் எடையைக் கொண்டுள்ளேன். இந்த வயதில் இது சிறந்த எடை.
நான் எனது வயதை கூறும்போது அதை நம்புவதற்கு மக்கள் மறுப்பார்கள்.
நான் 30களின் ஆரம்பத்தில் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
எனவே நான் கூறுவது உண்மை என்பதை நிரூபிப்பதற்காக நான் எனது சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பிப்பேன்.
22 வயதான பலர் கூட நான் அவர்களின் வயதை ஒத்தவள் என எண்ணுகின்றனர். 43 வயதான எனது மகள் ஸ்கையும் நானும் வீதியில் செல்லும் போது நாம் இருவரும் சகோதரிகள் எனக் கருதுபவர்களும் உள்ளனர்.
இப்படி அடிக்கடி நடக்கிறது. நான் சிரித்துவிட்டு எனது கதையைக் கூறுவேன். அவர்களும் இதை செய்யலாம் என நான் அவர்களிடம் நான் கூறுவேன்.
43 வயதுக்கு மேல் நான் உயிர் வாழ்வேன் என நான் முன்னர் எண்ணவில்லை. இப்போது நான் ஏனைய பெண்களுக்கு உதவ விரும்புகிறேன்’ என வென்டி இடா கூறுகிறார்.
தினமும் இரு மணித்தியாலங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் வென்டி இடா. உடற்பயிற்சிப் பயிற்றுவிப்பாராளராகவும் விளங்குகிறார்.