தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகே கச்சத்தீவில் புதிய தேவாலயம் கட்ட வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்து விட்டு, அங்கு புதிய தேவாலயம் கட்ட இலங்கை அரசு திட்டமிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி பற்றி உங்கள் தனிப்பட்ட கவனத்துக்கு உடனடியாக கொண்டு வருவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இலங்கை அரசின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த தீவுக்கு சென்று தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி வருவதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த தேவாலயத்தை இடித்து சீரமைப்பது குறித்து தமிழக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் இலங்கை அரசு எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. இது அவர்களிடம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர பகுதி மீனவ சமுதாய மக்களிடம் கணிசமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அவர்கள் ஆண்டுதோறும் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பல நூற்றாண்டுகளாக சென்று வருகிறார்கள். அது அவர்களது ஆன்மிக கலாச்சாரத்தின் ஒரு பாரம்பரிய சின்னமாக உள்ளது.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் தங்களது பாரம்பரிய மீன்பிடி தொழில் உரிமையை நிலைநாட்ட, இலங்கையிடம் இருந்து இந்தியா அரசு கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்திய அரசு 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
அன்று முதல் கச்சத்தீவை சுற்றி மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்து விட்டனர்.
கச்சத்தீவை திரும்பப் பெறக்கோரி 2008-ம் ஆண்டு நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு (எண். 561/2008) தொடர்ந்தேன். அந்த வழக்குடன் தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு தன்னையும் இணைத்துக் கொண்டது.
1960-ம் ஆண்டு பெருபரி வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியையும் மற்றொரு நாட்டுடன் இணைக்க வேண்டுமானால், அது சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மூலமாக மட்டமே நடைபெற வேண்டும் என்று தெளிவுபட கூறியுள்ளது.
கச்சத்தீவு அத்தகைய சட்டப்பூர்வமான ஒப்பந்தப்படி மாற்றம் செய்யப்படவில்லை.
எனவே இந்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்தது சட்ட விரோதமானது. அது செல்லாது.
1974 மற்றும் 1976-ம் ஆண்டுகள் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு, கச்சத்தீவை திரும்பப் பெறுவது மட்டுமே தமிழக மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிப்பதை உறுதி செய்வதாக இருக்கும்.
கச்சத்தீவில் கடந்த பிப்ரவரி மாதம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடந்த போதே, அந்த ஆலயத்தை சீரமைக்கும் பரிந்துரைகள் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.
அப்போது தமிழக மீனவர்கள், இலங்கை பிரதிநிதிகளிடம், “கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம் இந்தியா-இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பாரம்பரிய சின்னமாக உள்ளது. எனவே சீரமைப்பு பணியை இரு நாட்டு மீனவர்களும் சேர்ந்து செய்ய வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்கள்.
இந்த நிலையில், கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட, அதில் முக்கிய அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இலங்கை அரசு தன்னிச்சையாக முடிவு செய்து நடந்து கொண்டுள்ளது. இலங்கை அரசு மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.
கச்சத்தீவில் இலங்கை அரசால் தன்னிச்சையாக புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்படுமானால், எதிர்காலத்தில் அந்த புனித அந்தோணியார் ஆலயத்துக்கு சென்று வழிபடும் உரிமையை தடுத்து, இடிக்கப்பட நேரிடலாம் என்று இந்திய மீனவர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
எனவே மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவில் புதிய புனித அந்தோணியார் ஆலயம் கட்டும் முன்பு தமிழ்நாட்டு மீனவர்களிடம் கலந்து பேச வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களிடம் பேசிய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும் தமிழன மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கச்சத்தீவில் அந்தோணியார் கட்டப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசு ஏற்கும்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.