வடமாகாண சபையின் வேண்டுகோளும் விக்கினேஸ்வரனின் கோரிக்கையும் தமிழ் மக்களுக்கு மயானபூமி வேண்டும் என்பதைப் போன்றதேயாகும். தமிழ்மக்களை ஒதுக்கிவைக்க அரசாங்கம் தயாரில்லை.
அனைவரும் தயாராக இருந்தால் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலம் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணலாம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
புலிகளினால் கடத்தப்பட்ட தமிழர்களை இராணுவ முகாமுக்குள் தேடினால் கிடைக்கமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கை யில்
வடமாகாண சபையின் வேண்டுகோளும் வடமாகாண முதல்வரின் கோரிக்கையும் தமக்கு மயான பூமியோன்று வேண்டும் என்பதேயாகும்.
ஆனால் எமக்கு மயான பூமி வேண்டாம். நாம் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை. சமஷ்டி என்பது தீர்வும் அல்ல.
எனினும் ஒற்றை ஆட்சி அல்லது சமஷ்டி ஆட்சி என்ற பிரதான இரண்டு விதிகளின் அடிப்படையை மட்டுமே அனைவரும் கவனத்தில் கொண்டு வருகின்றோம்.
எனினும் இவைதவிர மூன்றாவது தீர்வு ஒன்று இருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த தீர்வு தொடர்பில் சிந்திக்க நாம் யாரும் தயாராக இல்லாததுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அனைவரும் தயாராக இருந்தால் ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலம் எழுந்துள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.
புலிகளை நினைவு கூரும் விவகாரம்
வடக்கில் புலிகளை நினைவுகூரப் போவதாக எந்த தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை, எனினும் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது.
புலிகளின் பெயரையோ அல்லது புலிகளின் தலைவர்களின் பெயர்களையோ வைத்து எதையும் மேற்கொள்ளாது உயிர்நீத்த மக்களுக்கு எந்தத் தடைகளும் இன்றி அஞ்சலியை செலுத்த அனுமதி உள்ளது.
எனினும் புலிக் கதைகளை கூறிக்கொண்டு ஒருசிலர் வடக்கில் வலம் வரலாம். ஆனால் அத்தகைய செயற்பாடுகள் எல்லாம் பாதுகாப்பை சீர்குலைக்கும் என கருதக் கூடாது.
அவர்களில் ஒருசிலர் இன்னும் பழைய நிலைப்பாட்டில் உள்ளனர். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தை ஏன் அவர்களால் நினைவு கூர முடியவில்லை.
ஏனெனில் அவர்களின் மனங்களில் இன்றும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும் வடக்கை பொறுத்தவரையில் பெரும்பாலான தமிழ் மக்கள் தாம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே ஆசைப்படுகின்றனர். ஆகவே மீண்டும் புலிக் கதைகளை கூறி மக்களை குழப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அனைவரது கருத்துகளுக்கும் அங்கீகாரம்
ஜனநாயகம் என்பது அனைவரது கருத்துகளுக்கும் அங்கீகாரம் கொடுப்பதாகும். ஆகவே அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை கேட்பதில் தவறில்லை.
ஆனால் குழப்பங்களை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவைகள் பல உள்ளன.
அவர்களின் வாழ்வதாராம், பொருளாதாரா ரீதியில் அவர்களை மேம்படுத்த வேண்டிய தேவை, அவர்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய தேவைகள் பல உள்ளன. அதேபோல் காணாமல்போன மக்களின் நிலைமைகள் என்னவென்பது தொடர்பிலும் அரசாங்கம் கண்டறிய வேண்டும்
தவறான அபிப்பிராயம்
தமிழ் மகள்களை பொறுத்தவரையில் அரசாங்கமும், இராணுவமும் மட்டுமே தமிழ் மக்களை கடத்தினர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசாங்கமே காரணம் என்ற நிலைபாட்டில் உள்ளனர்.
ஆனால் விடுதலைப்புலிகளும் ஏனைய சில ஆயுதக் குழுக்கள், அங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் இந்திய அமைத்திப்படை காலத்திலும் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டனர்.
அவர்களையெல்லாம் இராணுவ முகாமுக்குள் வந்து தேடினால் அவர்கள் கிடைக்கமாட்டார்கள். ஆகவே அதையும் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வெசாக் கொண்டாட்டம்.
மேலும் வடக்கில் இம்முறை வெகு விமர்சையாக வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. பெளத்த கொண்டாட்டமாக இருந்தாலும் தமிழ் மக்களின் பூரண ஆதரவுடனும் அனைத்து மதத் தலைவர்களின் அங்கீகாரத்துடனும் இது நடைபெற்றுகின்றது.
இந்நிகழ்வுகளில் பொதுமக்களுக்கு நிவாரணப்பணிகளை செய்வதுடன் இராணுவம், பொலிஸ் ஆகியோரின் ஆதரவுடன் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு இலவச உணவு, அத்தியாவசிய பொருட்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.