மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 114.7 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணைமாக பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அன்றாட தொழிலில் ஈடுபபடுவோர் தொழிலின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, நாவற்குடா உட்பட பல இடங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்றைய தினம் நடைபெறவிருந்த பல பொது நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. தனியார் வகுப்புக்களும் நடைபெறவில்லை.
தொடர்ந்தும் மழை பெய்வதால் பிரதான வீதிகளில் இருள் மயமாக காட்சி தென்படுகிறது. கடுமையான காற்றும் வீசிவருகின்றது. இதனால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த வண்ணமாக காணப்படுகின்றது.
தற்போது பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக வீதியோரங்களில் நீர் இரு பக்கமும் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் போக்குவரத்து பல பிரச்சனைக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அத்தோடு சில வீதி ஓரங்களின் அமைக்கப்பட்டுள்ள வடிகாண்கள் சீராக இன்மை காரணமாக நீர்கள் வீதிகள் தேங்கி நிற்கக் கூடிய நிலையும், மதகு வழியாக ஓடிச் செல்வதற்கான வழி இன்மையும் காணப்படுகின்றது.
காற்றுடன் கூடிய மழை காணரமாக பல மரங்கள் மற்றும் குடிசை வீடுகள், வேலிகள், தற்காலிக கொட்டகைகள் உட்பட பல சேதமடைந்து காணப்படுகின்றது.
விவசாயிகள் நீர் இன்மையால் வேளான்மை பாதிக்கப்பட்டு அழிந்து போகும் நிலையில் இருந்தது. தற்போது இரண்டு நாட்களாக மழை பெய்தமையினால் தங்களுடைய வேளாமைக்கு நீர் கிடைத்துள்ளதாகவும், இம்மழை தொடருமானால் தங்கள் வேளான்மை பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறு நிலவுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் 114.7 மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாத காலமாக தொடர்ந்து நிலவிய கடும் வெப்பி நிலையின் காரணமாக கவலை தெரிவித்தவர்களிடம் மழை பெய்துள்ளதனால் மகிழ்ச்சியான மன நிலை காணப்பட்டது.