நெல்லையில் காதல் விவகாரத்தில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘காதல் ஜோடி் நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் விசுவநாதன்(வயது 24). இவர் நெல்லை-நாகர்கோவில் ரெயில் தண்டவாளத்தில் உள்ள ஒரு ரெயில்வே கேட்டில் ‘கேட் கீப்பராக‘ வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன் மகள் காவேரிக்கும் காதல் மலர்ந்தது. காவேரி பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே இந்த காதல் மலர்ந்துள்ளது.
தற்போது என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு காவேரி வீட்டில் இருந்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீட்டை விட்டு ஓட்டம் இந்த நிலையில் விசுவநாதனும், காவேரியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வெளியூருக்கு சென்று விட்டார்கள்.
இது தொடர்பாக காவேரியின் தந்தை சங்கரநாராயணன், தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் காவேரியை விசுவநாதன் கடத்திச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான காதல் புதுமண ஜோடியை தேடி வந்தனர்.
வெட்டிக்கொலை
இதற்கிடையில் வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வரும் விசுவநாதனின் அக்காள் கல்பனா(32) வீட்டுக்கு வந்த சங்கரநாராயணன், காதல் ஜோடியை நெல்லைக்கு வரவழைக்குமாறு கல்பனாவிடம் மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக சங்கர் மீது பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கல்பனா குடும்பத்தினர் புகார் செய்தனர். இந்த புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சங்கரநாராயணன் நேற்று மதியம் இளங்கோ நகருக்கு சென்றார். அங்கு கல்பனாவை சந்தித்து, தனது மகளை உடனடியாக நெல்லைக்கு வரவழைத்து தன்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக கல்பனாவுக்கும், சங்கரநாராயணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சங்கரநாராயணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கல்பனாவை சரமாரியாக வெட்டினார். இதில் கல்பனா ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.
உடனே சங்கரநாராயணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கல்பனா பரிதாபமாக இறந்தார். கொலை செய்யப்பட்ட கல்பனாவுக்கு திருமணமாகி 1½ வயதில் ஒரு குழந்தை உள்ளது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த கல்பனாவின் உறவினர்கள் மற்றும் இளங்கோ நகர் பகுதி மக்கள் வடக்கு புறவழிச்சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரதீப்குமார், ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த பிரச்சினை தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தகுந்த பாதுகாப்பும் அளிக்கவில்லை.
இதுவே இந்த கொலை நடக்க காரணம் ஆகும். அதனால் நாங்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர். அதைக்கேட்ட போலீஸ் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தினார்கள். பின்னர் அவர்களிடம் குற்றவாளியை உடனடியாக கைது செய்வோம் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
வலைவீச்சு
இந்த கொலை தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.