சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால் மக்களின் அவல நிலைமை தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளது.
மழை வீழச்சி குறைவாக பதிவான போதிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடங்களில் நீர் இன்னமும் வடிந்தோடவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் வரைக்கும் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை 58 பேர் வரை அதிகரித்துள்ளன. மேலும் 134 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 3 இலட்சத்து 6 ஆயிரத்து 773 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதன்பிரகாரம் இடம்பெயந்துள்ள 62 ஆயிரத்து 404 குடும்பங்கள் சுமார் 611 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மண்சரிவு , வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 3200 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை அரநாயக்க மற்றும் புலத் கொ{ஹபிட்டிய போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது. மண்சரிவில் மூன்று கிராமங்கள் முழுமையாக புதையுண்டன. இதன்காரணமாக 150 பேர் காணவில்லை.
27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தின் அதிக மழை பொழிவின் காரணமாக மீட்பு பணிகள் மந்த நிலைமையில் காணப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது
இதேவேளை இன்றைய தினத்திலும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தது.
இதனால் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன.