திருச்செந்தூர் : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்துக்கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி, புங்கம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மசீலன்(41). இவர் கடந்த 18ம் தேதி இரவு பரமன்குறிச்சி அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தர்மசீலனின் அக்காள் மகன் முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி கோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தர்மசீலன் கொலை தொடர்பாக, ஆறுமுகநேரி பார்வதிநகரை சேர்ந்த தங்கம் மகன் முத்துசாமி (என்ற) சுடலைமுத்து (29) என்பவர் கந்தசாமிபுரம் விஏஓ கண்ணன் (என்ற) முத்துப்பட்டனிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

இதில் தெரியவந்ததாவது: கொலை செய்யப்பட்ட  தர்மசீலனுக்கும் அவரது அக்கா தமிழ்செல்வியின் மகள் வனஜாவுக்கும் (27) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான். இருவருக்குமிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 வருடங்களாக வனஜா தனது மகனுடன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அப்போது இசக்கிராஜா(29) என்பவருடன் வனஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தர்மசீலனிடம் இருந்து வனஜா விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் தர்மசீலன் சம்மதிக்கவில்லை.இந்நிலையில், வனஜாவின் சகோதரி வனராசாத்தி(22) கோயில் கொடைக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புங்கம்மாள்புரத்திற்கு வந்து தனது தாயுடன் தங்கியுள்ளார்.

2 வாரங்களுக்கு முன்பு வள்ளிவிளை கோயில் கொடை விழாவில் முத்துசாமி (என்ற) சுடலைமுத்துவை சந்தித்துள்ளார். இவர்களுக்கு காதல் ஏற்பட்டு, அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
அப்போது, தனது சகோதரி கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் அவரது கணவர் தர்மசீலன் குறித்தும் முத்துசாமியிடம் கூறியுள்ளார்.
அதேபோல வனஜாவும் முத்துசாமியிடம்   தர்மசீலன் இறந்தால்தான்   நான் எனது காதலனையும், வனராசாத்தி உன்னையும் திருமணம் செய்ய முடியும் எனக்கூறினார்.
அத்துடன் தர்மசீலன் பெயரில் சொத்தும் உள்ளதால் அவரை தீர்த்துக்கட்டிவிட முடிவு செய்தனர்.இதற்கு துணையாக வனஜாவின் சித்தி மகன் திருச்சியை சேர்ந்த பார்வதிமுத்துவையும்(19) அழைத்தனர். கடந்த 18ம் தேதி இரவு பரமன்குறிச்சிக்கு கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, தர்மசீலன் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.

பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோயில் அருகே பஸ் நிறுத்த பகுதியில் வந்தபோது பார்வதிமுத்து வழிமறித்து இரும்புக்கம்பியால், தர்மசீலனை தாக்கினார்.

அங்கு வந்த முத்துசாமி கத்தியால் வெட்டினார். தர்மசீலன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பின்னர் இருவரும் பைக்கில் வட்டன்விளை பகுதிக்கு சென்று ஆயுதங்கள் மற்றும் தங்கள் சட்டையை குழி தோண்டிப் புதைத்து விட்டு தப்பிவிட்டனர்.இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து புங்கம்மாள்புரத்தில் இருந்த வனஜா, அவரது சகோதரி வனராசாத்தி, பார்வதிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Share.
Leave A Reply