• கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஜனாதிபதியாக வரவிரும்புகிறார். ராஜபக் ஷ ஆட்சிக்கு இலங்கையை மீண்டும் கொண்டுசெல்ல அவர் விரும்புகிறார்.
• ராஜபக் ஷாக்கள் ஒரு அணியாக செயற்படுவதில் அபார திறமைசாலிகள். சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு கதவைத் திறந்து விடுதாக இருந்தால் அது ஒரு ராஜபக் ஷவை மாத்திரமல்ல. சகோதரர்கள், பிள்ளைகள் என்று முழுக் குடும்பத்தையும் வம்சத்தையும் உள்ளே அனுமதிப்பதாகவே முடியும்.
• ராஜபக் ஷாக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி புதியதொரு கட்சியை அமைப்பார்களேயானால், அவர்களால் 1992 ஆம் ஆண்டில் லலித் அத்துலத் முதலியும் காமினி திசாநாயக்கவும் செய்திருந்ததைத் தவிர, வேறு எதையும் செய்யக்கூடியதாக இருக்காது.
இலங்கையிலும் வெளியிலும் வாழ்கின்ற மக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வருமாறு என்னைக் கேட்டிருக்கிறார்கள்.
–கோத்தாபய ராஜபக் ஷ
தொடர்ந்து…
பிரெஞ்சு எழுத்தாளரான சார்ள்ஸ் பெரோல்றின் “வைரங்களும் தேரைகளும்” (Diamonds and Toads) என்ற புனைகதையில் வருகின்ற றோஸ் என்ற பெயர் கொண்ட நல்ல சகோதரி பேசுகின்ற வேளைகளில் எல்லாம் அவளின் வாயிலிருந்து ஒரு தங்க ஆபரணம் அல்லது ஒரு பூ விழும். அவள் அவ்வாறு ஆசிர்வதிக்கப்பட்டிருந்தாள்.
அதேவேளை ஃபானி என்ற பெயர் கொண்ட கெட்ட சகோதரி பேசுகின்ற வேளைகளில் எல்லாம் அவளின் வாயிலிருந்து தேரைகளும் வீரியன் பாம்புகளும் விழுவதற்கு சபிக்கப்பட்டிருந்தாள்.
உலகம் பூராகவுமுள்ள அரசியல்வாதிகளில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் பேசுகின்ற வேளைகளில் எல்லாம் அவர்களின் வாய்களில் இருந்து விரும்பத்தகாத பொருட்கள் வெளியே வருவதற்கு எந்தவொரு சாபமும் தேவையில்லை.
அத்தகைய அரசியல்வாதிகள் அவர்களின் நண்பர்களுக்கு ஒரு சாபக்கேடாகவும் எதிராளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அடிக்கடி விளங்குகிறார்கள்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரவிருக்கும் கோடீஸ்வரர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வகையைச் சேர்ந்தவரே.
இலங்கையில் தவறான பேர்வழிகளினால் கார்கள் வாங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காகவே வாகனங்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுகின்றன என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க அண்மையில் தெரிவித்த கருத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு அசெளகரியத்தையும் கூட்டு எதிரணிக்கு குதூகலத்தையும் கொடுத்திருந்தது.
ஜோன் செனவிரத்ன
மற்றைய மூத்த அமைச்சரான ஜோன் செனவிரத்ன மதிகெட்டதனமாகப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியல்ல.
ஒரு தேரையோ அல்லது வீரியன் பாம்போ அவரது வாயிலிருந்து விழுகின்றது என்றால் அது தற்செயலானதல்ல, நோக்கத்துடனானதேயாகும்.
அதன் காரணத்தினால்தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக்குவதன் மூலமாக அவரை தீவிர அரசியலுக்கு கொண்டுவர வேண்டிய தேவை குறித்து அமைச்சர் செனவிரத்ன தெரிவித்த கருத்தை மிகுந்த கரிசனையுடன் பலிசீலிக்க வேண்டியிருக்கிறது.
இதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. அமைச்சர் செனவிரத்ன 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ அணியின் ஒரு உறுப்பினராகப் போட்டியிட்டு பிறகு மற்றைய அணிக்குத் தாவிய சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களில் ஒருவர்.
கோத்தாபய ராஜபக் ஷவை சுதந்திரக்கட்சியின் முக்கிய தலைவராக்க வேண்டுமென்ற யோசனையை செனவிரத்ன முன்வைத்தது இதுதான் முதற்தடவையல்ல என்பதும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கோத்தாபயவுக்கு கட்சியின் முக்கிய பதவியொன்று கொடுக்கப்படவேண்டும் என்பது சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது என்று 2016 ஏப்ரலில் இவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கோத்தாபயவுடன் அமைச்சர் செனவிரத்ன இரு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் கலந்தாலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிறகு சில தினங்கள் கழித்து கோத்தாபய 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட வேண்டுமென்று பலர் விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.
போட்டியிடப் போவதாகவோ அல்லது போட்டியிடப் போவதில்லை என்றோ அவர் கூறவில்லை. ஆனால், மறைமுகமாக விடுக்கின்ற செய்தியைப் புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இல்லை.
கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஜனாதிபதியாக வரவிரும்புகிறார். ராஜபக் ஷ ஆட்சிக்கு இலங்கையை மீண்டும் கொண்டுசெல்ல அவர் விரும்புகிறார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் ராஜபக் ஷவின் திரிசங்கு நிலையும் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தச் சட்டம் மிகவும் முக்கியமான ஒரு ஜனநாயக சாதனையாகும், ஜனாதிபதியின் பதவிக்காலங்களுக்கு இருந்த மட்டுப்பாடுகளை அது மீண்டும் கொண்டு வந்திருக்கிறது.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களும் மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
இந்த ஆணைக்குழுக்கள் மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் நியமனம் தொடர்பில் முதன் முதலான அமிலப் பரிசோதனையை எதிர்நோக்கப்போகின்றன.
முறைகேடுகள் தொடர்பான குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கும் தற்போதைய ஆளுநரே மீண்டும் நியமிக்கப்படுவாராக இருந்தால், அரசியல்வாதிகளின் பக்கச்சார்பான போக்குகளை தடுப்பதில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருக்கின்ற ஆற்றலும் ஆர்வமும் பெரும் சந்தேகத்துக்குள்ளாகும்.
இரு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகள் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்புக்கான19 ஆவது திருத்தம் தடைசெய்திருக்கிறது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதவராகிறார். இன்னொரு அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக மாத்திரமே இதற்கு பரிகாரம் காணக்கூடியதாக இருக்கும்.
அத்தகையதொரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை ராஜபக் ஷ கொண்டிருக்கக்கூடிய ஒரு பாராளுமன்றமும் முதுகெலும்பே இல்லாத அளவுக்கு பலவீனமான ஒரு ஜனாதிபதியும் தேவை. இந்த இரண்டில் எந்த ஒன்றுமே வழமையான ஜனநாயக சூழ்நிலைகளில் சாத்தியப்படப் போவதில்லை.
அதனால், ராஜபக் ஷாக்கள் இமாலயப் பிரச்சினையொன்றை எதிர்நோக்குகிறார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலை அவர்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்?
வெளியாள் ஒருவர் ராஜபக் ஷாக்களுக்கு இப்போது எவ்வளவுதான் அடிமைத்தனமாக விசுவாசத்தை வெளிக்காட்டுபவராக இருந்தாலும், தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை அவர்கள் அவரின் கையில் கொடுப்பது சாத்தியமில்லை.
ஒரேவழி 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இன்னொரு ராஜ பக் ஷ போட்டியிடுவதேயாகும். நாமல் ராஜ பக் ஷ மிகவும் இளையவர்.
பசில் ராஜபக் ஷவைப் பொறுத்தவரை அவர் பெருவாரியான சட்டச் சிக்கல்களுக்குள் மாட்டுப்பட்டிருக்கிறார். அதனால் கோத்தாபய ராஜபக் ஷ மாத்திரமே ஒரே தெரிவு.
கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் மாத்திரம் போதாது. கட்டாயம் வெற்றி பெறவும் வேண்டும். விமல் வீரவன்ச போன்றவர்கள் உருவாக்க முயற்சிக்கின்ற மூன்றாவது கட்சியொன்றின் வேட்பாளராக கோத்தாபய போட்டியிட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்தே அவர் போட்டியிட வேண்டும்.
பாராளுமன்றத்தில் தற்போது இருக்கின்ற சுதந்திரக்கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் ஆதரவு மஹிந்த ராஜபக் ஷவுக்கு இருக்கிறது.
மாகாணசபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் கூட அவர் கணிசமான ஆதரவைக் கொண்டிருக்கிறார். சமுதாயத்தின் அடிமட்டத்தில் செல்வாக்குடையவராகவும் அவர் விளங்குகிறார்.
ஆனால், சுதந்திரக்கட்சியில் எவ்வளவு பெரிய பிளவை அவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தங்களது பாரம்பரிய அரசியல் தாயகத்தை கைவிட்டு எதிர்கால நிலைவரம் எத்தகையதாக இருக்குமோ என்று தெரியாத ஒரு புதிய கட்சிக்கு சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனைபேர் வருவார்கள் என்பதும் நிச்சயமாகக் கூறமுடியாததாகும்.
1956 ஆம் ஆண்டில் இரு கட்சி முறை பிறந்ததற்குப் பிறகு தங்களது தாய்க்கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை அமைத்த செல்வாக்குடைய தலைவர்கள் எவருமே தேர்தல்களில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை.
புதிய கட்சியொன்றினால் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமாக இருக்கலாம். அதன் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்குதலைக் கொடுக்கலாம்.
ராஜபக் ஷவின் தலைமையின் கீழ் இல்லாத எதிர்காலம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பழிவாங்குவதாக மாத்திரமே அது அமைய முடியும். ஆனால், புதியதொரு கட்சியினால் ஜனாதிபதி பதவியை வென்றெடுக்கவோ அல்லது அடுத்த அரசாங்கத்தை அமைக்கவோ முடியாது.
ராஜபக் ஷாக்கள் சுதந்திரக்கட்சியைப் பிளவுபடுத்தி புதியதொரு கட்சியை அமைப்பார்களேயானால், 1992 ஆம் ஆண்டில் லலித் அத்துலத் முதலியும் காமினி திசாநாயக்கவும் சாதித்ததையே இவர்களாலும் சாதிக்கக் கூடியதாக இருக்கும்.
ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அடுத்த பிரதான அரசியல் கட்சி வெற்றி பெறுவதற்கு வழிவகுத்ததே அத்துலத்முதலியும் திசாநாயக்கவும் செய்த காரியமாகும்.
அவர்கள் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிளவுபடுத்தியிருக்காவிட்டால் 1994 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக வந்திருக்கமாட்டார்.
அதேபோன்றே ராஜபக் ஷாக்கள் சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்துவார்களேயானால் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெகு சுலபமாகவே வாய்ப்பைக் கொடுப்பதற்கு சமமானதாகவே அது அமையும்.
தனியாகச் செல்வதன் மூலமாக ராஜபக் ஷாக்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிக்க முடியும். ஆனால் அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிக்க முடியாது.
புதியதொரு கட்சியினூடாக ஆட்சி அதிகாரத்தை மீளப் பெற முடியாது. சுதந்திரக் கட்சியின் ஊடாக மாத்திரமே அதிகாரத்தைப் பெற முடியும்.
இந்த எளிமையான உண்மையை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அரசியல் சாதுரியம் தெரியாதவரல்லவே மஹிந்த ராஜபக் ஷ.
பல கட்சி ஜனநாயக அரசியலின் குழம்பிய நீர் நிலைகளின் ஊடாக இராணுவ வீரர்கள் வெற்றிகரமாக நீந்திச் சென்றது மிக மிக அரிதேயாகும். சரத் பொன்சேகாவின் கதி இதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒரு பிரதித் தலைவராகப் பிரவேசித்து பொறுமையுடன் இருந்து படிப்படியாக உயர் நிலைக்கு வருவதற்கு அவசியமான ஆற்றல் கோத்தாபய ராஜபக் ஷவிடம் இருப்பதாகக் கூறுவதற்கில்லை.
அவரது பாணி அமைதியாக இருந்து சிந்தித்து செயல்படுவதல்ல. அமளி செய்து கொண்டு அடித்து முந்துவதேயாகும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவிடமும் பசில் ராஜபக் ஷவிடமும் தேவையான ஆற்றல்கள் போதுமானளவு இருக்கிறது.
மூவரும் ஒரு அணியாக செயற்படுவார்களாக இருந்தால் வெற்றியைச் சாதிக்கக் கூடியதாக இருக்கும்.
ராஜபக் ஷாக்கள் ஒரு அணியாக செயற்படுவதில் அபார திறமைசாலிகள். சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக் ஷவுக்கு கதவைத் திறந்து விடுதாக இருந்தால் அது ஒரு ராஜபக் ஷவை மாத்திரமல்ல. சகோதரர்கள், பிள்ளைகள் என்று முழுக் குடும்பத்தையும் வம்சத்தையும் உள்ளே அனுமதிப்பதாகவே முடியும்.
பின்புலத்தை உருவாக்குதல்
“ஒரு ஹீரோவை வேண்டி நிற்கின்ற நாடு பரிதாபத்துக்குரியதாகும்” என்று ஜேர்மன் கவிஞரும் நாடகாசிரியருமான பிரென்ச், கலிலியோவில் கூறுகிறார்.
வழமையான ஜனநாயகங்கள் ஹீரோக்களையோ அல்லது விடுவிப்போரையோ வேண்டி நிற்பதில்லை. ஹீரோவை அல்லது மீட்பரை நாடொன்று வேண்டி நிற்பதென்றால், அது பேராபத்துக்குள்ளாகியிருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அல்லது கொடிய எதிரியின் போர் ஆபத்தை எதிர்நோக்கினால் மாத்திரமே ஒரு நாட்டுக்கு மீட்பர் தேவை. இன்று இலங்கை அத்தகையதொரு நிலையில் இல்லை.
இன்று இலங்கை நல்லாட்சி நிலவும் ஒரு இடமல்ல. ஆனால் தீய ஆட்சி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான – சில சந்தர்ப்பங்களில் அத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கான சுதந்திரம் உள்ள ஒரு நாடாக இருக்கிறது.
நீர்கொழும்பில் ஊடகவியலாளர் ஃபிரெடி கமகே தாக்குதலுக்கு இலக்கானார். பொலிஸார் அசமந்தமாக இருக்கவில்லை. தாக்குதலை நடத்தியவர்கள் என்று கூறப்படுவோர் இப்போது தடுப்புக் காவலில் இருக்கிறார்கள்.
சிரேஷ்ட அமைச்சரொருவரின் அடாவடித்தனமான தலையீட்டின் விளைவாக ஏற்பட்டதாகக் கூறப்படுகின்ற சூழ்நிலை காரணமாக வன இலாகாவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
சம்பந்தப்பட்ட தனி நபர்களினாலும் சிவில் சமூக அமைப்புகளினாலும் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனையையடுத்து இந்தப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு நிலைவரத்தை தணித்திருக்கிறார்.
அஜித் நிவாட் கப்ராலைப் போன்றே அர்ஜுன மகேந்திரனும் ஒழுங்கானவர் அல்ல. ஆனால் மகேந்திரனை எதிர்ப்பதற்கான சுதந்திரம் இன்று இருக்கிறது.
ராஜபக் ஷ ஆட்சியில் அவ்வாறு எதிர்ப்பைக் காட்டுவதற்கான சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயக வெற்றிகள் மிக அரிதாகவும் தோல்விகளே பொதுவான விளைவுகளாகவும் இருக்கின்ற ஒரு நேரத்தில் இலங்கையின் கதை ஒரு ஜனநாயக வெற்றியாகவே காணப்படுகிறது.
ராஜபக் ஷாக்களின் திட்டம் வெற்றி பெறுவதற்கு அந்த ஜனநாயக வெற்றி இல்லாமல்போக வேண்டும். நாடு குழப்ப நிலைக்குள்ளாகியிருக்க வேண்டும்.
சிங்கள பௌத்த மனங்கள் பீதியில் குழப்பத்துக்குள்ளாகியிருக்கும் போதே மீட்பதற்காக ராஜபக் ஷ ஓடிவர முடியும்.
மீண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கு, வல்லமை கொண்ட பல அந்நிய சக்திகளினால் நாடு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் பீதியை மீள உருவாக்க வேண்டிய தேவை ராஜபக் ஷாக்களுக்கு இருக்கிறது.
மறுபிறப்பெடுத்திருக்கும் விடுதலைப் புலிகள் மற்றும் கிளர்ந்தெழும் ஜிஹாதிகள் பற்றிய பேச்சுக்கள் அதிகரிக்கும்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரவிருக்கும் ஹிலாரி கிளின்டனும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தொடர்பில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டுவதைப் போன்று தமிழ்ப் பிரிவினைவாதம் மற்றும் முஸ்லிம் விஸ்தரிப்பு வாதம் தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார்கள் என்று ராஜபக் ஷாக்கள் குற்றஞ்சாட்டுவார்கள்.
‘தீங்கு விளைவிக்கின்ற அடுத்த இனத்தவர்கள்’ பற்றிய பீதி உருவாக்கப்பட்டதும் அழிவிலிருந்து இலங்கையையும் சிங்கள பௌத்தர்களையும் காப்பாற்றக்கூடிய மக்கள் தலைவரின் தேவை மேலெழும்.
அடுத்து கோத்தாபய ராஜபக் ஷ அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் புடைசூழ அரசியல் களத்தில் காலடி வைக்கக்கூடியதாக இருக்கும்.
நாடு உகந்த தலைமைத்துவம் இன்றி இருப்பதாக ‘சிலோன் டுடே’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கோத்தாபய ராஜபக் ஷ கவலை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த காலம் சில சந்தர்ப்பங்களில் எதிர்காலம் பற்றிய உண்மையை எடுத்துக்காட்டும். கோத்தாபய ராஜபக் ஷவின் கடந்த காலத்திலிருந்து உதாரணமாக எடுத்துக்காட்டக்கூடிய இரு சம்பவங்கள் அவர் இலங்கைக்கு எத்தகைய தலைமைத்துவத்தை கொடுப்பார் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கு உதவும்.
சிங்கள பத்திரிகையான லக்பிமவின் பிரதம ஆசிரியர் 2014 ஏப்ரலில் இரகசியப் பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டார்.
கோத்தாபய ராஜபக் ஷவின் மனைவியின் படம் ஒன்று தொடர்பில் கேலிக்குறிப்பு ஒன்றை (Funny Caption) வெளியிட்டதே அந்த பிரதம ஆசிரியர் செய்த ‘குற்றம்’.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு சந்தையில் அனோமா ராஜபக் ஷ பணம் கொடுத்து பொருட்கள் வாங்கும்போது எடுக்கப்பட்ட படம் அது.
இந்தப் பணம் போலியானதில்லையா? என்பதே படத்தின் கீழான கேலிக் குறிப்பு. அடுத்த நாளே பத்திரிகை அதற்காக மன்னிப்புக்கோரியது.
அதனால் பலன் ஏற்படவில்லை. பிரதம ஆசிரியரை இரகசியப் பொலிஸார் மூன்று மணித்தியாலங்களாகத் துருவித் துருவி விசாரணை செய்தனர்.
அந்தக் கேலிக் குறிப்பு வெளியிடப்படுவதற்கு நேரடியாகப் பொறுப்பாக இருந்த உதவி ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அடுத்து பிரதம ஆசிரியரும் பதவியிலிருந்து விலகினார்.
உக்ரைன் நாட்டு மிக் விமானங்கள் கொள்வனவு தொடர்பாக செய்தி வெளியிட்ட மைக்காக சண்டே லீடர் பத்திரிகைக்கு எதிராக கோத்தாபய ராஜபக் ஷ 2008 பெப்ர வரியில் மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்தார்.
அரசாங்க ஊடகங்களிலும் தனியார் ஊடகங்களிலும் அந்த வழக்கு பற்றி விரிவாக செய்திகள் வெளியாகின. 2014 மே 22 கோத்தாபய ராஜபக் ஷ நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞர் எம்.ஏ. சுமந்திரனின் குறுக்கு விசாரணை 2014 மே 27 இல் ஆரம்பமானது.
நீதிமன்றம் செய்தியாளர்களினால் நிரம்பி வழிந்திருக்க வேண்டும் என்றே எவரும் இயல்பாக எதிர்பார்த்திருப்பர். ஆனால் அன்றைய தினம் பி.பி.சி. நிருபர்கள் மாத்திரமே நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்தனர்.
என்றாலும் அவர்களுக்கும் தோல்வியே. அந்த நிருபர்களைத் தடுத்து நிறுத்திய இரு சிரேஷ்ட பொலிஸ்காரர்கள் ‘சரியாகச் சிந்திக்கத் தெரிந்த எவருமே இங்கு வரமாட்டார்கள்.
வேறு எந்தவொரு ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளரும் இங்கு வரவில்லை. ஏனென்றால் விளைவு என்னவாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்’ என்று கூறினார்கள்.
சுமந்திரனின் கேள்விகளும் ராஜபக் ஷவின் பதில்களும் மறுநாள் தலைப்புச் செய்திகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எந்த ஊடகமுமே அந்தச் செய்தியை வெளியிடவில்லை.
விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை ஊடகங்கள் அறிந் திருந்தன. ராஜபக் ஷாக்கள் கடந்த காலத்துக்கு இலங்கையைக் கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.
சாம்ராஜ்யத்துக்குள் சாம்ராஜ்யமாக தங்களது குடும்பத்தின் அந்தஸ்தை மீள நிலைநிறுத்த அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் இலங்கை மக்களாகிய நாம் அத்தகையதொரு மாற்றத்தின் விளைவுகளைத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நாம் ராஜபக் ஷாக்களுடன் அனேகமாக ஒரு தசாப்த காலம் வாழ்ந்தோமல்லவா?
-திஸ்ஸரணி குணசேகர-