பஹ்ரைனுக்கு இப்போது திடீரென்று ஞானம் பிறந்துவிட்டது. நாட்டில் அரசியல் எதிரிகளை கண்டபடி ஒடுக்கி வருகிறது. மன்னர் குடும்பத்திற்கு முன் தும்மினாலும் குற்றம் என்ற கதையாகிவிட்டது.
பஹ்ரைன் என்ற பிராந்தியம் எங்கும் குந்திக்கொண்டிருக்கும் மன்னர் கூட்டங்களுக்கு, பிரஜைகள் என்பவர் சொன்னபடி கேட்டு நல்லபிள்ளையாக இருக்க வேண்டும், பிராணிகள் என்று நினைப்பு.
கடந்த மூன்று வாரங்களில் பஹ்ரைன் அரசு செய்த வேலைகளை பார்த்தால் வம்பை விலைக்கு வாங்குவது போல் தான் தெரிகிறது.
நாட்டின் மிகப்பெரிய கட்சியான பெரும்பான்மை ஷியாக்களின் (Shia Muslims -al-Wefaq) அல் வெபக் இஸ்லாமிய சமூகம் கட்சிக்கு இடைக்கால தடைவிதித்தது. இனி அரசியல் செய்யக் கூடாது என்று அதன் அலுவலகங்களை இழுத்து மூடியது. சொத்துகளை முடக்கியது.
Sheikh Ali Salman
கட்சியின் அரசியல் பிரிவு தலைவர் ஷெய்க் அலி சல்மானை ஏற்கனவே சிறையில் போட்டிருந்தார்கள். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு இன்னும் போனஸ் தண்டனை கொடுத்து ஒன்பது ஆண்டுகளாக இரட்டிப்பாக்கப்பட்டது.
எப்போதுமே உரிமை, உரிமை என்று குரல் கொடுத்து குடைச்சல் தந்த செயற்பாட்டாளர் நபீல் ரஜபை பிடித்து சிறையில் போடப்பட்டது.
இதுவரையில் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் இதற்கு அடுத்ததாக செய்த வேலைதான் பஹ்ரைனுக்கு இப்போது தலையிடியாக மாறியிருக்கிறது.
(Ayatollah Isa Qassim)
ஆயதுல்லாஹ் அலி காசிம் (Ayatollah Isa Qassim) என்பது பஹ்ரைன் ஷியா பெருமக்களின் முக்கியமான ஆன்மீகத் தலைவர். கொஞ்சம் அரசியலும் பேசுவார். அப்பேர்ப்பட்டவரின் குடியுரிமை அகற்றப்பட்டது. பத்தோடு பதினொன்றாக நினைத்தோ என்னவோ பஹ்ரைன் மன்னாதி மன்னர்கள் இந்த காரியத்தை செய்தார்கள்.
ஆனால் இந்த ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் வீதிகளில் பென்னாம்பெரிய துப்பாக்கிகளை வைத்திருக்கும் படையினரைக் கொண்டு பயமுறுத்தவும் அரசு தவறவில்லை. ஆனால் ஆயதுல்லாஹ் இஸா காசிம் (Ayatollah Isa Qassim) விடயத்தில் இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் செல்லாமல்போனது.
தலைநகர் மனாமாவின் (capital Manama) மேற்குப்பக்கமாக இருக்கும் இஸா காசிமின் வீட்டுக்கு முன்னால் கூடிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மன்னர் குடும்பத்தையே திட்டித் தீர்த்தார்கள்.
இத்தோடு கதை முடிந்திருந்தால் நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த காரியத்தை பார்த்திருக்கலாம். ஆனால் இஸா காசிமுக்கு செய்த வேலைக்கு அமெரிக்கா முதற்கொண்டு ஐ.ந வரை கண்டன அறிக்கையாக அரசுக்கு வந்து குவிந்தது.
எங்கே என்று பார்த்துக் கொண்டிருந்த ஈரான் சும்மா இருக்குமா? தன் பங்குக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.
அடுத்த எச்சரிக்கை பயங்கரமானது, “ஷெய்க் இஸா காசிம் மீதான அத்திரமூட்டும் செயல் சிகப்புக் கோட்டை மீறுவது என்பது அல் கலீபாவுக்கு (பஹ்ரைன் ஆட்சியாளர்கள்) நிச்சயமாக தெரியும்.
அது பிராந்தியம் எங்கும் பற்றி எரியச்செய்யும் என்பதோடு மக்கள் வேறு வழி இன்றி ஆயுதப்போராட்டத்தை தேர்வுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும்.”
Iran’s senior general Qassem Suleimani
சாதாரண ஒருவர் இப்படி கூறி இருந்தால் பராவாயில்லை. சொன்னவர் ஈரான் புரட்சிப் படையின் வெளிநாட்டு படை நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜெனரல் காசிம் சுலைமானி.
இவர் லேசுப்பட்டவர் அல்ல. ஈரான் பல நாடுகளிலும் நேரடியாகவோ மறைமுகமாவோ மல்லுக்கு நிற்கிறது என்றால் அதில் முதல் ஆளாக நிற்பவர் தான் இந்த சுலைமானி. இவரது குத்ஸ் படையினர் வெளிநாடுகளில் இடம்பெறும் தாக்குதல்களுக்கு நேரடி பொறுப்பேற்பவர்கள்.
ஈரானின் சாகசங்களை யெமன், ஈராக், சிரியா என்று பிராந்தியம் எங்கும் பார்க்க முடிகிறது. பஹ்ரைனை ஏன் விட்டுவைப்பான் என்று ஈரான் நினைத்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.
Bahrain’s King Hamad bin Issa al-Khalifa
மறுபக்கம் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபாவின் (Bahrain’s King Hamad bin Issa al-Khalifa) சுன்னி அரசு தனிப்பட்ட தைரியத்தில் இந்த தலைகனத்த வேலைகளை செய்வதில்லை. எல்லாம் சவூதி அரேபியா பின்னால் இருக்கிறது என்ற தைரியத்தில் கண்டபடி துள்ளுகிறது.
இப்படித் தான் 2011 ஆம் ஆண்டு துனீஷியாவில் நாற்காலியை விட்டு இறங்காத ஆட்சியாளரை துரத்த மக்கள் வீதிக்கு இறங்கியபோது அதைப் பார்த்து வீதிக்கு வந்த மக்கள் வரிசையில் பஹ்ரைன் மக்களும் இருக்கிறார்கள்.
கடைசியில் என்ன ஆனது? சவூதி அரேபியா தனது துருப்புகளை பஹ்ரைனுக்கு அனுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை ஓட ஓட துரத்தியது.
பஹ்ரைன் மீது சவூதிக்கு இருக்கும் பயம் வேறு. சவூதியின் எண்ணெய் வளம் கொண்ட கிழக்கு மாகாணத்திற்கும் பஹ்ரைனுக்கும் இடையில் கிட்டத்தட்டட 24 கிலோமீற்றர் நீண்ட கடல்வழிப்பாலம் இருக்கிறது.
இதுவோ இரு நாடுகளுக்கும் இடையிலான நிலத் தொடர்பாகும். ஆனால் சவூதியின் இந்த பாலத் தொடர்பு இருக்கும் பகுதியில் சிறுபான்மை ஷியாக்களே பெரும்பான்மையானவர்.
பஹ்ரைனில் கிளர்ச்சி ஏற்பட்டால் அது சவூதிக்கும் தொற்றுநோயாக மாறிவிடும் என்று சவூதி மன்னர் குடும்பத்திற்கு பயம். அந்த பயமே பஹ்ரைன் மன்னருக்கு முதலீடு.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்றும் பஹ்ரைனில் ஒளிந்துகொண்டு பயம்காட்டுகிறது. மக்கள் ஏன் வீதிக்கு இறங்கினார்கள் என்று பஹ்ரைன் அரசு ஒப்புக்காவது கேட்கவில்லை.
அங்கே பெரும்பாண்மையாக இருக்கும் ஷியாக்கள் போதுமானவரை ஒடுக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கு சுன்னி மன்னர் குடும்பத்தால் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாது என்பது அவர்களது நினைப்பது. இதுவே பஹ்ரைனின் அடிப்படை பிரச்சினை.
இதனை வைத்து ஏனைய பிராந்திய நாடுகளில் செய்வது போன்று சவூதியும் ஈரானும் மறைந்து கொண்டு உசுப்பேற்றும் வேலையை பார்க்கிறது.
ஆனால் இப்போது பஹ்ரைன் கயிற்றில் நடக்கும் விளையாட்டையே ஆட ஆரம்பித்திருக்கிறது.
பஹ்ரைன் அரசியல் கட்சிகளுக்கு தடைவிதிப்பதும் ஜனநாய வழியில் போராடுபவர்களை கொண்டுபோய் சிறையில் போடுவதும் அங்கு மாற்றுத் தீர்வாக கடும்போக்காளர்கள் ஆயுதம் தூக்க சாதகமான சூழலையே ஏற்படுத்தும். அதாவது பிராந்தியம் எங்கும் நடக்கும் உள்நாட்டு யுத்தங்களின் ஆரம்ப அறிகுறிகள் கூட இப்படித்தான் இருந்தன.
எஸ். பிர்தெளஸ்