விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதா என்ற விவாதம், மூன்று வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போரின் இறுதிக்கட்டத்தில் பெருமளவான மக்கள், கிளஸ்டர் மற்றும் இரசாயனக் குண்டுகளினாலேயே மரணமானதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், இம்மாத தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூது வர் ஸ்டீபன் ரெப்பிடம் எடுத்துக் கூறியிருந்தார்.
இதைக் கூறியதற்காக யாழ்ப்பாணம், மன்னார் ஆயர்களைப் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்களாக உள்ளவர்களும், சிங்கள பௌத்த தேசியவாதிகளும் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டு இப்போது தான் கிளம்பியுள்ள ஒன்று அல்ல.
அது இறுதிக்கட்டப் போர், வன்னியின் கிழக்குப் பக்கம் நகரத் தொடங்கிய போதே அவ்வப்போது, கிபிர் போர் விமானங்கள் மூலம் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் சிலவற்றின் படங்களும் விடுதலைப் புலிகளால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தன. ஆனால், அரசாங்கம் ஒரு போதுமே, கிளஸ்டர் குண்டுகளைத் தாம் போரில் பயன்படுத்துவதாக ஒத்துக் கொண்டதில்லை. கிளஸ்டர் குண்டுகள் என்பது உலகின் அபாயகரமான ஆயுதங்களில் ஒன்றாக கணிக்கப்படுகிறது.
விமானத்தில் இருந்து வீசப்படும் ஒரு குண்டு, இடையில் பிரிந்து, பரந்த பிரதேசம் எங்கும் வீழ்ந்து வெடிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை ஆட்களற்ற பிரதேசமாக மாற்றி விட முடியும்.
2008 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட கிளஸ்டர் ஒழிப்பு பிரகடனத்தில் இதுவரை 112 நாடுகள் இணைந்து கொண்டுள்ளன. ஆனால், இதில் கையெழுத்திடாத அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 83 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகிறது.
அதுமட்டுமன்றி, அண்மைக் காலத்தில் கிளஸ்டர் குண்டுகளைப் பாவித்த நாடு கள் என்று 16 நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையும் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், புதுடில்லியில் உள்ள ஏ.பி. செய்தியாளர் ரவி நெஸ்மன், இலங்கையில் போரின் போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதான தகவலை அம்பலப்படுத்தியிருந் தார்.
வன்னியில், கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.நா அபிவிருத்தித் திட்ட அதிகாரியான, அலன் போஸ்டன், வெடிக்காத கிளஸ்டர் குண்டுகளை தாம் மீட்டுள்ளதாக, அவருக்கு தகவல் வழங்கியிருந்தார். ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இறுதிப் போர் நடந்த பகுதிகளை இராணுவம் துப்பரவு செய்த பின்னரே, அந்தப் பகுதிக்கு ஏனைய கண்ணிவெடி அகற்றும் குழுக்கள் அனுமதிக்கப்பட்டன. எனவே, போரின் இறுதிக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றைப் படையி னர் முன்னரே மறைத்து விட்டதாக கூறப்படுவதுண்டு.
தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதில்லை என்று அரசாங்கமும் படைத்தரப்பும் கூறி வந்த தற்கு இந்தத் துணிவு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
அண்மையில், மன்னார் ஆயரின் குற்றச்சாட்டை மறுத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தாம் கிளஸ்டர் குண்டுகளை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்று மட்டும் கூறவில்லை. கிளஸ்டர் குண்டுகளை ஏவும் வசதிகள் இலங்கைப் படையினரிடம் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதற்கு முரணான வகையில், கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் விமானப்படைத் தளபதியான எயர் மார் ஷல் றொசான் குணதிலக. கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தும் வசதிகள் இருந்தாலும், தாம் ஒருபோதும் அவற்றைப் பயன்படுத்தியது கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை விமானப்படை போரில் பயன்படுத்திய, இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர், ரஷ்யத் தயாரிப்பு மிக் – 27, சீனத் தயாரிப்பு எவ்- 7 ஆகிய தரைத் தாக்குதல் விமானங்களில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன.
போரில், கிளஸ்டர் குண்டுகளை மனிதர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விட, விமான ஓடுபாதைகளை அழிப்பதற்கு பயன்படுத்துவதே முக்கியமானது.
விமான ஓடுபாதைகளை சேதப்படுத்தி, எதிரியின் போர் விமானங்களை தரையிலேயே செயலிழக்க வைக்க கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது வழக் கம்.
எனவே, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளால் வடிவமைக்கப்படும் போர் விமானங்களில் குறிப்பாக, தரைத் தாக்குதல் விமானங் களில் ஓடுபாதைகளை அழிக்கும் கிளஸ் டர் குண்டுகளை செலுத்தும் வசதிகள் நிச்சயம் இருக்கும்.
ஆனால், அந்த போர் விமானங்களைப் பயன்படுத்தும் எல்லா நாடுகளும் அதற்குரிய கிளஸ்டர் குண்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
இலங்கை அரசாங்கமோ, கிளஸ்டர் குண்டுகள் தம்மிடம் இல்லை என்கிறது.
ஆனால், ஒரு கட்டத்தில் தமக்கு அமெ ரிக்காவே கிளஸ்டர் குண்டுகளை கொள்வனவு செய்யுமாறு ஆலோசனை கூறிய தான தகவலையும் அரசாங்கம் வெளியிட்டது. அது கிளஸ்டர் குண்டு குற்றச்சாட்டில் அமெரிக்காவையும் மாட்டி விடும் நோக்கிலானது.
2002 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், இலங்கைப் படையினரைப் பலப்படுத்துவது குறித்து அமெரிக்கா அறிக்கை ஒன்றைத் தயாரித்திருந்தது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தை சேர்ந்த முப்படை அதிகாரிகள் குழு, 2002 செப்டெம்பர் 12 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 24 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் இலங்கைப் படையினர் புலிகளிடம் கண்டிருந்த தோல்விகளை அடிப்படையாக வைத்து, அதற்கான காரணங்களை மதிப்பிட்டு, மீண்டும் ஒரு போர் வெடித்தால் அதற்குத் தயாராக இருக்கச் செய்வதற்கான ஆய்வே அது. இதன்போது, இருதரப்பு ஆயுதபலம், ஆட்பலம், படைத்தளங்களின் பாதுகாப்பு, உள்ளிட்ட அனைத்தும் கவனத்தில் எடுக்கப்பட்டன.
இதையடுத்து அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடம் சமர்ப்பித்த அறிக்கையின் பெரும்பாலான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.
அந்த அறிக்கையில் தான், கிளஸ்டர் குண்டுகளை விமானப்படை கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதைத் தாம் நிராகரித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும், அமெரிக்காவுக்குத் தெரியாமல் ரஷ்யாவிடமோ, சீனாவிடமோ அவற்றை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்திருக்கலாம்.
ஏனென்றால், போரின் இறுதிக்கட்டத்தில் பெரும்பாலான ஆயுதங்களை இந்த நாடுகள் தான் இலங்கைக்கு விநியோகித்திருந்தன.
இலங்கை அரசாங்கம், கிளஸ்டர் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதாக, கூறினால் கூட, அதற்கெதிராக எதுவும் செய்ய முடியாது.
ஏனென்றால், கிளஸ்டர் எதிர்ப்பு பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடவில்லை.
ஆனால், போரின் இறுதிக்கட்டத்தில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக ஒத்துக் கொண்டாலோ, அவை பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டாலோ இலங்கைக்கு சிக்கலாகி விடும்.
பொதுமக்கள் செறிவாக குவிந்திருந்த ஒரு பிரதேசத்தில் பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியது மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாக வகைப் படுத்தப்படக் கூடிய ஆபத்து உள்ளது.
அதனால் தான், கிளஸ்டர் குண்டுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் வந்ததுமே அரச தரப்பு அடியோடு நிராகரித்து வருகிறது.
போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன் படுத்தியதற்கான தடயங்களை அரச படை யினர் அழித்து விட்டிருக்கலாம்.
ஆனால், வெடிக்காத குண்டுகள் அனைத் தையும் அவர்களால் கண்டுபிடித்து அழித்தி ருக்க முடியாது.
அத்தகைய குண்டுகள் ஏதாவது வெளி நாட்டு கண்ணிவெடி அகற்றும் குழுக்களிடம் சிக்கியிருந்தால், அவை ஐ.நாவுக்கோ அமெ ரிக்காவுக்கோ முக்கியமான சான்றுப் பொரு ளாக கிடைத்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை.
(சுபத்ரா)