அசல் – நகல் பிரச்சினைகள் எல்லாத் துறைகளிலும் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளன. குறிப்பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்தியில் அவர்களை அறியாமலேயே பரவலடையும் நிலையில் அது தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வந்த ஒருவர் இலட்சக்கணக்கான நாணயத்தாள்கள் காணாமல் போய்விட்டதாக முறையிட்டார்.
ஆம், இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை அச்சிடும் அச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பானவரே இவ்வாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டவராவார்.
அதாவது, தமது அச்சகத்தில் அச்சிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள்கள் காணாமல்போயுள்ளன என்பதே அந்த முறைப்பாடாகும்.
முறைப்பாடை தொடர்ந்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கையளித்தார்.
குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதிசிங்கவின் விஷேட ஆலோசனைகளுக்கமைய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கோ அதிர்ச்சியே காத்திருந்தது. ஏனெனில், இலங்கையின் பொருளாதரத்தை அல்லது சீரான நாணய சுற்றோட்டதையே பாதிக்கச் செய்யும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் அதுவும் 125 பாதுகாப்பு கண்காணிப்பு கமெராக்களை தாண்டி அந்த திருட்டு இடம்பெற்றிருப்பதுமே அதற்கான காரணமாகும்.
அத்துடன் வெளி நாட்டு, உள் நாட்டு நாணயத்தாள்களை அச்சிடும் குறித்த அச்சகத்தில் இடம்பெற்றுள்ள அந்தத் திருட்டானது இலங்கையின் வரலாற்றில் அவ்வாறான தொரு இடத்தில் இடம் பெற்ற முதல் திருட்டு என்று கூட சொல்லலாம்.
முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணையினைத் தொடர்ந்த கொழு ம்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த திருட்டு தொடர்பில் தகவல்களை திரட்டலாயினர்.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொது நலவாய மாநாட்டை குறிக்கும் விதமாக அல்லது அந்த சந்தர்ப்பத்தை அனுஷ்டிக்கும் விதமாக வெளியிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள்களும் ஏனைய சாதாரண 500ரூபா நாணயத்தாள்களுமே திருடப்பட்டுள்ளமை பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டது.
ஏனெனில் பொது நலவாய மாநாட்டை குறிக்கும் விதமாக 5 மில்லியன் 500 ரூபா நோட்டுக்களும் சாதாரண 500 ரூபா நோட்டுக்கள் 45 மில்லியனும் அச்சிடப்படும் போதே இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஷேட தாள் வகை ஒன்றில் இந்த நணயத்தாள்கள் அச்சிடப்படும் நிலையில் அவ்வாறான ஒரு தாளில் 45 நோட்டுக்களை அச்சிட முடியும்.
இந் நிலையில் பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டை பிரதிபலிக்கும் 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்ட அவ்வாறான 24 தாள்களும் சாதாரண 500 ரூபா அச்சிடப்பட்ட 39 தாள்களும் திருடப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தன.
அப்படியானால் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டை குறிக்கும் 500 ரூபா நாணயத்தாள்கள் 10,80 உம் சாதாரண 500 ரூபா நாணயத்தாள்கள் 1755 உம் திருடப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
பெறுமதியின் அடிப்படையில் பார்க்கும் போது பொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டைக் குறிக்கும் விதமான 500 ரூபா நாணயத்தாள்களின் பெறுமதியானது 5 இலட்சத்து 40 ஆயிரமாகும். திருடப்பட்ட சாதாரண 500 ரூபா நாணயத்தாள்களின் பெறுமதி 8 இலட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபா ஆகும்.
அப்படியானால் திருடப்பட்டுள்ள 500 ரூபா நாணயத்தாள்களின் மொத்த பெறுமதி 14 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாவாகும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் திருடப்பட்ட நாணயத்தாள்கள் ஒரேநேரத்தில் அன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந் நிலையில், பொலிஸாரின் சந்தேகம் அந்த அச்சகத்தில் சேவை செய்த நபர் ஒருவர் மீது திரும்பியது. இதனை அடுத்து கடந்த வெள்ளியன்று (21.02.2014) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விஷேட சுற்றிவளைப்பொன்றினை மேற் கொண்டனர்.
இதன்போது பியகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபரை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அவரது வீட்டை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான 500 ரூபா நாணயத்தாள்கள் 530 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இதனை அடுத்து சந்தேக நபரை தடுத்து வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை ஒட்டியும் சாதாரணமாகவும் மொத்தம் 50 மில்லியன் 500 ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதன் போது நாணயத்தாளின் இலக்கம் அச்சாவதற்கு முன்னர் குறித்த சந்தேக நபரால் அந்த நாணயத்தாள்கள் திருடப்பட்டுள்ளன.
நாணயத்தாள் அச்சிடும் பணியில் அதன் இலக்கமானது இறுதியிலேயே அச்சிடப்படுவதால் அதற்கு முன்னரான அனைத்து அச்சுப் படி முறைகளும் பூர்த்தி செய்யப்பட்ட நாணயத்தாள்களே சந்தேக நபரால் திருடப்பட்டுள்ளன.
அதனால் அவரால் திருடப்பட்டுள்ள நாணயத்தாள்களில் இலக்கங்கள் எதுவும் இல்லை என்பதும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தான் திருடிய அந்த 500 ரூபா நாணயத்தாள்களை புழக்கத்தில் விட நாணயத்தாள்களுக்கு இலக்கங்கள் தேவை பட்டதால் அதனை அச்சிட விஷேடமாக இரு இறப்பர் முத்திரைகளை சந்தேக நபர் பயன்படுத்தியுள்ளார்.
தற்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள அந்த இரு இறப்பர் முத்திரைகளில் ஒன்று சிவப்பு நிறத்தையும் மற்றையது கறுப்பு நிறத்தையும் கொண்டன.
இந்த இறப்பர் முத்திரைகள் கிரிபத்கொடை பிரதேசத்திலேயே விஷேடமாக நாணயத்தாளுக்கு இலக்கங்களை அச்சிடும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறித்த நாணயத்தாள் அச்சகத்தில் நாணயத்தாளின் இலக்கம் அச்சாவதற்கு முன்னர் அந்த நாணயத்தாள்களை திருடியுள்ள சந்தேக நபர் பெண்கள் கழிவறைக்குச் சென்று தான் அணிந்திருந்த ‘பூட்’ சப்பாத்துக்களுக்குள் மறைத்து அவற்றை வெளியே எடுத்துவந்து இந்த திருட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை தடுப்புக்காவல் விசாரணைக்கு உட்படுத்தியதில் மேலும் சில தகவல்களையும் பொலிஸாரால் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஏனெனில் சந்தேக நபரால் போலியாக இலக்கமிடப்பட்ட 9 இலட்சம் ரூபா பெறுமதியான நாணயத்தாள்கள் பணச் சுற்றோட்டத்துக்குள் விடப்பட்டுள்ளமை அதில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவிக்கிறார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹணவின் தகவல்களின் பிரகாரம் இவ்வாறு போலியாக இலக்கமிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள்கள் 1800 நாணயச் சுற்றோட்டதுக்குள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
X/25 524376 என்பதே அந்த போலி நாணயத்தாள்களின் இலக்கம் என்பதை விசாரணைகளில் பொலிஸார் கண்டறிந்துள்ளதாகவும் குறித்த போலி 500 ரூபா நோட்டு குறித்து மிக அவதானமாக செயற்படுமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண பொதுமக்களைக் கேட்டுக்கொன்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி மாலை விஷேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட பொலிஸ் தலைமையகம் 500 ரூபா போலி நாணயத்தாள்கள் பணச் சுற்றோட்டதில் கலந்து புழக்கத்தில் உள்ள நிலையில் எவரது கைக்கேனும் அவ்வாறான போலி நாணயத்தாள்கள் கிடைத்தால் உடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று அதனை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
நாணயத் தாள்களை அச்சிடும் அச்சகத்திலேயே இடம்பெற்ற இந்த திருட்டை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
மத்திய வங்கியின் வர்த்தக நிதிப் பிரிவின் அத்தியட்சகர் ஜே.பீ.ஆர்.கருணாரத்னவின் தகவல்களின் அடிப்படையில் குறித்த அச்சகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த சில சுதந்திரமான நடைமுறைகளால் இந்த
திருட்டு இடம்பெற்றிருக்கலாம் என ஊகிக்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் புழக்கத்தில் விடப்பட்டுள்ள 9 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட 500 ரூபா நாணயத்தாள்களையும் நாணயச் சுற்றோட்டதில் இருந்து நீக்குவது மத்தியவங்கியை பொறுத்தவரை ஒரு பாரிய பணியாகும். ஒரே
இலக்கத்தைக் கொண்ட அந்த நாணயத் தாள்கள் பணச் சுற்றோட்டதை பெரிதும் பாதிக்கலாம்.
இந்த துணிகரத் திருட்டு மற்றும் போலி நாணயத்தாள் விநியோகம் என்பன தொடர்பான விசாரணைகளை மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் விஷேட ஆலோசனைக் கமைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் நுவான் வேதி சிங்க, குற்றத்தடுப்புப் பிரிவி பொறுப்பதிகாரி நெவில் சில்வா, பொலிஸ் பரிசோத கர்களான எரங்க பெர்ணான்டோ, ரஜீவ ஹெட்டி ஆராச்சி, பொலிஸ் சார்ஜன் ரோஹண, கான்ஸ்ட பிளான புஷ்பகுமார ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழு மேற்கொண்டிருந்தது.
போலி நாணயத்தாள்களை வைத்திரு ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்ற
அடிப்படையில் அது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். போலி நாணயத்தாள்கள் பொதுமக்களின் கைக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு எமது பாதுகாப்பை உறுதி செய்வதுடன் நாட்டின் சீரான பணச் சுற்றோட்டதுக்கும் எம்மாலான பங்களிப்பினை நல்குவோம்.
– எம்.எப்.எம்.பஸீர் –