?????????????சமந்தா பவர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும்  என்று  எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது.

அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வின் ஆரம்ப நாளன்று, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை நிகழ்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் உரையாற்றுவதாக இருந்தது. அவரது உரையும் முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், உக்ரேன் விவகாரம் அவரது ஜெனீவா பயணத்தை தடைப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை  ஐரோப்பிய நேரப்படி மாலை 04 மணியளவில் அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா, மொறிசியஸ் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த வரைவை அமெரிக்கா, உறுப்பு நாடுகளிடம் சமர்ப்பித்தது.

அந்த தீர்மான வரைவு மறுநாள் காலையே இங்குள்ள ஊடகங்களில் பரபரப்பாகியது. ஆனால், அந்த வரைவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்த மயக்கம் ஊடகங்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டன.

அதாவது, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை வரவேற்றிருந்தபோதும், அதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கான எந்தப் பரிந்துரையையும் அந்த வரைவு கொண்டிருக்கவில்லை.

ஒரு பக்கத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய அதேவேளை, இன்னொரு பக்கத்தில் இலங்கை அரசாங்கத்தையும் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்தது.

இவற்றையெல்லாம் விசாரித்தும் உள்நாட்டுப் பொறிமுறைகளைக் கண்காணித்தும் வரும் செப்டெம்பரில் நடக்கவுள்ள 27ஆவது அமர்வில் வாய்மொழி அறிக்கையையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆவது அமர்வில் முழுமையான அறிக்கையையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மான வரைவு கோருகிறது.

Susan Rice Said To Replace Donilon As Obama Security Adviserஉண்மையில், அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துவது எதனை என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஆனால், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்த வேண்டும் என்பதே அமெரிக்கா நிலைப்பாடாக உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான உதவி இராஜாங்கச் செயலர் சாரா சீவோல் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அதாவது, மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம், சுதந்திரமானதொரு விசாரணையை நடத்துவதும் இலங்கை
நடத்தும் விசாரணைகளைக் கண்காணிப்பதும் குறித்தே அமெரிக்கத் தீர்மான வரைவு பேசுவதாகத் தெரிகிறது.

எவ்வாறாயினும், இதுவொரு முதலாவது தீர்மான வரைவு மட்டுமேயாகும். இறுதியானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதில் அடுக்கடுக்கான பல திருத்தங்கள் செய்யப்பட்டே இறுதியான வரைவு தயாரிக்கப்படும்.

அது இதைவிட வலுவற்றதாகவும் இருக்கலாம். சில வேளைகளில் வலிமையானதாகவும் இருக்கலாம்.

அது அமெரிக்காவுடன் இந்த நகர்வில் இணைந்துகொள்ளும் நாடுகளின் ஆதரவை பொறுத்த விடயமேயன்றி புலம்பெயர் தமிழர்களோ, இங்குள்ள தமிழர்களோ, தமிழ்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ கொடுக்கும் அழுத்தங்களால் தீர்மானிக்கப்படுவதாக இருக்காது.

இந்த முதல் தீர்மான வரைவு, உண்மையில் எதைக் கோருகிறது என்ற மயக்கம் ஏற்படுத்திய குழப்பத்தை விட, இதில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை  ஒன்றை உருவாக்குவதற்கான யோசனை உள்ளடக்கப்படவில்லை என்ற குழப்பமே தமிழர் தரப்பிடம் அதிகமாக உணரப்பட்டது.

அதற்குக் காரணம் இந்தமுறை அமெரிக்கா சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை முன்வைக்கும் என்று ஏற்படுத்தப்பட்ட ஒரு மாயைதான்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் எடுக்காமல், இத்தகையதொரு விசாரணைப் பொறிமுறை பற்றிய எதிர்பார்ப்பை தமிழர் தரப்பு தமக்குள் உருவாக்கிக்கொண்டது துரதிஷ்டமே.

அரசாங்கமும் கூட தனது வசதி கருதி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் அனுகூலத்தை எட்டலாம் என்பதால், தமக்கெதிராக அமெரிக்கா சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக் கொண்டு வரப்போவதாகவும் அதற்குத் தாம் அஞ்சவில்லை என்றும் பிரசாரம் செய்தது.

இவையெல்லாம் தமிழர் தரப்பிடம் ஒரு மாய விம்பத்தை உருவாக்கி விட்டது. அந்த மாய விம்பம் தான் கடந்த திங்கட்கிழமை உடைந்து நொருங்கியது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான தீர்மானத்தை ஜெனீவாவில் கொண்டுவருவது மட்டும் முக்கியமல்லை. அதனைப் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும்.

அதற்கு அப்பால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதாவது சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கான சூழலையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

இவை ஏதும் சாத்தியப்படாத ஒரு சூழல் தென்படுமானால், எந்த நாடுமே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து தமக்குத் தாமே நாமம் போட்டுக்கொள்ள முன்வராது.

human-rights2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டம் ஒன்று இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்டது எவருக்கும் மறந்து போயிருக்காது.

அதில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், அது பெரும்பான்மை நாடுகளால் நிராகரிக்கப்பட்டது. அது மட்டுமல்ல, அந்தத் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை அரசின் முயற்சியால் பதிலடித் தீர்மானம் ஒன்றும் அந்த அமர்வில் கொண்டுவரப்பட்டது. அப்போது 29 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

போரின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் இப்போது இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோரும் பல நாடுகள், அப்போது போரில் அரசாங்கம் பெற்ற வெற்றியை வரவேற்று, அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

மீண்டும் அதுபோன்றதொரு நிலை ஏற்படுவதை அமெரிக்காவோ, அதனுடன் சேர்ந்துள்ள ஏனைய நாடுகளோ விரும்பாது. ஏன் பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தினாலும் அமெரிக்கா ஒருபோதும் அவ்வாறு கூறியதில்லை. எப்போதுமே அது உள்ளகப் பொறிமுறை குறித்தே பேசி வந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.

இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து எந்த துணிச்சலில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கான அழைப்பை எதிர்பார்க்க முடியும்?
ஆனாலும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு அமெரிக்கா வந்துள்ளதே மிகப் பெரிய விடயம்தான்.

ஏற்கெனவே பொறுப்புக்கூறல் தொடர்பாக உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த முறைத் தீர்மானம் கோரியபோதே அதை நிராகரித்த அரசாங்கம், இந்தமுறை தீர்மானத்தை மதித்து அத்தகைய விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை அமெரிக்கா கூறுவது போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், விசாரணைகளை ஆரம்பித்தால் கூட அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கப்போவதும் இல்லை.

இந்நிலையில், இந்த வரைவு இப்படியே நிறைவேற்றப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடர்வரை ஒரு தெளிவற்ற மந்தநிலை நிலவலாம்.

அதை இலங்கைக்காக கொடுக்கப்பட்ட கால அவகாசமாக தமிழர் தரப்பில் பலரும் கருத முற்படுகின்றனர். அதைவிட, இந்த வருடம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடியவடையவுள்ளது.

எனவே, புதிய ஆணையாளராக பதவியேற்பவர் இதில் எந்தளவுக்கு ஈடுபாடு காட்டுவார் என்ற சந்தேகமும் உள்ளது.

இவை தான் சர்வதேச விசாரணைப் பொறிமுறை குறித்து வலியுறுத்தப்படவில்லையே என்று கருதுவோருக்கு முன்னுள்ள முக்கியமான கவலையாக உள்ளது.

இந்த வகையில் பார்ப்பதானால் தற்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசுக்கு எதிராக பாரபட்சமாகச் செயற்படுகிறார், தமிழர்களின் பக்கம் சாய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் வாதங்களும் நியாயமாகிவிடும்.

மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் தமிழர்கள் பக்கம் நியாயமுள்ளது என்ற நம்பிக்கை உள்ள எவரும், விசாரணை இன்னொரு ஆணையாளரால் முன்னெடுக்கப்படுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டியிருக்காது.

இலங்கையில் நடந்த மீறல்கள் குறித்து அரசாங்கம் விசாரிக்கவில்லை. விசாரிக்கப் போவதுமில்லை என்பது இப்போது உலகினால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை வந்திருக்கிறது.

ஆனாலும், அத்தகைய விசாரணைகளை வெளியிலிருந்து முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள், சங்கடங்கள் குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
அவை எதையும் கவனத்தில் கொள்ளாமல் தனியே சர்வதேச விசாரணை என்பதை மட்டும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட கற்பிதங்களே தற்போது உடைந்துள்ளது.

அதற்காக போர்க்குற்றங்களுக்கு நியாயம் கோருவது அர்த்தமற்றது என்றோ தவறானது என்றோ கருதுவதற்கிடமில்லை. நீதியும் நியாயமும் எல்லா வேளைகளிலும் செயல்முறைக்கு வந்து விடுவதில்லை.

அவற்றை அடைவதற்கு பல படிமுறைகளைத் தாண்ட வேண்டியுள்ளது என்ற யதார்த்தம் உணரப்பட்டால் தான், இப்போது மட்டுமன்றி இனிவரக்கூடிய ஏமாற்றங்களையும் தவிர்க்க முடியும்.

-சஞ்சயன்-

Share.
Leave A Reply