வலுவான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக தக்க தருணத்தில் மு.கா. வின் ஆதரவையும் அதன் அங்கத்தவர்களையும்  உள்வாங்கிக் கொண்ட வலுவான அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத பங்காளி/ மு.கா.வும் அதன் இருப்பும் முற்றிலும் பாதகமானது என்றும் கவலைச்சுமை மிக்கது என்றும் கூறி அக்கட்சி அரசை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் என்ற விடயத்தில் மும்முரமாக உணர்வுபடுத்துகையிலும் ஊடகப் படுத்துகையிலும் ஈடுபட்டு வருகின்றமையை அறிய முடிகிறது.

உண்மையில் மு.கா. அதன் விதி சீர்குலைந்து போய்விடக் கூடாது என்பதற்காக அரசுடன் இணைந்ததாக அல்லது இணைந்திருப்பதாக கட்சிச் தலைவரால் சிலாகிக்கப்படும் தருணத்தில் தாய் நாட்டுக்கே சதி செய்வதாகக் குற்றம் சாட்டப்படுகின்ற நிலைமை தோற்றம் பெற்றுக் கொண்டுள்ளது.
hakim
கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் பெற்றோலை ஊற்றியுள்ளார் என்ற அடிப்படையில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு  வந்திருந்த போது ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற 50 பக்க ஆவணம்   இலங்கையில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அமைவிட வரை படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தாகக் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தர்மசங்கடம்

ஒரு பாடசாலை அதிபருக்கு அடங்கி நடக்கிற ஆசிரியர் குழாமில் வெளிக்காட்டப்பட்ட குழப்பக்காரர் போன்றாகியிருக்கும் அமைச்சரவை அங்கத்தவரான ஹக்கீம் தனது கட்சி தொடர்பான முன்னெடுப்புகள், அரசுடனான உறவு, கட்சிக்காரர்கள் சிலரது செயற்பாடுகள், அரசாங்கத்தில் கட்சியின் பங்கும்  பாத்திரமும் போன்ற விடயங்களில் தர்மசங்கடமான நிலையிலேயே  காணப்படுகிறார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் தம்மோடு இருக்கின்றவர்கள் அரசின் சகாக்களாக மாறி விடுவரோ என்ற அச்சம், ஏற்கனவே  பின் கதவில் அமைச்சர் பதவி பெற்றவர்கள் அல்லது  மு.கா வின் பழைய எதிரிகளான அமைச்சர்கள் தொடர்ந்து இருந்து விடுவதான ஆதங்கம் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களின் விமர்சனம் எனப் பல இன்னோரன்ன கவலைகள் இருக்கலாம்.

எவ்வாறாயினும் அமைச்சரவையிலுள்ள ஏனைய ஆளும் மற்றும் பங்காளிக் கட்சி அமைச்சர்கள் அமைதியாக உள்ளனர் என்றாலும் சகலரும் ஹக்கீமின் நடவடிக்கைகளை கருத்துகளை எதிர்க்கிறார்கள் என்பது பொருளல்ல. மௌனமாக ஆமோதிப்போரும் இருக்கலாம்.

Mahinda New one_CI ஜனாதிபதியின் ஆர்வம்

சிறந்த அனுபவஸ்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவணமொன்றை கையளித்தமை தொடர்பில் அமைச்சரவையிலிருந்து மு.கா. தலைவரை எழுந்த மானத்தில் வெளியேற்றிவிடுவார் என்பதற்கில்லை.

சகபாடிகளின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதியால் கேள்விகள் கேட்டப்பட்டாலும் ஆளும் கூட்டமைப்போடு இருக்க விருப்பமா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு கோரப்பட்டாலும் தனது எதிரித்துவத்தையோ அல்லது கோபதாபத்தையோ குறித்த விடயத்தில் வெளிக்காட்டுவார் எனக் கூறுவதற்கில்லை.

செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியலுக்குள்ளாலும் வாக்குகளுக்குள்ளாலும் இழையோடிக்காணப்படுகின்றமையை ஜனாதிபதி நன்கு அறிந்தவர். எல்லோரும் தன்னுடன் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு காண்பிப்பதிலேயே ஜனாதிபதிக்கு அதிக ஆர்வமுண்டு.

இதற்கு முன்னரும் ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையே பல தடவைகளில் முரண்பாடான நிலைமைகள் தோன்றி மறைந்தன. கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற தன்மை ஜனாதிபதியிடமுண்டு என்ற வகையில் குறித்த பிரச்சினை அமைச்சரவைக் கூட்டம் முடியும் வரையான சங்கதியாகியும் விடலாம்.

தர்க்கம் துரோகம்

எவ்வாறாயினும் விரல் நுணிக்குள் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள சமகால உலகில் ஆவணப்படுத்தப்பட்ட விடயங்கள், அவ்வப்போது உலகெல்லாம் பரவிய விடயங்கள் ஏற்கனவே தடுப்புக் காவலுக்குள்ளான அஸாத் சாலி கூட அனுப்பி வைத்திருக்கக்கூடிய விடயங்கள் முகப்புத்தகங்களில்  இணையத்தளங்களில் நடக்கப் போகின்ற  விடயங்கள்  நடப்பதற்கு முன்பாகவே வெளிவந்து விடுகின்றன.

எல்லோரும் முந்தி விட்டனரே நாம் பிந்தி விட்டோமே என்றெண்ணி கூட நவி பிள்ளையிடம் ஆவணம் கையளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சு என்ற வகையில் சட்ட பூர்வப்படுத்துவதற்கான  ஆவணமொன்று பிள்ளையினால்   கோரப்பட்டிருக்கவும் கூடும் என்றாலும்  தன்பக்க நியாயங்களை முன்வைத்து வாதாடியுள்ள அமைச்சர் ஹக்கீம்  தமது கட்சிக்கு கொள்கைகள் இருக்கின்றன.

தீவிரவாத குழுவினரால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக மனமுடைந்த அங்கத்தவர்கள் உள்ளனர். முஸ்லிம் காங்கிரசல்லாத வேறு பிரிவினரும் அக்கறை கொண்டிருந்தனர் சமய சகிப்புத் தன்மை சீர்குலைக்கப்படுவதானதும் சமய தலங்கள் தாக்கப்படுவதுமான பல்வேறு வெளிநாட்டு ஊடகச் செய்திகள் வெளிவந்திருந்தன. என்றெல்லாம்   தர்க்கித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் கூட்டம் முடியும் வரை அவரது கருத்தை பலப்படுத்துவதற்கோ துணை நிற்பதற்கோ எவரும் முன்வரவில்லை என்றும் முஸ்லிம்  எல்லோருக்கும் பொதுவான பிரச்சினையாக இருந்த, இருக்கின்ற பள்ளிவாசல்கள் மீதான கைவைப்பு ஏனைய முஸ்லிம் அமைச்சர்களின் கவனத்தையும் ஈர்க்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் விடயத்தைப் பெரிது படுத்த வேண்டாம் எனக் கேட்டதுடன் குறித்த விடயத்துக்கு தீர்வின்றி துரோகம் என்ற நிலைமை தோன்றியுள்ளது.

கட்டுடமையில் கலக்கம்

hasanaliசினம் கொண்டிருந்த ஜனாதிபதியிடம் நவிபிள்ளையிடம் ஆவணத்தை வழங்கியது நானல்ல கட்சியின் செயலாளரே என்று கூறியுள்ளதை அறிய முடிகிறது.

கூட்டுப் பொறுப்பற்ற விதமாக அமைந்துள்ள கூற்று தனக்கும் ஆவணத்துக்கும் தொடர்பில்லை என்பதை புலப்படுத்தியதாக அவதானிகள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டத்தில் செயலாளர் நாயகமான ஹசனலி பாராளுமன்றத்தில் வைத்து தேசத்துரோகி எனக் கூறப்பட்டார் என்பதற்கு உத்தரவாதமில்லை.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் பிரச்சினைகள் எழுகின்ற போது தட்டிக் கேட்க வேண்டும் என்ற ஹக்கீமின் கருத்துடன் உடன் பட முடியுமானாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்குள் இருக்கும் எதிர்க்கட்சி என்ற கோட்பாட்டுடன் உடன்பட முடியாது.

எங்களுடைய சம்பளத்தையும் வசதிகளையும் வாகனத்தையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு எங்களுக்கு எதிராக செயற்படுகிறாயா? என்று கேட்பது போன்றே அரசாங்கங்கள் செயல்படுகின்றன.

அதிலும் குறிப்பாக பெரும்பான்மை வாதத்தில் காலூன்றியுள்ள சம கால அரசாங்கத்தில் அத்தகைய எண்ணங்கள் நிறையவே காணப்படுகின்றன என்பதை ஜாதிக ஹெல உறுமய  தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளின் செயற்பாடுகள் எண்பிக்கின்றன.

அந்த வகையில் அரசுக்குள் எதிர்க்கட்சியாக செயற்படுவது பேசுவதற்கு அழகானது செயலாக்கத்தில் ஆபத்தானது அவ்வாறிருப்பதை எத்தகைய சிங்கள அரசுகளும் விரும்பும் என்பதற்கில்லை. மு.கா. அமைச்சர் பதவிகளைப் பெற்று தொண்டாற்றும், அடிப்படை குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டதல்ல.

அடிப்படை குறிக்கோள் மீறப்பட்டமையின் பிரதிபலிப்பினை அந்தக் கட்சி துண்டு துண்டாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அடிப்படை கொள்கை புரியாதவர்களே அழைப்புகளுக்கு மசியும், கசியும் தன்மை கொண்டவர்கள்.

இந்தடிப்படையில் கட்சியை பாதுகாப்பதற்காகவே அரசாங்கத்துடன் இருப்பதாக ஹக்கீம்  கூறுகின்ற கூற்றையும் அரசியல் சாணக்கியம் கொண்டதாக ஏற்பதற்கில்லை. வாக்குகள் வரலாம், போகலாம். தேர்தல்களில் வெல்லலாம், தோற்கலாம். மு.கா. வின் கட்டுடமையில் கலக்க முண்டு.

தேசியவாதிகளின் கருத்து
சமய  வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவோர் தண்டிக்கப்படவேண்டும். அமைதியாகவும் ஒன்றிணைந்தும் சகல சமூகங்களும் வாழும் பல்வேறு கலாசார விழுமியங்களைக் கொண்ட நாடு பிறரால் பந்தாடப்படுவதற்கு இடமளிக்கமுடியாது.

சமய மற்றும் இன அடிப்படையில் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்கள் வன்மமாகக் கண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி தாக்குதல் தாரர்களை வெளிக் கொணர்வதற்கு அமைச்சர் ஹக்கீம் முன்வர வேண்டும்.

இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஹக்கீமும் அவரது கட்சியும் என்ன கருத்து கொண்டுள்ளனர் என்பது தெரியாவிடினும் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையே எத்தகைய பிணக்கும் கிடையாது என பகிரங்கமாக கூறுவதன் மூலம் சமாளித்து விட முனைகிறார்.

ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மூதும் உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நிலைமைகளை கசிய விடக்கூடாது அரசில் மு.கா. வின் பங்கு ஆளும் கூட்டமைப்புக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சுட்டிக் காட்டுகின்ற தேசிய வாதிகள் நிலைமைகள் தொடர்பில் நாட்டுக்கு விளக்கமளித்து மன்னிப்புக்கோர வேண்டும் என கூறுகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்திலும் வெளியிடப்பட்ட கருத்துகள் காரணமாக வருத்தப்பட வேண்டிய நிலைமைகள் மு.கா. தலைவருக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிபந்தனையற்ற ஆதரவும் அங்கலாய்ப்பும்

எது நடந்தாலும் என்ன நடந்தாலும் சிங்கள அரசன் மாயாதுன்னவுக்கு முஸ்லிம் ஆதரவளித்தது போன்று சமகாலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற மு.கா.வும் அதன் தலைமையும் அரசுடன் இருந்து கொண்டிருக்கின்ற வகையில் வேதனைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனவே ஒழிய சாதனைகள் எதனையும் காணவில்லை.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் பல அமைச்சர்கள் காணப்படுகின்றனர்.அபிவிருத்தி நடவடிக்கைகளை சாதனையாக பெயர் குறிப்பிடுமளவுக்கு முன்னெடுக்கவில்லை.

அரசின் பங்காளிக் கட்சியே மு.கா. என்றால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி பெரும் பெரும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட முடியுமானால் காடு, மலைகளை குடைய முடியுமானால், இருப்பிடங்களை விட்டும் மக்களை வெளியேற்றி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புடம் போட முடியுமானால்   ஏன் மட்டக்களப்பு புகையிரத  நிலையத்திலிருந்து பொத்துவில் வரையான ரயில் பாதையை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படக்கூடாது அதற்கான  சாத்திய வள அறிக்கையை தயாரிக்கும் பணிகளை முடுக்கி விட மு.கா.வால் முடியாதா? அபிவிருத்தியுமில்லை.

அதிகாரமுமில்லை. சமூகப் பிரச்சினைகள் தீர்ந்த பாடுமில்லை. உரிமை சம்பந்தமாக குரல் எழுப்பவும் முடியவில்லை. என்றால்  உண்மையான நிலைமை என்ன என்று பலரும் அங்கலாய்க்கின்றனர்.

எது எவ்வாறாயினும் காலத்துக்குக் காலம் அரசுக்குள்ளே இருந்தும் வெளியே இருந்தும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட வேண்டும். விசாரிக்கப்பட வேண்டும் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தேசிய வாத ஓலங்கள் எழுவதை இலங்கையில் காண முடிகின்றது.

தேவையற்ற வருத்தத்தை  சமூகங்களிடையே உண்டு பண்ணக் கூடியதும் விரிசலை ஏற்படுத்தக்கூடியதுமான  கோரிக்கைகளும், கோஷங்களும் தவிர்க்கப்பட வேண்டும். கருத்துகளையும் காரியங்களையும் தத்தமக்கு எதிராக  கருமங்களாக  மாத்திரம் காணும் நிலை களையப்பட வேண்டும்.

கடைசியில் அலரிமாளிகையில் வைத்து இவரே எனது  நீதியமைச்சர் என ஆப்கான் ஜனாதிபதியிடம் இலங்கை ஜனாதிபதி ரவூப் ஹக்கீமை அறிமுகம் செய்து வைத்ததும்,  கொந்தளிப்புகள் அடங்கியுள்ளதாகக் கருத முடிகிறது.

makinthaஇஸ்மாயில் –

Share.
Leave A Reply