ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெளிவான விடயமாகும். மு.கா. அரசாங்கத்திலிருப்பது கட்சியை இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்வதால் மு.கா. அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்று அக் கட்சியின் பலர் கருதுகிறார்கள்.

பொதுவாக முஸ்லிம்களிலும் பலர் மு.கா, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை அனுமதிப்பதில்லை. ஆனால் அரசாங்கத்திலிருந்து விலகாமலிருக்கவும் மு.கா. தலைவருக்கு காரணங்கள் இருக்கின்றன.

மு.கா.விற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான் உறவின் சுபாவத்தைப் பற்றி கடந்த வார அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mahinthaஇலங்கையில் அண்மையில் இஸ்லாமிய சமயத் தலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக மு.கா. அறிக்கையொன்றை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்துள்ளது.

இதைப் பற்றி அமைச்சர்கள் கலந்துரையாடும் போது ‘அரசாங்கத்தில் இருக்க விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறுங்கள்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினாராம். இதனை அடுத்தே புதிய நிலைமை உருவாகியிருக்கிறது.

அமைச்சரவையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி ஊடகவியலாளர்கள் அமைச்சர் ஹக்கீமிடம் கேட்ட போது இது போன்ற கருத்து வேறுபாடுகள் அமைச்சரவையில் இடம்பெறுவது சகஜம் என்று அவர் கூறியிருக்கிறார். அதேவேளை மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என்றும் மு. கா. தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை ஜனாதிபதிக்கும் மு.காவுக்கும் தற்போதைய தேர்தல் களத்தில் சாதகமான நிலைமைகளை தோற்றுவித்துள்ளது என்றும் கூறலாம்.

சிறுபான்மையினத் தலைவர்களை மிரட்டினால் பெரும்பாலான பெரும்பான்மையினர் ஜனாதிபதியை பாராட்டுவார்கள். அதேவேளை தமது சமூகத்திற்காக எடுத்த நடவடிக்கையொன்றுக்காக ஜனாதிபதி திட்டியதால் முஸ்லிம்களிடம் அதைப் பற்றி முறையிட்டு அனுதாபத்தையும் ஆதரவையும் பெற மு.கா. தலைவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதனாலேயே மு.கா.வின் தேர்தல் மேடைகளில் இந்தப் பிரச்சினை பேசப்படுகிறது. அவேவேளை மு.கா. இந்த சர்ச்சையால் தேர்தலின் போது இலாபம் அடையும் என்பதனாலேயே இது ஜனாதிபதியினதும் ஹக்கீமினதும் நாடகம் என மத்திய மாகாண சபையின் ஐ.தே.க.  உறுப்பினர் அசாத் சாலி கூறியிருக்கிறார்.

மு.கா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்துள்ள அறிக்கை விடயத்தில் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த மு.கா.விற்கு காரணங்கள் இருப்பதைப் போலவே அதைப் பற்றி அதிருப்பதியை தெரிவிக்க ஜனாதிபதிக்கும் காரணங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டுத் தலைவர்கள் மு.கா.வையே இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியாக கருதுகிறார்கள். எனவே இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கே சென்றிருக்கும் நிலையில் மு.கா. இங்கு எதுவும் நடைபெறவில்லை என்று கூற முடியாது.

அதேவேளை அரசாங்கம் அண்மையில் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் சமர்ப்பித்த அறிக்கையிலும் 20 இஸ்லாமிய சமயத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் மு.கா. சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அரசாங்கம் விமர்சிக்கப்படவில்லை என்பதால் அரசாங்கத்தில் இருந்து கொண்டே இது போன்றதோர் அறிக்கையை மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தமையில் தவரில்லை என மு.கா. வாதிடுகிறது.

ஆனால் ஜனாதிபதி இதனை வேறு விதமாக பார்க்கலாம். மு.கா.வின் அறிக்கை அரசாங்கத்தை விமர்சிக்காதிருக்கலாம். ஆனால் சமயத் தலங்கள் மீதான தாக்குல்களும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் அரசாங்கத்தின் கழுத்தை நெருக்குவதற்காகவே பாவிக்கப்படுகிறது. எனவே அவர் மு.கா.வின் அறிக்கையைப் பற்றி அறிந்த உடன் கோபம் கொள்வதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஜனாதிபதிக்கும் மு.கா.விற்கும் இடையிலான சர்ச்சையினால் ஆளும் கட்சியின் முஸ்லிம்களும் எதிர்க்கட்சியும் மகிழ்ச்சியடைவதாகவே தெரிகிறது.

அது மட்டுமல்லாது மு.காவும் மகிழ்ச்சியடைகிறது என்றும் கூறலாம். ஆளும் கட்சியில் உள்ள முஸ்லிம்கள் இந்த சர்ச்சையால் மகிழ்ச்சியடைவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

இந்த சர்ச்சை முற்றி மு.கா வெளியேறினால் அல்லது வெளியேற்றப்பட்டால் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் தலைவர்களின் கிராக்கி அரசாங்கத்திற்குள் அதிகரிக்கலாம். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அவர்கள் மீது கூடுதலாக தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

மு.கா. அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டமையிட்டு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதிருப்தியை தெரிவித்து வந்துள்ளனர். எனவே மு.கா. வெளியேற்றப்படுவதை அல்லது வெளியேறுவதை அவர்கள் விரும்புவார்கள். எனவே இந்த சர்ச்சை அவர்களுக்கும் நிச்சயமாக திருப்தியை கொடுத்திருக்கும்.

மு.கா. அரசாங்கத்தில் சேர்ந்திருக்கம் போதே இஸ்லாமிய சமயத் தலங்கள் தாக்கப்பட்டதனால் பல முஸ்லிம்கள் மு.கா. மீதும் அதிருப்தி கொண்டிருப்பது தெரிந்ததே. மு.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அவர்களில் பலர் நினைக்கிறார்கள். எனவே இப்போது மு.கா. வெளியேறுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களும் மகிழ்ச்சியடையக் கூடும்.

மு.கா. இது போன்றதோர் அறிக்கையை மனித உரிமை பேரவையிடம் கையளித்ததையிட்டு ஏனைய கட்சிகளில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் முஸ்லிம்களிடம் மு.கா.விற்கே இதன் ‘கிரடிட்‘ கிடைக்கிறது. ஆனால் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவைத தவிர வேறு எவரும் மு.கா. இதன் மூலம் நாட்டை காட்டிக் கொடுத்ததாக கூறவும் இல்லை. அதேவேளை மு.கா.வைத் தவிர வேறெந்த முஸ்லிம் கட்சிகளும் அதனை நியாயப்படுத்த முன்வரவும் இல்லை.

பொதுவான முஸ்லிம்கள் இந்த அறிக்கையைப் பற்றி மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். எனவே முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றோம் என்று அம் மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் மு.கா.வும் மகிழ்ச்சியடைகிறது.

ஆனால் மு.கா. அரசாங்கத்தின் அங்கமாக தொடர்ந்து இருப்பதால் அம் மக்களில் எத்தனைப் பேர் மார்ச் மாதம் 29ஆம் திகதி நடைபெறவிருக்கும்   மேல் மற்றும்  தென் மாகாண சபைத் தேர்தலின் போது இக் காரணத்திற்காக மு.கா.விற்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்பது தெளிவற்றதாகவே உள்ளது.

மு.கா.விலுள்ள ஒரு சாரார் மற்றொரு காரணத்திற்காகவும் மகிழ்ச்சியடையலாம். இந்த சர்ச்சை முற்றி மு.கா. அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் அல்லது வெளியயேற்றப்பட்டால் அவர்கள் மு.கா.வோடு வெளியேற மாட்டார்கள். மு.கா. தலைமையை விமர்சிக்க ஏதாவது காரணங்களைத் தேடிக் கொண்டு அரசாங்கத்திலேயே தங்கிவிடுவார்கள். |

அப்போது அவர்கள் ஜனாதிபதியிடம் நல்ல பிள்ளை என்ற பெயரை பெற்று உயர் அந்தஸ்த்துக்களை பெற வாய்ப்பு ஏற்படும். எனவே அவர்களும் இந்த சர்ச்சையால் மகிழ்ச்சியடையலாம்.

இந்த சர்ச்சை ஏற்படுவதற்கு முன்னரும் அரசாங்கத்திற்கும் மு.கா.வுக்கும் இடையே நல்ல உறவு இருக்கவில்லை. இதற்கு முன்னரும் இது போன்ற கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் இஸ்லாமிய தீவிரவாதம் தலைதூக்கியதன் விளைவே என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார் அதன் காரணமாக அரசாங்கத்தில் உள்ள சகல முஸ்லிம் தலைவர்களும் பெரும் அசௌகரியத்திற்குள்ளானார்கள்.

எனவே அவர்களில் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கூறியதை ஊடகங்கள் திரிபுபடுத்தியிருப்பதாக கூறினர். வேறு சிலர் பாதுகாப்பு செயலாளர் கூறியதை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என மழுப்பலாக பேசினர்.

இதனிடையே மு.கா. தலைவர் பாதுகாப்புச் செயலாளரின் கூற்றை மறுத்து அறிக்கையொன்றை வெளியிட்டார். இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று ஏதும் இல்லை என்றும் ஆனால் மேற்குலகம் தீவிரவாத நாடாக கருதும் ஈரான் போன்ற நாடுகளுடன் அரசாங்கம் மிக நெருக்கமாக உறவு வைத்திருக்கிறது என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

ஜனாதிபதி இதைக் கண்டு கடுமையாகக் கோபம் கொண்டிருந்தார். அதைப் பற்றி ஹக்கீமிடம் விசாரித்து இருந்தார். பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு கருத்து வெளியிடும் போது தாம் முஸ்லிம்களுக்கு பதில் கூறும் நிலைமை ஏற்படுவதாகவும் எனவே தான் தாம் இந்த அறிக்கையை வெளியிட்டோம் என்றும் ஹக்கீம் பதிலளித்து இருந்தார்.

பிரச்சினைகள் இருந்த போதிலும் மு.கா.வை வெளியேற்றாமல் இருக்க ஜனாதிபதிக்கும் வெளியேறாமல் இருக்க மு.காவுக்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பலமானது மு.கா.வின் 8 வாக்குகளையும் சேர்த்தே அமைகிறது. இந்த மூன்றில் இரண்டு பலத்தின் பயன் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தோடு நின்றுவிடுவதில்லை. அது மேலும் தேவைப்படலாம்.

மனித உரிமை ஆணையாளரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்ததற்காக ஐ.நா மனித உரிமை பேரவை கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் மு.கா.வை அரசாங்கத்திலிருந்து நீக்கினால் ஆணையாளர் அதனையும் அரசாங்கத்திற்கு எதிராக பாவிக்கலாம்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்த போது தம்மை சந்தித்தவர்கள் புலனாய்வுத்துறையினரால் மிரட்டப்பட்டதாக அவர் இங்கு நடத்திய இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியிருந்தார்.

அவர் அதனை அறிக்கையிட்டும் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மு.கா.வை வெளியேற்றுவதும் அது போன்றதோர் நிலைமைய உருவாக்கலாம். அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவு அவசியமாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறானதோர் வெளியேற்றம் இடம்பெறும் என்று ஊகிக்க முடியாது.

mervyn1அமைச்சர் ஹக்கீமுக்கும் பிரபாகரன் சென்ற பாதையில் செல்ல நேரிடலாம் என அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த புதன்கிழமை வெளியிட்ட கருத்தும் சிலவேளை ஜெனிவா சென்றடைந்திருக்கலாம்.

அடுத்த வருடம் ஆணையாளர் இலங்கை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கை தொடர்பான புதிய அமெரிக்க நகல் பிரேரணை கூறுகிறது. எனவே அரசாங்கத்தின் இவ்வருட ‘நடத்தையும்’ ஆணையாளரின் அடுத்த வருட அறிக்கையில் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த நிலையில் மனித உரிமை பேரவையின் இம் முறை கூட்டத்தின் பின்னர் மு.கா. வெளியேற்றப்பட்டாலும் அதுவும் ஜெனிவா சென்றடையக் கூடிய செய்தியாகலாம்.

மு.கா.வுக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகாமல் இருக்க காரணங்கள் இருக்கின்றன. எல்லோரும் அறிந்த காரணம் அமைச்சுப் பதவிகளையும் அவற்றோடு சம்பந்தப்பட்ட சலுகைகளையும் வசதிகளையும் இழக்க நேரிடுவதே. அது மட்டுமல்லாது மு.கா. தலைவர்களின் பாதுகாப்பும் அகற்றப்படும்.

அதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்த கதியை நினைத்துப் பார்க்கும் எவரும் அரச தலைவர்களை பகைத்துக் கொண்டு அரசாங்கத்திலிருந்து விலக மாட்டார்கள்.

எல்லாவற்றையும் விட மு.கா. அரசாங்கத்திலிருந்து விலகினால் கட்சியில் உள்ள எல்லா நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் விலக மாட்டார்கள். சிலர் அரசாங்கத்திலேயே தங்கிவிடுவார்கள்.

அல்லது அரசாங்கம் அவர்களை நிறுத்திக் கொண்டு மு.கா.வை மீண்டும் ஒரு முறை பிரித்துவிடும்;. அது போன்று கட்சியில் சிலர் தனித் தனியாக அரசாங்கத்துடன் சேர முயற்சித்த போதே கடந்த முறை மு.கா. அரசாங்கத்தில் சேர்ந்தது.

பலர் இதற்கு முன்னரும் அரசாங்கத்தில் சேர்ந்து பயன் பெறுவதற்காகவே மு.கா.வை ஏணியாக பாவித்துள்ளனர். இது எதிர்க்காலத்திலும் நடைபெறும்.

இது போன்றதோர் நிலைமை உருவாகினால் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை மனித உரிமை பேரவைக்கு பட்டியல் போட்டுக் கொடுத்தமையே இத்தனைக்கும் காரணம் என ஒருவரும் கூறவும் மாட்டார்கள்.

ஏனெனில் அக் காலமாகும் போது இடையில் ஏற்படும் பல சந்பவங்களும் வெளியிடப்படும் கருத்துக்களும் வாதப் பிரதிவாதஙகளும் தற்போதைய சர்ச்சையை மூடி மறைத்து விட்டிருக்கும். வெளியில் உள்ளவர்கள் எதனைக் கூறினாலும் இவற்றை சந்திக்க தயாராகவே அரச தலைவர்களை பகைத்துக் கொண்டு மு.கா. அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த அரசாங்கம் மு.காவிற்குப் பொறுத்தமான இடம் அல்ல என்பதே இந்த சர்ச்சை எடுத்துக் காட்டுகிறது.

-எம்.எஸ். எம் ஐயூப் –

Share.
Leave A Reply