ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»கட்டுரைகள்»இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)
    கட்டுரைகள்

    இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

    AdminBy AdminApril 6, 2014No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.

    அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன. எங்கேயும், எப்போதும், தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப் பட்டுள்ளனர். வென்றவர்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்புக் கூறி உள்ளனர்.

    உள்நாட்டுப் போர்களில் வென்ற பிரிவினர், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக எந்தவிதமான தண்டனையையும் அனுபவிப்பதில்லை. உலகம் முழுவதும் இதுவே பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது.

    unபத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன.

    இந்த உண்மையை, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுத்த Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். சர்வதேச நீதிமன்றத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ள தகவல்கள், தமிழர்களுக்கும் பிரயோசனப் படும். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

    இலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடந்துள்ளது என்றும், அதனை சர்வதேச சமூகம் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்றும் பல தமிழர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய ஆதரவு வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஒரு அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். போர்க்குற்றங்கள் என்ற சொற்பதத்தை பாவிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

    war-zone-7“இனப்படுகொலை விசாரணை நடத்து!” என்று, உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் உரத்துச் சொன்னால் போதும். சர்வதேச சமூகம் செவி கொடுக்கும். யூகோஸ்லேவியா, ருவாண்டா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்காக, விசேட சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன.

    அதே மாதிரி, இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் படும் என்று உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறு நம்புவோர் மத்தியில், மெத்தப் படித்த அறிவுஜீவிகளும், சட்டத் துறை நிபுணர்களும் அடங்குவார்கள்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நவீன உலகம், முன்னரை விட நாகரிகமடைந்து விட்டதாகவும், மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலைமையோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. அண்மைக் கால உலக வரலாற்றில், சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட போர்கள் நடந்துள்ளன, சில இப்போதும் தொடர்கின்றன.

    யுத்தத்தில் ஈடுபடும் அரச படைகளோ, அல்லது ஆயுதக் குழுக்களோ மனித உரிமைகளை மதிப்பதில்லை. உலகில் எந்தவொரு இராணுவமும், ஆயுதக் குழுவும் ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டங்கள் இவற்றை சரியாக நடைமுறை படுத்தி விட்டால் போதும், உலகம் முழுவதும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய உலகில், அது ஒரு கற்பனாவாதமாகவே இருக்கும்.

    genocide-of-tamils-2009உலகில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா? சட்ட வல்லுனர்கள் மத்தியில் அது தொடர்பாக மிகுந்த குழப்பம் நிலவுகின்றது. ஏனென்றால், புரிந்துணர்வின் அடிப்படையில் நாடுகள் தமக்குள் சில உடன்படிக்கைகளை செய்துள்ளன. பெரும்பாலான தருணங்களில், அதையே நாம் சர்வதேச சட்டம் என்று புரிந்து கொள்கிறோம்.

    சூடான் நாட்டு ஜனாதிபதி பஷீர், டாபூர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்படுகிறார் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. அந்த உத்தரவானது, ஆரம்பித்த நாளில் இருந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க சாதனையாக கருதப் பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களை பலர் அவதானிக்கவில்லை.

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ஒப்பந்தத்தில் சூடான் கைச்சாத்திடவில்லை. அந்த வகையில், பஷீரை கைது செய்ய வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு அவசியம். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும், மூன்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

    பஷீருக்கு எதிரான பிடிவிறாந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கொடுக்கப் பட்டது என்பது இரகசியம் அல்ல. இந்த விடயத்தில் அமெரிக்காவின் அரசியல் இலாபம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் ஒத்துழைக்க மறுத்தன.

    ஏற்கனவே, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்கள், ஆப்பிரிக்கர்களை மட்டுமே தண்டிப்பதில் குறியாக இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பஷீரை கைது செய்யும் பொறுப்பை, சூடான் அரசிடம் ஒப்படைக்குமாறு, ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவின் “பஷீர் எதிர்ப்புக் கொள்கை” ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பிரிப்பதே, அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. டாபூர் இனப்படுகொலை விவகாரம், பஷீருக்கு அழுத்தம் கொடுக்கவே பயன்பட்டது. தற்போது, தெற்கு சூடான் தனி நாடாகி விட்டதால், பஷீரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து கிடப்பில் போடப் பட்டு விட்டது.

    இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச விசேட நீதிமன்றங்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நிறுவப் படுகின்றன. அதனால், நீதிமன்றங்கள் அரசியல் மன்றங்களாகி விடுகின்றன. அங்கே நீதிக்குப் பதிலாக, அரசியல் கருத்துக்களே தீர்ப்புக்களாக கூறப் படுகின்றன. போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நீதிமன்றம் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்தால், இந்த உண்மை புலப்படும்.

    கம்போடியாவில் நடந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு, கம்போடிய விசேட நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 15000 பேர் கொன்று குவிக்கப் பட்ட, சித்திரவதைக் கூடம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு, இருபது வருட தண்டனை வழங்கப் பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் திருப்தியடையா விட்டாலும், அது அன்று பெரிதாக சிலாகித்துப் பேசப் பட்டது. ஆனால், பல முக்கிய புள்ளிகள் தண்டனையில் இருந்து தப்பி விட்டனர்.

    கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைக்கு, இறுதியில் நீதி வழங்கப் பட்டு விட்டது என்று பலர் கூறலாம். ஆனால், இதிலே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பொல்பொட் ஆதரவு கமர் ரூஜ் இயக்கத்தவர் மட்டுமே தண்டிக்கப் பட்டனர்.

    அவர்களுடன் கூடவிருந்த, இனப்படுகொலையில் பங்கெடுத்த ஒரு பிரிவினர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அந்தப் பிரிவினரை, சிலர் எதிரிக்கு காட்டிக் கொடுத்த துரோகக் கும்பல் என்று தூற்றலாம். ஆனால், சர்வதேச சமூகம் அத்தகைய துரோகக் கும்பல்களுடன் ஒத்துழைப்பதில் திருப்தி அடைகின்றது.

    கமர் ரூஜில் இருந்து பிரிந்து சென்ற ஹூன் சென் தலைமையிலான குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் இன்று வரை நிலைத்திருக்கிறது. ஒரு நாள், தங்களையும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பார்கள் என்று, கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுவார்களா? அதற்கான சாத்தியமே கிடையாது. ஏனென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தான் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு துணை நின்றுள்ளனர். அதாவது, இது தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி.

    சியாரா லியோன் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லிபியாவின் ஆதரவைப் பெற்ற சாங்கோவின் படையினரை மட்டுமே தண்டித்தது. ஏனென்றால் அவர்கள் தான் சியாரா லியோன் போரில் தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த அயல் நாட்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டெயிலர் பதவியில் இருந்து அகற்றப் பட்டார். பின்னர் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப் பட்டார்.

    சியாரா லியோன் போர்க்குற்ற விசாரணையின் முடிவில், டெயிலர் இறுதி வாக்குமூலம் கொடுக்கும் நேரம், நீதிபதிகள் அதை பதிவு செய்ய மறுத்தனர். அதற்கு காரணம், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை, டெயிலர் தனது வாக்குமூலத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். “டெயிலர் விடுதலை செய்யப் பட்டால், புதியதொரு போர் வெடிக்கும்” என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. விசாரணை முழுமையடையாமலே, நீதிபதிகள் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பதைக் கண்ட டெயிலர் வெளிநடப்புச் செய்தார்.

    Scenes during Rwanda Civil War 1994ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுவதையும் உலுக்கியது. அந்த நாட்டில் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, அங்கே ஒரு ஐ.நா. சமாதானப் படை நிலை கொண்டிருந்தது. “இன்னும் இரண்டாயிரம் போர்வீரர்களை உடனடியாக அனுப்பினால், பேரழிவு ஏற்படுவதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும்” என்று, சமாதானப் படை தளபதி Romeo Dallaire கேட்டிருந்தார்.

    ஐ.நா. தலைமையகம் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மேலதிக நிதி கொடுப்பதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால், ஏற்கனவே ருவாண்டாவில் இருந்த அமைதிப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான், அந்த நாட்டில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு பலியானார்கள்.

    2004 ம் ஆண்டு, அன்றைய ஐ.நா. செயலதிபர் கோபி அனன், ருவாண்டாவில் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இனிமேல், “அது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக” கூறினார். “உலகில் எந்த நாட்டில் இனப்படுகொலை நடந்தாலும், ஐ.நா. அங்கே உடனடியாக தலையிடும்” என்று உறுதி மொழி அளித்தார். “குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு”, என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. 2009 ம் ஆண்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரம், ஐ.நா.வின் உறுதிமொழி காற்றோடு பறக்க விடப் பட்டது.

    “எது எப்படி இருந்தாலும், ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில், இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டு விட்டது தானே?” என்று சிலர் கேட்கலாம். அதுவும், தோற்றவர்களை தண்டிக்கும், வென்றவர்களின் நீதி தான். ருவாண்டாவில் முன்பிருந்த ஹூட்டு இனத்தவரின் அரசை தூக்கியெறிந்து விட்டு, அந்த இடத்தில் துட்சி இனத்தவரின் அரசு அமைந்துள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், முன்பு ஆட்சியதிகாரத்தை வைத்திருந்த ஹூட்டு இராணுவம் தோல்வியடைந்தது. துட்சிகளின் கிளர்ச்சிப் படை வென்றது.

    ருவாண்டா இனப்படுகொலையினை விசாரிக்கும், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர், போரில் தோற்ற ஹூட்டு இனத்தை சேர்ந்த குற்றவாளிகள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய துட்சி இன குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப் பட்டனர்.

    (அவர்களும் முக்கியமான புள்ளிகள் அல்ல.) அது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் நடுநிலைமை நாடகம். கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், துட்சி அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்றைய ருவாண்டா அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலர், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே உட்பட, நடந்த போரில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை புரிந்திருந்தாலும், அவர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. இனிமேலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

    “யூகோஸ்லேவியா நீதிமன்றம் வித்தியாசமானது, அது போரில் வென்றவர்களை தானே தண்டித்தது?” என்று யாராவது வாதாடலாம். யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்த போர்களில், ஆரம்பம் முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தலையிட்டு வந்தன. அனைத்துப் போர்களிலும் செர்பிய பெரும்பான்மை இனம் வென்று கொண்டிருந்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் எம்மை நம்ப வைத்தன. ஒரு கட்டம் வரையில் மட்டுமே அந்தக் கருதுகோள் சரியாகும்.

    இறுதியாக நடந்த கொசோவோ போரிலும், நேட்டோ படைகள் விமானக் குண்டுகள் போட்டு தான் போரை முடித்து வைத்தன. நேட்டோ நாடுகள் தான், செர்பியரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. சேர்பியப் படைகள் கொசோவோவை விட்டு பின்வாங்கிச் சென்றன. நேட்டோ படைகளும், அல்பேனிய கிளர்ச்சிக் குழுவும், வெற்றி வீரர்களாக கொசோவோவுக்குள் பிரவேசித்தனர்.

    ஆகவே, யூகோஸ்லேவியப் போர்கள் அனைத்திலும் தோற்றவர்கள்: செர்பியர்கள். வென்றவர்கள்: மேற்கத்திய நேட்டோ நாடுகள். போரில் வென்ற நேட்டோ நாடுகள் தான், யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கினார்கள். அவர்களே அதற்கு நிதி வழங்கினார்கள். அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோரும் செர்பிய குற்றவாளிகள் தான். கண்துடைப்புக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய குரோவாசிய குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் அரசியல் முலாம் பூசப் பட்டிருந்தன. வேண்டுமென்றே ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் வழக்குகள் நடத்தப் பட்டன.

    யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அரசதரப்பு சட்டத்தரணிகள் சாட்சிகளை மிரட்டி சாட்சியம் பெற்றனர். அவர்கள் விரும்பியவாறு சாட்சி சொல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர், மிரட்டப் பட்டனர், அல்லது சலுகைகள் தருவதாக ஆசை காட்டினார்கள். ஒரு சாட்சிக்கு, அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தனர்.

    யூகோஸ்லேவியா நீதிமன்றம் மூலம் உலகப் புகழ் பெற்ற, அரச தரப்பு சட்டத்தரணி கார்லா டெல் போந்தே, இன்னும் இரண்டு பேர் மீது, சாட்சிகளை மிரட்டியதாக குற்றஞ் சாட்டப் பட்டது. இறுதியாக, சர்வதேச நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஒவ்வொரு உலக நாட்டிலும் நடந்த, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், சர்வதேச நீதிமன்றத்தினால் ஒழுங்காக விசாரிக்கப் பட்டு, நீதி வழங்கப் பட்டால், உலகம் திருந்தி விடும் என்று நினைப்பது வெகுளித்தனமானது. உலக நாடுகளின் பிரச்சினைகளும், சட்டங்களும் அந்தளவு இலகுவானது அல்ல. மேலும், அரசியல் தலையீடு இன்றி, நீதித்துறை செயற்பட முடியாத நிலைமை உள்ளது.

    கடந்த கால வரலாறு முழுவதும், சர்வதேச நீதியானது, “வென்றவர்களின் நீதியாக” இருந்து வந்ததை, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி வருங்காலத்திலும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம், வென்றவர்களுக்கு சாதகமாகவும், தோற்றவர்களுக்கு பாதகமாகவும் தான் நடந்து கொள்ளப் போகின்றது.

    ஈழப் போரின் இறுதியில், வென்றவர்கள் அமைக்கப் போகும் சர்வதேச நீதிமன்றம், எவ்வாறு தோற்றுப் போன தமிழர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கப் போகிறது? தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரையில், தொடர்ந்தும் இலவு காத்த கிளியாக ஏமாற்றப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

    -கலையரசன்-

    Post Views: 61

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    காதலனை தோழிக்கு விருந்தாக்க ஆசைப்பட்ட காதலி.. அந்த நேரத்தில் அப்படி.. கட் ஆன ‘அந்த’ உறுப்பு

    September 27, 2023

    பொலிஸாரிடம் தப்பி ஓடிய இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு.

    September 27, 2023

    Leave A Reply Cancel Reply

    April 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    ரூ.23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்

    September 27, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    • ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version