தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போரில், தாம் பெற்ற வெற்றியை அரசாங்கம் தெற்கில் கொண்டாடுகிறது. ஆனால் அது பரிபூரணமான வெற்றிக் கொண்டாட்டமாக தெரியவில்லை.
புலிகளுக்கு எதிரான போருக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை ஒதுக்கிவிட்டு, அரச தலைவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்துவதும் நாட்டில் சகல சமூகங்களும் அந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமையுமே அது பரிபூரணமான வெற்றிக் கொண்டாட்டமாகாததற்குக் காரணமாகும்.
போரின் இறுதிக் காலத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ஏற்றதன் பின்னர் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஒருவராவார்.
எனவே தான் போர் முடிவடைந்த உடன், அவர் உலகிலேயே தலைசிறந்த இராணுவத் தளபதியென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐ.டி.என் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.
ஆனால், அவர் அரசியல் ரீதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மோதிய உடன் அரசாங்கம் அவரை இராணுவ வரலாற்றிலிருந்தே வெளியேற்றிவிட்டது. அவரும் அவசரப்பட்டு அரசாங்கத்தை ஆத்திரமூட்டினார்.
இந்த மோசமான அரசியல் கலாசாரத்தின் காரணமாக, முன்னர் போலவே இவ்வருடமும் நடைபெற்ற ஐந்தாவது இராணுவ வெற்றிக் கொண்டாட்டத்திற்காகவும் வெற்றிக்காக இராணுவத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி அழைக்கப்படவில்லை.
அதேவேளை, போர் முடிவடைந்தமையினால் மிகவும் கூடுதலாக நன்மையடைந்தவர்கள் தமிழ் மக்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் போர் அவர்களது முன்றலிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வீதிகளிலுமே நடைபெற்றது.
அவர்களே போரினால் பெருமளவில் கொல்லப்பட்டனர். அவர்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அவர்கள் மீதே இரு சாரரினதும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.
அவர்களது சிறு பிள்ளைகளையே புலிகள் பலாத்காரமாக பிடித்துக் கொண்டு போய் போர் களத்திற்கு அனுப்பினார்கள். அவர்களது உறவினர்களே நூற்றுக் கணக்கில் காணாமற் போனார்கள்.
இப்போது, அவர்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்வதும் இல்லை. ஷெல்கள் வீழ்வதும் இல்லை. புலிகள் பிடித்துக் கொண்டு போவார்களோ என்ற அச்சத்தோடு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் தேவையுமில்லை.
ஆனால், அந்த நிலைமையை உருவாக்கித் தந்த இராணுவ வெற்றியை தமது வெற்றியாக ஏற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராகவும் இல்லை என்றே தெரிகிறது. இராணுவ வெற்றியை தமது வெற்றியாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைமையை உருவாக்க அரசாங்கமும் தவறிவிட்டது.
தமிழ் மக்கள், அந்த இராணுவ வெற்றியினால் தாம் அடைந்த நன்மையை விட அந்த வெற்றியின் போது தாம் இழந்தவற்றை சிந்திக்கும் நிலையிலேயே இருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் அந்த இராணுவ வெற்றி நாளை கரி நாள் என்றும் இன ஒழிப்பு நாள் என்றும் அழைக்கிறார்கள். எனவே அரசாங்கத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களில் வெற்றிக்காக உழைத்த இராணுவத் தளபதியும் கலந்து கொள்ளவில்லை.
அந்த இராணுவ வெற்றியினால் மிகக் கூடுதலாக நன்மையடைந்த தமிழ் மக்களும் கலந்து கொள்ளவில்லை. எனவே தான் இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் பரிபூரணமான கொண்டாட்டமாகவில்லை என நாம் கூறுகிறோம்.
இந்த நாளை கரி நாளாகவும் இன ஒழிப்பு நாளாகவும் அழைப்பது மட்டுமல்லாது, தமிழ் மக்களில் பலர் அதனை போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு போரில் இறந்தவர்களை நினைவுகூர்தல் இப்போது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகியுள்ளது.
தெற்கில் இரண்டு கிளர்ச்சிகளை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியும் வடக்கில் கிளர்ச்சி நடத்திய புலிகள் அமைப்பும் இரண்டு நாட்களில் அக் கிளர்ச்சிகளில் உயிரிழந்த தமது உறுப்பினர்களையும் தமது உறவினர்களையும் நினைவுகூர்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி தமது முதலாவது கிளர்ச்சியை 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்தது. எனவே அந்த கிளர்சியின் போது கொல்லப்பட்ட தமது சகாக்களை அக் கட்சி ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நினைவுகூர்கிறது.
அதனை அக் கட்சி சித்திரை வீரர்களை நினைவுகூர்தல் என்ற அர்த்தப்பட ‘பக் மஹ விருவன் செமரும’ என்று சிங்களத்தில் அழைக்கிறார்கள்.
மக்கள் விடுதலை முன்னிணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி அக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர, இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
எனவே அக் கட்சி தமது இரண்டாவது கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நினைவுகூர்கிறது. அதனை அவர்கள் மார்கழி வீரர்களை நினைவுகூர்தல் என்ற அர்த்தப்பட ‘இல் மஹ விரு செமரும’ என்றழைக்கிறார்கள்.
அரச படைகளுடன் ஏற்பட்ட மோதல்களின் போது முதன் முதலில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் காயப்பட்டு 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியே கொல்லப்பட்டார்.
எனவே புலிகள் தமது கிளர்ச்சியின் போது கொல்லப்பட்ட தமது சகாக்களை நினைவுகூரும் நாளாக நவம்பர் 27ஆம் திகதியை பிரகடனப்படுத்தியிருந்தனர்.
பின்னர் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் திகதியையும் உள்ளடக்கும் வகையில் நவம்பர் 21ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரையிலான வாரத்தை மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தியிருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கொல்லப்பட்ட நாளை அக் கட்சி தமது இரண்டாவது நினைவுகூர்தல் தினமாக பிரகடனப்படுத்தியிருப்பதைப் போலவே புலிகளின் ஆதரவாளர்களும் தமது தலைவர் கொல்லப்பட்ட மே மாதம் 18ஆம் திகதியை மற்றொரு நினைவுகூர்தல் தினமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியே பிரபாகரன் முல்லைத்தீவு மாட்டத்தில் நந்திக் கடலோரத்தில் கொல்லப்பட்டு இருந்தார்.
தமிழ் மக்கள், மே மாதம் 18ஆம் திகதி நினைவுகூர்வது புலிகள் இயக்கத்தையே என்றும் புலிகளை நினைவுகூர்தல் சட்டவிரோதமானது என்றும் எனவே அதற்கு இடமளிக்க முடியாது என்றும் வேண்டும் என்றால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தனிப்பட்ட முறையில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரலாம் என்றும் கூட்டான நினைவுகூர்தல்களுக்கு இடமளிக்க முடியாது என்றும் வடக்கில் இராணுவம் மற்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால், தாம் நினைவுகூர்வது தமது பிள்ளைகளையே என்றும் போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூர தமது மக்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் தமிழ் தலைவர்கள் வாதிடுகிறார்கள்.
இது தான் இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை. அதேவேளை தெற்கில் அரச எதிர்ப்பு கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி, கொல்லப்பட்ட தமது சகாக்களை நினைவுகூர முடியும் என்றால் வடக்கில் தமிழ் மக்கள் போரின் போது கொல்லப்பட்ட தமது உறவினர்களை நினைவுகூர்தல் ஏன் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ் மக்கள் தாம் நினைவுகூர்வது புலிகளை அல்ல தமது பிள்ளைகளையே என்று கூறிய போதிலும் உண்மையிலேயே அவர்கள் நினைவுகூர்வது புலிகளையா அல்லது தமது உறவினர்களையா என்பது தெளிவில்லை. ஏனெனில், வடக்கில் நினைவுகூர்தல்கள் இடம்பெறும் இரண்டு நாட்களும் புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட நாட்களாகும்.
நவம்பர் 27 என்பது புலிகளின் மாவீரர் நாளாகும். போர் இடம்பெற்ற வருடங்களில் மற்றொரு நாளொன்றில் இறந்த ஒருவரை, அவர்களது உறவினர்கள் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூர்ந்துவிட்டு தாம் புலிகளை நினைவுகூரவில்லை என்று வாதிடலாமா?
நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூர்தல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுவிட்டு தாம் வருடத்தில் மற்றொரு நாளில் இறந்த தமது மகனை அல்லது தந்தையை அல்லது கணவனை நினைவுகூர்ந்ததாக வாதிடலாமா?
அதேவேளை தமது உறவினர் புலி உறுப்பினராக இருந்தாலும் நவம்பர் 27ஐத் தவிர்த்து அவர் இறந்த நாளிலேயே நினைவுகூர்ந்தால் அது சர்ச்சைக்குரியதாகிவிடுமா? பாதுகாப்பு படையினர் அதற்கு தடை விதிப்பார்களா?
மே மாதம் 18ஆம் திகதியும் அது போலவே சர்ச்சைக்குரிய நாளாகும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் போர் களத்தில் சிக்குண்டிருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இருந்தார்கள்.
18ஆம் திகதியாகும் போது போர் களத்தில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்;டு இருந்த மக்கள் புலிகளின் அனுமதியுடனோ அல்லது அனுமதியில்லாமலோ இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்தார்கள். சாதாரண மக்கள் மட்டுமன்றி புலி உறுப்பினர்கள் பலரும் அம் மக்களோடு சென்றிருந்தார்கள்.
18ஆம் திகதி சாதாரண மக்கள் போர் களத்தில் சிக்குண்டு இருந்தார்களா என்பது சந்தேகமே. அன்று போர் களத்தில் சிக்குண்டு இருந்தவர்கள் புலி உறுப்பினர்கள் சிலரும் புலித்தலைவர்கள் சிலரும் மட்டுமே.
2009 ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர் பிரபாகரனே. எனவே மே மாதம் 18ஆம் திகதி நினைவுகூரப்படுவது புலிகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அன்றைய நினைவுகூர்தலும் சர்ச்சைக்குரியதாகிவிடுவது விளங்கிக்கொள்ளக் கூடியதே.
புலிகளை நினைவுகூர்ந்துவிட்டு தாம் புலிகளை நினைவுகூரவில்லை என்று வாதிடுவதாக இருந்தால் அது புலிகளை நினைவுகூர்வது தவறு என்று தாமே ஏற்றுக் கொள்வதற்குச் சமமாகும்.
எனவே உண்மையிலேயே ஒருவர் புலிகளை நினைவுகூர்வதாக இருந்தால் அதனை வேறு சொரூபத்தில் செய்வதில் அர்த்தம் இல்லை. அதற்கு அனுமதி கிடைக்காமை வேறு விடயம்.
அதேபோல், ஒருவர் தமது பிள்ளைகளை தான் நினைவுகூர்வதாக இருந்தால் அதற்காக புலிகளின் நினைவு நாளொன்றை தெரிவு செய்வதும் பொருத்தமானதாக தெரியவில்லை.
மக்கள் விடுதலை முன்னணியினர் அரச விரோத கிளர்ச்சிகளின் போது கொல்லப்பட்ட தமது சகாக்களை நினைவுகூர முடியும் என்றால் போரில் கொல்லப்பட்ட புலிகளை நினைவுகூர்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வியொன்று எழுப்பப்படுகிறது.
புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம்; ம.வி.மு. அவ்வாறானதல்ல. ம.வி.முவும் 1983ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி தடைசெய்யப்பட்டதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி அதன் தடை நீக்கப்பட்டும் 1994 ஆம் ஆண்டு வரை அக் கட்சி பகிரங்கமாக தமது ‘சித்திரை வீரர்களை’ நினைவுகூரவில்லை. அரசாங்கம் அதற்கு இடமளிக்கவும் இல்லை.
எனவே, இப்போதைய ம.வி.முவின் நினைவுகூர்தல்களோடு புலிகளின் நினைவுகூர்தல்களை ஒப்பிட முடியாது. ம.வி.முவின் நினைவுகூர்தல்களை புலிகளல்லாத ஏனைய முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களின் நினைவுகூர்தல்களோடு தான் ஒப்பிட முடியும்.
புளோட,; டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய அமைப்புக்கள் ஒரு காலத்தில் ம.வி.மு. மற்றும் புலிகள் அமைப்பு ஆகியவற்றைப் போலவே கிளர்ச்சிக் குழுக்களாக இருந்தன. ஆனால் அவை இப்போது ம.வி.மு.வைப் போலவே ஜனநாயக அமைப்புக்களாக கொல்லப்பட்ட தமது தலைவர்களை நினைவுகூர்கின்றன. அதற்குத் தடை இல்லை.
எனவே, இந்த விடயத்தில் ஒருவர் தெளிவாக இருக்க வேண்டும். புலிகளின் ஆதரவாளர்கள் புலிகளை நினைவுகூர நினைப்பது தவறல்ல. ஆனால் அதற்கு சட்டத்தால் இடமளிக்க்கப்பட வேண்டும் என்று கோருவது கேளிக்கூத்தாகும்.
உமா மகேஸ்வரனினதோ அல்லது சிறீ சபாரத்தினத்தினதோ ஞாபகார்த்தங்களுக்கு புலிகள் இடமளிக்காததைப் போல் அரச படைகளும் புலிகளை நினைவுகூர இடமளிக்க மாட்டா.
அதே உமா மகேஸ்வரனினதும் சபாரத்தினத்தினதும் பத்மநாபாவினதும் அரசியல் கட்சிகள,; புலிகளை நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும் என்று கோருவது பெருந்தன்மையா அல்லது புலிகள் மீதான மக்களின் ஆதரவை அல்லது அனுதாபத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்திலான தந்திரமா என்பது புரியவில்லை.
அதேவேளை, தமது உறவினர்களை நினைவுகூர்வதாகக் கூறி புலிகளை நினைவுகூர்வதும் புலிகளை நினைவுகூர்வதற்கு எதிரான தடையை நியாயப்படுத்துவதற்கு சமமாகும். அதேபோல் உண்மையிலேயே தாம் நினைவுகூர்வது தமது உறவினர்களையென்றால் அதனை புலிகளின் நினைவுகூரும் நாட்களில் செய்யத் தேவையில்லை.
அது தமது நோக்கத்திற்கு எதிராக தாமே அரச படைகளை தூண்டிவிடும் செயலாகும்.
போரில் இறந்த தமது பிள்ளைகளை தனிப்பட்ட முறையில் நினைவுகூரலாம் என அரச படைகள் கூறுகின்றன. ஆனால் ஒருவர் புலி உறுப்பினராக இருந்து கொல்லப்பட்ட தமது மகனை நினைவுகூர ‘மாவீரர் துயிலும் இல்லம்’ என புலிகளால் அழைக்கப்பட்ட மயானமொன்றுக்குச் செல்ல முற்பட்டால் படையினர் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
இறந்தவர்கள் புலிகளாக இருந்தாலும் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பது தவறல்ல.
ஆனால் தெற்கிலும் வடக்கிலும் அது இப்போது அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. போர் முடிந்துவிட்டது. போரில் இறந்தவர்களை வெறுப்பதில் அர்த்தம் இல்லை. அவர்களுக்காக பிரார்த்திப்பதே சிறந்தது. தெற்கிலும் வடக்கிலும் உள்ளவர்கள் கூட்டாக சேர்ந்து அப் பிரார்த்தனைகளை நடத்த முடியுமாக இருந்தால் அது தான் உண்மையான நல்லிணக்கமாகும்.