இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் ஒரு பரபரப்பை அவதானிக்க முடிகின்றது. தமிழ்  மக்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு நெருங்கி வந்துவிட்டது என்ற தோற்றத்தை இப்பரபரப்பு உருவாக்குகின்றது.

மோடி மிகவும் கண்டிப்பானவர் என்றும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பார் என்றும் சந்திக்குச் சந்தி மக்கள் பேசும் அளவுக்கு பிரசாரம் களைகட்டியது.

இலங்கைத் தமிழருடைய பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படுமாறு மோடிக்கும் மோடியுடன் இணைந்து தீர்வைப் பெற்றுத் தருமாறு ஜெயலலிதாவுக்கும் சம்பந்தன் தனித்தனியாக கடிதங்கள் அனுப்பியிருக்கின்றார்.

imagesதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படுவது பற்றி முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைக்கு மத்தியில் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்துத் தமிழரின் பிரச்சினைகள் என்று குறிப்பிட்டது சாணக்கியமா? அல்லது சந்தர்ப்பவாதமா?

தமிழ் மக்கள் இன்று   பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுகின்ற போதிலும்   இனப் பிரச்சினைக்கான தீர்வே பிரதானமானது. மற்றைய பிரச்சினைகள் இனப் பிரச்சினையின் பக்க விளைவுகள் என்பதால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது அவை இயற்கை மரணம்மெய்த கூடியவை.

இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று நான்கு வருடங்களுக்கு மேலாகத் தமிழ்த் தலைவர்கள் கூறுகின்ற போதிலும் இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் இதுவரை ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை.

இந்தியா முன்வைத்த தீர்வு பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் இலங்கையின் தீர்வு வெட்டிக் குறுக்கப்பட்ட பதின் மூன்றாவது திருத்தம். தமிழ்த் தலைமை ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை.

ஆனால் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் படி தொடர்ச்சியாக இந்தியாவைக் கேட்கின்றார்கள்.

இதற்கு அப்பால் ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை என்பதும் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழான மகாண சபையைச் செயற்படுத்துவதற்கு ஏன் ஆர்வம் காட்டவில்லை  என்பதும் விளங்கவில்லை.

பதின் மூன்றாவது திருத்தத்தை வெட்டிக் குறுக்கியவர் ஜே.ஆர் ஜெயவர்த்தன. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் இல்லை என்று அவர் எடுத்த தீர்மானத்தில் இன்று ராஜபக்ஷ உறுதியாக நிற்கின்றார்.

இரண்டு அதிகாரங்களையும் மாகாண சபைக்கு வழங்கவில்லை என்பதற்காக ராஜபக்ஷ அரசாங்கத்தை கண்டிக்கும் தமிழ்த் தலைவர்கள் இவ்விரு அதிகாரங்களும் மாகாண சபைக்கு இல்லை என்று தீர்மானித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்க அரசியல் நடத்துகின்றனர்.

பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல அண்மையில் கூறினார்.  இத்திருத்தத்தை ( வலுக்குறைப்புச் செய்யும் வகையில் ) மேலும்   திருத்த வேண்டும் என்று கூறியதை ரணில் இன்னும் திரும்பப் பெறவில்லை.

இப்படியும் ஒரு அரசியல்.

முள்ளிவாய்க்கால் தோல்விக்குப் பின் தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொரு கூட்டத்தில் ஒவ்வொரு நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்குத்  தந்து கொண்டிருக்கின்றார்கள்.  சர்வதேச சமூகம் இனப்  பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்று முதலில் கூறினார்கள்.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரைச் சநதித்துப் பேசிய சம்பந்தன், நில அபகரிப்பு, அரசியல் தீர்வு ஆகியவற்றில் விரைவில் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கு அளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்குச் சென்று இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்ததும்  எல்லாவற்றுக்கும் விரைவில் தீர்வு வரும் என்று நம்பிக்கையூட்டினார்கள். மோடியின் அரசாங்கம் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை இப்போது வளர்க்கப்படுகின்றது.

சர்வதேச சமூகம் இனப் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று சொல்லிக்கொண்டு மோடியின் அரசாங்கத்தை நாடுவதிலுள்ள முரண்பாட்டுக்கு என்ன விளக்கம்?

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே மோடி வலியுறுத்துவார் என்ற தகவல் அங்கிருந்து கிடைக்கின்றது. பதின்மூன்றாவது  திருத்தம் இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வல்ல.

தீர்வு முயற்சியின் ஆரம்பமாக அதை ஏற்று அதிலிருந்து படிப்படியாக முன்னேறி முழுமையான அரசியல் தீர்வை அடைய வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தின் இந்த அம்சத்தை நிரகரித்துக்கொண்டு அரசியல் தீர்வாக அத்திருத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை.

பிரதமர் மோடி எவ்வளவு வலியுறுத்தினாலும் இலங்கை அரசாங்கம் இணங்காவிட்டால் என்ன நிலை? தெரிவுக் குழுவின் மூலமே தீர்வு என்று பிடிவாதமாகச் சொன்னால் என்ன செய்வது? இதற்காக இலங்கை மீது இந்தியா படையெடுக்காது.

சொந்த மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சொந்தமாக ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துச் செயற்படாமல் வெளிநாடுகளை எதிர்பார்த்தால் இது தான் நிலை.

Share.
Leave A Reply