இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்கு உட்படுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்துபு, ஜே.வி.பி. ஆகிய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அத்துடன் இச்செயல் பொறுப்பற்ற செயல் மாத்திரமன்றி, இவ்வாறான அனுபவ முதிர்ச்சியற்ற போக்குகளே போர்க்குற்றப் பொறுப்புக் கூறல் பிரச்சினை மேலெழவும் காரணமாக அமைந்தன என்றும் சுட்டிக்காட்டியுள்ளன,இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் கடந்த வாரம் அவதூறை உண்டாக்கும் வகையில் வெளியிட்ட கட்டுரையினால் தர்ம சங்கடமான நிலை உருவானது.
இந்திய உயர் மட்டத்தில் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து இலங்கை நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து 24 மணித்தியாலத்திற்குள்ளாக குறித்த கட்டுரை மற்றும் படம் தொடர்பில் இலங்கை மன்னிப்புக் கோரியது.
மேலும் தனது நிபந்தனையற்ற மன்னிப்பு கோருதலில் அந்தக் கட்டுரை இணையதளத்தில் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக புதிய தகவலொன்றும் கூறப்பட்டது. இது நாட்டின் பாதுகாப்புத் துறையில் பொறுப்பற்ற தன்மை காணப்பட்டமையையே எடுத்துக் காட்டுகிறது.
இந்த அனுபவமற்ற நிலைப்பாடே போர்க் குற்ற பொறுப்புக் கூறலில் பிரச்சினைகள் மேலேழுந்தபோது, இலங்கையை சிக்கலுக்குள் அமிழ்த்தின. மேலும் பாதுகாப்பு அமைச்சில் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அஜாக்கிரத தன்மையை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சு இந்த கேலி சார்ந்த நடவடிக்கை மூலம் மன்னிப்பை கோரியிருந்தாலும் தகுந்த ஆதாரங்கள் இன்றி இராஜதந்திரிகளையும் அந்நிய அரசுகளையும் அவமதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.
ஒரு வகையில், இராஜதந்திர அமளியை இந்த நிகழ்வு தூண்டிய போதும், இந்த மன்னிப்பை உள்ளூர் ஆங்கில இதழ்கள் வெளியிடாமல் தவிர்த்துள்ளன. இலங்கை அரசாங்கத்தின் அதிகார மையமாக விளங்கும் பாதுகாப்பு அமைச்சினால் தூண்டப்படும் அச்சக் கலாசாரம் இதன் மூலம் விளங்குகின்றது.
இந்த நிலையில் சட்டவாட்சி, குற்றங்களுக்கெதிரான நடவடிக்கை என்பனவற்றை அரசாங்கம் மதிக்குமென ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. நீதி முறைமையின் முறிவை அரசே சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோரை அவதூறுக்குட்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினால் உலகளாவிய ரீதியில் இலங்கைக்குப் பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை – இந்திய நல்லுறவிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றில் இவ்வாறான செய்தியொன்று தவறுதலாக வெளியானது என்று பொறுப்பற்ற வகையில் பதில் சொல்வதிலோ மன்னிப்புக் கோருவதிலோ எவ்வித பயனுமில்லை. மாறாக, முறையான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்தி தொடர்பில் இலங்கை இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியமை தொடர்பி்ல் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் உள்நாட்டிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி மிகவும் பொறுப்பற்ற வகையிலேயே நடந்து கொள்கிறது. இந்த நிலைமையானது நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இவ்வாறு பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டமையினாலேயே இன்று சர்வதேச மட்டத்தில் பாரிய அழுத்தங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது மாத்திரமல்லாமல் வாய்ச்சவுடல்களாலும் வீண் பேச்சுக்களாலும் மேலும் மேலும் பிரச்சினைகளை தோற்றுவித்து வருகிறது.
பாதுகாப்பு அமைச்சு என்பது மிகவும் முக்கியமான ஓர் அமைச்சாகும். அவ்வாறான முக்கிய அமைச்சொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றில் ஒரு செய்தி வெளியான பின்னர் அந்த செய்தியானது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கூட அறிய முடியாதவர்களையே பாதுகாப்பு அமைச்சு, முக்கிய பொறுப்புக்களில் வைத்திருக்கிறது என்பது கவலையளிக்கிறது.
ஒரு விடயத்தை செய்வதற்கு முன்னர் அதை பற்றி நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் பின்னரே அதனை செயற்படுத்த வேண்டும். அல்லாமல் மனதுக்குப் பட்டதையெல்லாம் சற்றேனும் சிந்திக்காமல் நடைமுறையில் செயற்படுத்த முனைந்தால் விளைவு விபரீதமாகவே அமையும்.
எமது அயல் நாடான இந்தியா எப்பொழுதும் எமக்குத் தேவையான நாடாகும். அதனுடன் முறையான இராஜதந்திர தொடர்புகளைப் பேண வேண்டும். மாறாக, நாட்டிற்குள் காட்டும் சண்டித்தனங்களை அவர்களிடம் காட்டக் கூடாது. அதனால் பாதிப்பு அவர்களுக்கு அல்ல எமக்கே.
இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடி உலகம் ஏற்றுக் கொண்ட ஓர் அரசியல் தலைவராகத் திகழ்கிறார். அத்தோடு தமிழக முதல்வர் என்பதும் முக்கியத்துவமான ஒரு பதவி.
இவ்வாறானவர்களுக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொறுப்புவாய்ந்த ஒரு இணையத்தளம் செய்தி வெளியிடுவது என்பது மிகவும் பாரதூரமான செயற்பாடாகும். அது மாத்திரமன்றி இலங்கை – இந்திய நல்லுறவிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் சில இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வரும் இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமொன்று இவ்வாறான செய்தி வெளியிட்டிருப்பதை இந்தியா சர்வ சாதாரணமாகக் கருதாது என்பது மாத்திரம் உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டு கட்டுரைக்கு முழுப் பொறுப்பையும் இலங்கை அரசாங்கமே ஏற்க வேண்டும். சர்ச்கைக்குரிய கட்டுரை மற்றும் படம் உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டது என்று சாக்குப்போக்கு கூறமுடியாது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் இது போன்ற அவதூறு ஏற்படுத்தும் செய்திகள், கட்டுரைகளை வெளியிடுவது இது முதற் தடவையல்ல.
ஒரு முறை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒரு பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் பத்திரிகையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டு தேசத் துரோகிகள் என விமர்சித்து கட்டுரையும் வெளியிட்டிருந்தது. இணையத்தளம் வெளியிட்ட சட்டத்தரணிகளின் புகைப்படங்களில் என்னுடைய படமும் வெளியிடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்து என்றும் எம்.ஏ.சுமந்திரனக் எம்.பி. தெரிவித்தார்.
ஜே.வி.பி. பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் வெளியிட்ட கட்டுரைக்கு இலங்கை இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியிருப்பது இலங்கையும் இலங்கை மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.
அரசாங்கம் தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக இவ்வாறு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவது இது முதன் முறையல்ல. அரசாங்க சார்பான இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை வழமையாக்கிக் கொண்டுள்ளன.
இவ்வாறு மன்னிப்பு கோருவதன் மூலம் பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் வெளியிடும் கட்டுரைகள் செய்திகள் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு அதன் பின்னர் பகிரங்க மன்னிப்புக் கோருவது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமென்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ.ஹஸனலி இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் நேரடியாக ஜனாதிபதியின் கீழ் வருவது. எனவே இந்த இணையத்தளத்தில் மன்னிப்பு கேட்குமளவுக்குக் கட்டுரை வெளிவந்துள்ள என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளிநாடொன்றுடன் சம்பந்தப்பட்ட கட்டுரை என்பதால் இலங்கை அரசு மன்னிப்புக் கோரியுள்ளது. இதுவே உள்ளூர் நபர்கள் அல்லது அமைப்புக்களுக்கு எதிராக பொய்த் தகவல்களை வெளியிட்டிருந்தால் இவ்வாறு அரசு மன்னிப்புக் கோரியிருக்காது. அத்துடன் விமர்சனத்துக்குள்ளாகிய நபர்கள் அல்லது அமைப்புக்கள் அச்சம் காரணமாக வாய்மூடி மௌனம் சாதிக்க வேண்டிய நிலையே ஏற்படும்.
இந்த இணையத்தளத்தில் இதுவரை வெளிவந்த செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்ன மாதிரயானவை என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.