முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்க உளவாளி இருந்ததாக அவரின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார். இந்நிலையில் அவரது முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
விடுதலைப் புலிகள்
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ரகசியமாக ஊடுருவி தஞ்சம் அடைந்தார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை
ராஜீவ் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட போதிலும் இந்தக் கொலை தொடர்பான முழு உண்மை வெளிவராது என்று தான் நான் நினைக்கிறேன்.
பல தேசங்களில் உள்ள சக்திவாய்ந்த நபர்களின் சதி தான் ராஜிவ் கொலை என்பது என் கருத்து. ராஜீவ் வீட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் நபருக்கு ராஜீவின் நெருங்கிய வட்டத்தில் இருந்த முக்கிய தகவலை அளித்துள்ளனர்.
சோனியாவும்
1991ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக அமேதியில் இருந்த சோனியாவும் என்னை போன்றே நினைக்கிறார். யாரோ ஒருவர் புலிகள் தரப்புக்கு ரகசிய தகவல்கள் தந்ததாக அவரும் கருதுகிறார்.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்திற்கு மட்டுமே விடுதலைப் புலிகளின் சதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ராஜீவ் காந்தியை கொலை செய்ய தயாரானபோது விடுதலைப் புலிகள் தாங்கள் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம் என்று பிறரை நம்ப வைத்துவிட்டனர். இறுதியில் அவர்கள் தான் வென்றார்கள்.
ஷ்ம நரைன் சிங்
எனது பார்வையில் மத்திய உளவுத் துறையான ஐபி மற்றும் தமிழக ஆளுநர் பீஷ்ம நராயண் சிங் ஆகியோர் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு தகவல்களைத் தெரிவிப்பதில் தோல்வி அடைந்துவிட்டனர்.
ஆர்.டி. பிரதான் ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். மேலும் அவர் 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை சோனியா காந்தியின் அலுவலக பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.