மனித உரிமை ஆணையாளர் நியமித்த சர்வதேச விசாரணைக்குழு தமது பணிகளை துரிதமாக தொடர்கின்றது. இரகசியம் பாதுகாக்கப்படும் என்பதில் அது மிகவும் கண்டிப்புடன் இருந்து வருகின்றது.
இருப்பினும் சில சர்வதேச ஊடகங் கள் விசாரணைகள் தொடர்பான சில செய்திகளை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக இன்னர்சிட்டி பிரஸ்லா மெடலே (பிரான்ஸ்) ஸ்பீகல் (ஜேர்மனி) வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை அவற்றில் முன்னணி வகிக்கின்றன.
அவை வெளியிட்டுள்ள சில விபரங் கள் விசாரணையில் திருப்பு முனைகள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றன. இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்றங்களை நிரூபிக்கும் மூன்று சாட்சியங் கள் புதிதாக இணைந்துள்ளன என இன்னர்சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.
ஆனால் அந்த சாட்சியங்களின் பெயர் விபரங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை யென்றும் அது குறிப்பிடுகின்றது. எனவே, அவர்களின் சாட்சியங்கள் மிக வலுவானது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டுகின்றது.
போரின் போது இடம்பெற்ற இராணுவ இரகசியங்கள் பலவற்றை அவர்கள் வெளியிட்டுள்ளதினால் விசாரணைக் குழு புதிய திருப்புமுனையொன்றை எதிர்கொண்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்றம் மானுடத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றை விசாரிக்க விசாரணைக்குழு தற்போது சாட்சியங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு மொத்தமாக 2020 சாட்சியங்களை விசாரித்திருந்தது. அந்த சாட்சியங்களின் அடிப்படையிலேயே அது தனது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
எனவே அதே சாட்சியங்களை மீண் டும் விசாரிக்காமல் புதிய சாட்சியங் களை விசாரிக்க தற்போதைய சர்வதேச விசாரணைக்குழு ஆர்வம் காட்டிவருகின் றது. அவ்வகையில் புதிய சாட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மற்றொரு இராணுவ சாட்சியம் குறித்தும் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிடுகின்றது. செனல் 04 தொலைக்காட்சியில் தொடர் ச்சியாக சில காணொளிப்பதிவு கள் வெளியாகின. இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அவையென்றும் அது குறிப்பிட்டிருந்தது.
அந்த காணொளிப் பதிவுகள் தமக்கு எப்படிக்கிடைத்தன என்பதையும் செனல் – 04 குறிப்பிட்டிருந்தது. அவற்றை பதிவு செய்த இராணுவத்தினரிடமிருந்தே பெற்றதாக அது குறிப்பிட்டிருந்தது. ஆனால் செனல் – 04 வெளியிட்ட சகல தகவல்களையும் இலங்கை அரசு முற்றாக நிராகரித்து விட்டது.
இருப்பினும் அவ்வாறு காணொளிப்பதிவை பதிவு செய்த ஒருவர் வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்றும் அவரும் ஐ.நா. சர்வதேச விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க இருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனாலும் இவ்வாறான சாட்சியங்களையும் இலங்கை அரசு நிராகரிக்கும் என்பதனையும் அது மறுக்கவில்லை.
ஆனால் ஆதாரபூர்வமான உண்மைத்தகவல்களை வெளிக்கொணர்வதே விசாரணைக்குழுவின் நோக்கமாக உள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் என்பது ஐ.நா. உள்ளக விசாரணையில் மிக முக்கியமாக குறிப்பிட்டப்பட்ட விடயம். அதனால்தான் அதனை முதலில் விசாரிக்க குழு முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் உண்மையானது தானா என்பது குறித்து ஐ.நா. விசாரணைக்குழு இதுவரை பகிரங்க விசாரணை நடத்தவில்லை. எனவே புதிய விசாரணைக்குழு இதில் தமது முழுக்கவனத்தையும் பதித்துள்ளது. நோர்வேயின் சமாதானத்தூதுவராக இருந்த எரிக்சொல்ஹெய்ம் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து அறிந்தவர். எனவே அவர் இக்குழு முன் நேரில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார்.
வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அச்சமயம் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் எரிக்சொல்ஹெய்மும் ஒருவர் என்றே குறிப்பிடுகின்றது. அதனால் அவரின் சாட்சியத்தின் முக்கிய விடயங்கள் வெளியாகலாம்.
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் சாட்சியாளர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் ஜெனிவா பணிமனை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ ஏனைய மனித உரிமை அமைப்புக்களோ அரசு சாரா நிறுவனங்களை சாட்சியங்களாக முன்னிலைப்படுத்த முடியாது. அவ்வாறான அமைப்புக்களின் சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஐ.நா. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் இருந்து சாட்சிகள் தொடர்பு கொள்ளலாம். சாட்சியங்களின் நம்பகத்தன்மை இங்கு மிக முக்கியம். நம்பத்தகுந்த சாட்சியங்கள் என விசாரணைக்குழு கருதுமிடத்து மாத்திரமே அவ்வாறானவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள்.
ஐ.நா. நிபுணர்குழு விசாரணை நடைபெற்ற போதும் இலங்கைக்கு சென்று சாட்சியங்களை விசாரிக்க முடியவில்லை. அதற்கான அனுமதி இலங்கை அரசிடமிருந்து கிடைக்கவில்லை.
அதேபோன்றே புதிய விசாரணைக்குழுவும் இலங்கை வர இலங்கை அரசு அனுமதிக்க மாட்டாதென தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மூலமே அரசு அதனை உலகுக்கு அறிவித்து விட்டது.
ஆனால் நிபுணர் குழுவின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சாட்சிகள் புலம்பெயர் நாடுகளில் குறிப்பிட்ட சிலரே இருந்தனர். ஆனால் தற்போதைய புதிய விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க பலர் முன்வந்துள்ளனர்.
இலங்கை அரச படைகளினால் பாதிக்கப்பட்ட பலர் அரசியல் தஞ்சம் கோரி புலம்பெயர் நாடுகளுக்கு வந்துள்ளனர். அவர்களிடம்போதுமான ஆதாரங்களும் ஆவணங்களும் காணப்படுகின்றன.
அவர்கள் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன் வந்துள்ளனர். அதனால் ஐ.நா. பணிமனைகளில் அவர்கள் தமது சாட்சிய விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறான நம்பகத்தகுந்த சாட்சியங்களுக்கு விசாரணைக்குழு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளது.
இறுதி கட்டப்போரின்போது பெரும் அவலங்களை சந்தித்த மக்களின் சாட்சியங்கள் மிக முக்கியமானவை. அவ்வாறான சாட்சியங்களின் சாட்சியங்களை விரிவாக விசாரணை செய்ய விசாரணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
நேரில் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும்போது உண்மை நிலைப்பாடு குறித்து விசாரணைக்குழு கூடிய அக்கறை காட்டும். அதற்காக விசாரணைக்கான நேரமும் விரிவுபடுத்தப்படும் என ஜெனிவா பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிலவேளை ஒரே சாட்சி இரண்டு நாட்களுக்கு மேல் விசாரணை செய்யப்படலாம். விசாரணைக்குழு தெளிவான ஆதாரங்களை பெறும் வரை சாட்சி விசாரிக்கப்படுவார் என்ற விடயமும் தற்போது வெளியாகியுள்ளது.
விசாரணை மிகவும் இரகசியமாக நடைபெற்றாலும் விசாரணைக்குழுவின் அறிக்கை சர்வதேச ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச மரியாதைக்குரிய மூன்று ஆலோசகர்களும் ஒவ்வொரு விசாரணை அமர்வின் போதும் சமூகமளிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை. தாம் அனுபவித்த நேரில் கண்ட விபரங்களை மிகவும் ஆறுதலாக தெளிவுபடுத்தும் விசாரணையையே அவர்கள் விரும்புகின்றனர். அதற்கான சகல ஏற்பாடுகளையும் விசாரணைக்குழுவினருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வித ஊதியமும் பெறாமல் அவர்கள் மூவரும் இந்த விசாரணைகளில் பங்கெடுக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நியமித்த சர்வதேச ஆலோசகர்களைப் போன்றே மூன்று சர்வதேச ஆலோசகர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். அக்குழுவுக்கு சேர். டெஸ்மன்ட்சில்வா தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பினான்ஸியல் டைம்ஸ் என்ற ஊடகத்தில் அவரைப்பற்றி வெளிவந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி மிகமோசமாக அவர் பேசியதாக அதில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் தாம் இவ்வாறு பேசவே இல்லையென்றும் ஊடகத்தில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு மாநாட்டில் தாம் கலந்து கொள்ளவே இல்லையென்றும் சேர் டெஸ்மன்ட் சில்வா தெரிவித்த மறுப்பும் அதே ஊடகத்தில் வெளியாகி இருந்தது.
எனினும் 2011ம் ஆண்டில் அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி என அந்த ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றிய உரையை ஏன் இப்போது அந்த ஊடகம் வெளியிட்டது என்பதற்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை.
வீ.ஆர். வரதராஜன்