மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தவறுதலாக ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே ஒருவருடைய கால் சிக்கிக்கொண்டது. அவரை காப்பாற்ற சக பயணிகள் எல்லோரும் மொத்தமாக சேர்ந்து ரயிலை தங்கள் கையாலே சிறிதளவு சாய்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் என்ற நகரத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் வந்த ரயிலில் பயணி ஒருவர் ஏற முயன்றார். அந்த சமயத்தில் அவருடைய கால் திடீரென ஸ்லிப் ஆகி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள சிறு இடைவெளியில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த நபர் அதிர்ச்சி அடைந்து வலியால் அலறினார்.
உடனடியாக தீயணைப்பு படையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் மீட்புப்படையினர் வருவதற்குள் பயணி ஒருவர் கொடுத்த ஐடியாவின்படி அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ஒன்று சேர்ந்து ரயிலை சில இன்ச்சுக்கள் சாய்த்தனர்.
இதனால் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே இருந்த இடைவெளி சற்று பெரிதானதால் சிக்கிக்கொண்டிருந்த கால் வெளியே வந்தது. மீட்புப்படையினர் வருவதற்குள் சிறிய காயத்துடன் அந்த பயணி உயிர் பிழைத்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பயணி ஒருவரின் புத்திசாலித்தனத்தால் அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த காட்சியை பலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.