வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்னா் நடந்த தோ்தலில் அதிகூடிய வாக்குப் பெற்று முதலமைச்சராக வந்த நீங்கள் தற்போது செல்லாக்காசாக இருப்பதையி்ட்டு மனம் வேதனைப்படுகின்றது.

நீங்கள் ஒரு நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளீா்கள். நாட்டின் அனைத்துச் சட்டதிட்டங்களும் உங்களுக்கு அத்துப்படியாகத் தெரிந்திருக்கும். மாகாணசபை அதிகாரங்கள் என்றால் என்ன என்பது பற்றியும் நீங்கள் விளங்கி வைத்திருந்திருப்பீா்கள். அப்படி இருந்தும் உங்களது சுய கௌரவத்திற்கு இழுக்காகப் போகும் பதவிக்காக ஏன் அரசியலில் இறங்கினீா்கள்?

தமிழா்களின் மீதும் தமிழ்த்தேசியம் மீதும் மிகுந்த பற்றுக் கொண்ட மனிதா் நீங்கள் என உங்களைப் பற்றி அறிந்தவா்கள் தெரிவிக்கின்றனா். அது உண்மையோ பொய்யோ என இனி வரும் காலம் தான் தெரியும்.

வடக்கு மாகாணசபை எனும் அரசியல் சதுரங்க ஆட்டம் உலகநாடுகளுக்காக ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை காலமும் இருந்த அரசியல் தலைவா்களில் தற்போதய ஜனாதிபதி மிகுந்த இராஜதந்திரம் மிக்கவராகவும் துணிச்சல் மிக்கவராகவும் காணப்படுகின்றமை அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிகின்றது.

இந் நிலையில் ஜனாதிபதியின் இராஜதந்திர வலைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சிக்கிக் கொண்டுள்ளது. உலகநாடுகளைப் பொறுத்தவரை வடக்கில் தமிழா்களுக்குரிய ஒரு தனியான நிர்வாக அலகு தமிழா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைக் கொண்டு இயங்குகின்றது என காட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனால் அது என்னவடிவில் இயங்குகின்றது என அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

இந்தச் சதுரங்க ஆட்டத்தில் தமிழா் தரப்புக்காக ஆடுபவராக உருவாக்கப்பட்டவா் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய நீங்கள். ஆனால் தற்போது இச் சதுரங்க ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டு இருக்கின்றீா்கள்.

வடக்கில் இருந்து ஆமியைக் கலைப்பேன், ஆளுநரை அகற்றுவேன், சுயாட்சியை ஏற்படுத்துவேன் என தோ்தலில் முழங்கி பலத்த கரகோசங்களைப் பெற்று முதலமைச்சராக ஆகியவா் தற்போது மூலைக்குள் பதுங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளீா்கள்.

இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பதாக தமிழ் மக்களிடம் காட்டிக் கொள்ளும் ஒரு கட்சி வடக்கு மாகாணசபையைக் கைப்பற்றியுள்ளது என்றால் அக் கட்சி கைப்பற்றிய பின் இலங்கை அரசாங்கம் அத்தனை விடயங்களையும் தானாகவே முன்வந்து தரவேண்டும் என்று நினைப்பது உங்களது சிறுபிள்ளைத் தனமான விடயம்.

இலங்கை அரசாங்கத்திடம் கேட்டதெல்லாம் பெறுவதற்கு நீங்களும் உங்ளது கட்சியும் அரசாங்க ஆதரவு பெற்ற கட்சியல்ல என்பது அனைவருக்கும் தெரியும். (மறைமுகமாக நீங்கள் ஆதரவு கொடுத்து செயற்பட்டாலும் வெளிப்படையில் உள்ளதையே அனைவரும் அவதானிப்பா்)

உலகநாடுகளில் குறிப்பாக ஆசியநாடுகளில் உள்ள ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சி ஆதரவு கொடுத்து அவா்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து கொண்டாடுகின்றது என்று வரலாற்றில் இதுவரை பதிவாகவில்லை.

எமக்கு அண்டைநாடாக உள்ள இந்தியாவின் தமிழகத்திலேயே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே என்னவெல்லாம் நடக்கின்றது என்பது உங்களுக்குப் புரியும்.

இலங்கையின் அரசியல் அமைப்பில் மாகாணசபைக்கு உள்ள அதிகாரம் எந்த அளவுக்கு உள்ளது என்று தெரிந்தே நீங்கள் அரசியல் சதுரங்கத்தில் குதித்தீா்கள்.

நீங்கள் ஒரு அரசியல் சதுரங்க சாணக்கியன் என தெரிவித்து தனது அரசில் கனவாக இருந்த முதலமைச்சா் பதவிக்கு ஆசைப்பட்ட சேனாதிராஜாவையே புறந்தள்ளி உங்களை முன்னிறுத்தினா் உங்கள் கட்சிக்காரா். அவ்வாறு முன்னிறுத்தி வெற்றி பெற்ற நீங்கள் தற்போது அழுது குளறிக் கொண்டு இருப்பதில் பயனில்லை.

அரசு ஒன்றும் தரவில்லை என்று அழுது குளற எனக்கும் தெரியும் பாடசாலையில் முதலாம் ஆண்டில் படிக்கும் ஒரு மாணவனுக்கும் தெரியும்.

உங்கள் முன் சதுரங்க தட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை வீழ்த்துவேன், இதை வீழ்த்துவேன், நாங்கள் கோழி அல்ல! ஆமைகள் என்று வீராப்புப் பேசிவிட்டு தற்போது உங்களது இராணியைப் பறிகொடுத்துள்ளீா்கள். அதாவது வடக்கு மாகாணசபை செயலாளராக இருக்கும் விஜயலக்சுமியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

இனிமேல் நீங்கள் உங்கள் இராஜா என்னும் காயாகிய பதவியைப் பாதுகாப்பதற்கான ஆட்டத்தைத் தான் தொடா்ந்து ஆட முடியும். அதுவும் அரசாங்கப் பக்கத்தில் இராஜாவாக படை பட்டாளங்களுடன் பலமாக உள்ள ஆளுநரின் பக்கத்து காய் நகா்த்தல்களின் வலிமையைப் பொறுத்தே உங்கள் ஆட்டம் எவ்வளவு காலத்திற்கு என்று கூற முடியும்.

நீங்கள் அரசியல் சதுரங்கத்தில் வெல்வீா்கள் என்ற நம்பிக்கை வடக்கு மக்களுக்கு இல்லாது போய்விட்டது. இனியும் உங்களது ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கத் தயாரில்லை.

இன்றும் உங்களது ஆட்சிக்கு எதிரான காய் நகா்வு வடக்கு மாகாணசபைக் கட்டடத்தின் முன் தொண்டா் ஆசிரியா் எனும் வடிவத்தில் வந்துள்ளது. அதை எப்படிச் சமாளிக்கப் போகின்றீா்கள் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இனியும் எந்த ரூபத்தில் உங்களுக்கு எதிரான நகா்வுகள் வரப் போகின்றன என்பது உங்களது அடுத்த பக்கத்தில் இருப்பவா்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆகவே இனிமேலும் நீங்கள் சதுரங்க ஆட்டத்தைத் தொடா்ந்து நடாத்த வேண்டுமா? என்பதைச் சிந்தித்து செயற்படுங்கள்.

அதை விடுத்து அரசாங்கம் செய்யும் சதி இது எனவும் எம்மை இவ்வாறு தொல்லை செய்து எம்மை வடக்கு மாகாணசபையை விட்டு அரசு கலைக்கப்பார்க்கின்றது என்றும் நீங்கள் கூறிக் கொண்டு இருப்பீா்களானால் உங்களைப் போல சுயநலம் மிக்க, பதவியாசை மிக்க, தமிழா்களை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் ஒரு தலைவராக இருப்பீா்கள் என்பது திண்ணம்.

வடபுலத்தான்

Share.
Leave A Reply