கள்ளக்காதலனுடன் சேர்ந்த தப்பிக்கத் திட்டமிட்டார் மனைவி. ஆனால் விஷயம் தெரிந்து வந்து விட்டார் கணவர். அப்போது தகராறு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்துவது போல பேசி அழைத்துச் சென்ற மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்தார்.

பின்னர் தூக்கில் தொங்க விட்டு விட்டுத் தப்பிச் சென்றார். தற்போது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியை சேர்ந்தவர் கண்ணன். 45 வயதான இவரது மனைவி பெயர் செல்வி. இவர்கள் இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்களாம்.

இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இரு குழந்தைகளையும் திருப்பூர் அருகில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் விபத்தில் சிக்கியதில் வலது கையின் கீழ்ப்பகுதி துண்டிக்கப்பட்டது. இதனால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. குடிப் பழக்கமும் கூடவே சேர்ந்தது.

இதையடுத்து தவித்து வந்த அவர் கேரளாவுக்குப் போய் லாட்டரி சீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டார். கடந்த இரண்டு வருடமாக அவர் கேரளாவிலேயே இருந்து வந்தார்.

தனிமையில் இருந்த செல்விக்கு தவறான பழக்கம் வந்து சேர்ந்தது. லோடு ஆட்டோ, வேன் இயக்கி வந்தவரான சுப்பிரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செல்வி வீட்டில் தனியாக இருந்தது வசதியாகப் போனது. இருவரும் அடிக்கடி சந்தித்து இன்புற்று வந்தனர்.

இந்த நிலையில் கணவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவு செய்தார் செல்வி. இதையடுத்து சுப்பிரமணி தனது வீ்ட்டைக் காலி செய்து விட்டு செல்வி வீட்டுக்கு ஒரு லோடு ஆட்டோவில் வந்தார்.

ஆனால் இவர்களின் திட்டம் எப்படியோ கண்ணனுக்குத் தெரிந்து அவர் கிளம்பி வந்து விட்டார். இதை செல்வியும், சுப்பிரமணியும் எதிர்பார்க்கவில்லை. தெருவில் வைத்து சுப்பிரமணி, செல்வியுடன் தகராறில் ஈடுபட்டார் கண்ணன்.

ஊரே கூடி விட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட செல்வியும், சுப்பிரமணியும் நைசாக இறங்கி வந்து கண்ணனிடம் பேசினர். பின்னர் அவரை தங்களது ஆட்டோவிலேயே அழைத்துச் சென்றனர்.

பூமலூர் அருகே ஆட்டோ வந்தபோது கண்ணனுடன் வம்பிழுத்துள்ளார் சுப்பிரமணி. அவருக்கு ஆதரவாக செல்வியும் சண்டை பிடித்துள்ளார். கண்ணனும் பதிலுக்குச் சண்டை போட்டார்.

அப்போது ஆட்டோவை ஓட்டி வந்த சுப்பிரமணியின் கூட்டாளி ஹபிபுர் ரஹ்மான் பெரிய இரும்புக் கம்பியை எடுத்து கண்ணன் தலையில் பலமாக அடித்தார்.

இதில் நிலைகுலைந்த கண்ணன் மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதிய செல்வி, சுப்பிரமணி மற்றும் ரஹ்மான் மூவரும் கண்ணனைத் தூக்கி கழுத்தில் கயிறைக் கட்டி சாலையோரம் இருந்த மரத்தில் தொங்க விட்டனர்.

இதில் பரிதாபமாக கண்ணன் உயிரிழந்தார். விசாரணையில் இறங்கிய போலீஸார் இதைக் கண்டுபிடித்தனர். மூவரும் கைது செய்யபப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply