அந்தப் போர்க்களம் விசித்திரமானது. ஒரு சதுரங்கப் பலகை போன்றது. ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்களுக்கு குதிரைப்படைகளும், யானைப் படைகளும் உண்டு. காலாட்படைகளும் இருக்கின்றன.
ஒரு ராஜா வேகமாக முன்னேறுவார். எதிரித் தரப்பு காலாட்படையை துவம்சம் செய்வார். சண்டை நிறுத்தப்படும். மற்றைய ராஜா தொடங்குவார். அவரும் முன்னேறக்கூடும். மந்திரிகள் ஆலோசனை சொல்வார்கள். சண்டை நிறுத்தப்படும்.
சற்று நிதானித்துப் பார்த்தால் சதுரங்கப் பலகையெங்கும் இரத்தக்கறை படிந்திருக்கும். அப்போது சதுரங்கப் பலகையில் ஒரு ராஜா மிகவும் பலவீனமாக இருப்பார். மற்றவரின் பலம் அதிகமானதாக இருக்கும். எனினும், இவர்களில் எந்த ராஜாவும் எதிரியை முற்று முழுதாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் வெற்றி பெற்றதில்லை.
சதுரங்கப் பலகை மத்திய கிழக்கு மண் என்றால் எல்லோருக்கும் புரியும். ஒரு ராஜாவின் பெயர் இஸ்ரேல். மற்றைய ராஜாவின் பெயர் ஹமாஸ். இந்தப் பலகையில் எத்தனையோ நகர்வுகள். போர் தர்மத்தை கிஞ்சித்தும் மதிக்காமல், அடுத்தவரின் காய்களை வெட்டித் தள்ளும் முயற்சிகள்.
சில சமயங்களில் சதுரங்கப் பலகை அமைதியாக இருக்கும். சில சமயங்களில் சடுதியாக காய்கள் நகர்த்தப்படும். போரும் போர் நிறுத்தமும் சக்கரம் போல சுழன்று கொண்டே இருக்கும். இந்த சக்கரம் எப்போது நிற்கும், எந்த இடத்தில் ஸ்தம்பிதம் அடையும் என்பதை எவரும் ஊகிக்க முடியாது. ஊகிக்க முனைந்தவர்கள் தோற்றுப் போவார்கள்.
2008ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இது தான் யதார்த்தம். 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி இஸ்ரேலிய தரப்பில் இருந்து முதலாவது காய் நகர்த்தப்பட்டது. அதற்கு இஸ்ரேலிய தரப்பு Operation Cast Lead என்று பெயரிட்டது. ஹமாஸ் தரப்பும் முன்னேறியது. ஹமாஸின் தரப்பில் இதற்கு அல்-ஃபுர்கான் யுத்தம் என்று பெயர். அடுத்தடுத்து காய்கள் வெட்டப்பட்டன.
மூன்று வாரங்கள் நீடித்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. ஈற்றில் இராணுவ ரீதியாக எமக்கே வெற்றி என்று இஸ்ரேல் முழங்கியது. இஸ்ரேலின் தரப்பில் 12 மணித்தியால போர் நிறுத்தம். ஹமாஸ் தரப்பில் ஒரு வாரகால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. சதுரங்கப் பலகையில் காய்கள் நகர்த்தப்படவில்லை. அமைதி நீடித்தது.
முன்னைய விளையாட்டுக்களின் முடி வில் சதுரங்கப்பலகை எப்படியிருக்குமோ, இம்முறை அதைவிடவும் மோசமாக இருந்தது. இம்முறை கறுப்பு வெள்ளைக் கட்டங்கள் யாவும் குருதியில் நனைந்து செந்நிறமாக மாறியிருந்தன. பழைய சக்கரம் போரும், போர் நிறுத்தமுமாக சுழன்று கொண்டேயிருந்தது. ஒரு தடவையல்ல, இரு தடவைகள் அல்ல. ஆறு தடவைகள். ஆறாவது தடவையும் போர் நிறுத்தம் சாத்தியப்படவில்லை என்பது தான் துரதிர்ஷ்டமான விடயம்.
சதுரங்கப் பலகையில் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்புக்களின் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தவர்களும் எதுவும் புரியவில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில், அடுத்தவரை இல்லாதொழிக்க வேண்டும் என்று தீவிர கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ள இருதரப்புக்கள் ஏன் போர் நிறுத்தங்களுக்கு இணங்க வேண்டும் என்று பலரும் அதிசயப்பட்டார்கள். அந்த அதிசயத்தால் விளைந்த ஆச்சரியத்தின் சாயல் மறையும் முன் மீண்டும் சண்டை ஆரம்பித்தது.
முதலில் ஜூலை 15ஆம் திகதி எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்தம். இருதரப்புகளும் எதுவித நிபந்தனைகளும் இல்லாமல் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும், அதனைத் தொடர்ந்து கெய்ரோவில் சமாதானப் பேச்சுக்களை தொடங்க வேண்டும் என்ற கட்டளைகளுடன் எகிப்து முன்மொழிந்த யோசனையை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இதில் இஸ்ரேலுக்கு சலுகைகள் அதிகமெனக் கூறி, ஹமாஸ் நிராகரித்தது.
இரு நாட்களுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்து மணித்தியால போர் நிறுத்தம். காஸா மக்களுக்கு சுவாசிப்பதற்கேனும் கொஞ்சம் இடைவெளி விடுங்கள் என்ற கோரிக்கையுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் போர் நிறுத்த யோசனையை முன்மொழிந்தார். சுவாசிக்க இடைவெளி அளித்தால், ஹமாஸ் ஆயுதங்களை சேர்த்து விடுமெனக் கூறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது.
அடுத்து ஜூலை 20ஆம் திகதி. காஸாவின் ஷிஜாய்யா பிரதேசத்தில் அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் இரு மணித்தியாலங்கள் சண்டையை நிறுத்தச் செய்தது. இதனையும் இஸ்ரேல் முறித்துக் கொண்டது.
அடுத்து, அமெரிக்க ராஜாங்க செயலாளர் கோன் கெரி களத்தில் இறங்கினார். அவர் ஜூலை 25ஆம் திகதி நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கக் கூடிய ஒருவார கால போர் நிறுத்தத்தைப் பிரேரித்தார். இதனையும் இஸ்ரேல் நிராகரித்தது. இதன்மூலம் ஹமாஸிற்கு கிடைக்கும் அனுகூலங்கள் அதிகம் என்பது இஸ்ரேலின் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. சமாதானப் புறாவாகச் சென்ற ஜோன் கெரி, இஸ்ரேலிய ஊடகங்கள் தமது சிறகுகளில் பூசப்பட்ட கரியுடன் பறந்து சென்றார்.
அடுத்து நோன்புப் பெருநாள் வந்தது. இம்முறை இஸ்ரேலும், ஹமாஸும் 12 மணிநேர போர் நிறுத்தத்திற்கு இணங்கின. காஸா மக்கள் குண்டுமழைக்கு மத்தியிலும் பெருநாள் கொண்டாட இடமளிக்கும் போர் நிறுத்தத்தை 12 மணித்தியாலத்தைத் தாண்டி ஒரு மணிநேரமும் நீடிக்க முடியவில்லை. மீண்டும் சண்டை தொடங்கியது. பெருநாள் தினத்தன்று சற்று உலவி வரலாம் என்று அகதி முகாமில் இருந்து வெளியே சென்ற பிள்ளைகளும் இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கி மரணத்தைத் தழுவினார்கள்.
கடைசியாக கடந்த வியாழக்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனும், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் சேர்ந்து கொண்டார்கள். மனிதநேய நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காகவேனும் 72 மணித்தியால போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
இம்முறை சமாதானப் பேச்சுக்கான போர் நிறுத்தம் என்றெல்லாம் பேசவில்லை. பசித்தவர்களுக்கு உணவளிக்கவும், காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களைப் புதைக்கவும் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுங்கள் என்று இருவரும் கேட்டார்கள். வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்த போர் நிறுத்தம் சில மணித்தியாலங்கள் மாத்திரமே நீடித்தது. இரு தரப்புக்களும் மீண்டும் சண்டையிட்டன. ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலிய படைவீரரை கடத்தியது.
இந்த மாற்றங்கள் காஸா நெருக்கடிக்கு இப்போதைக்கு ஓய்வு கிடையாது என்பதை தெளிவாக பறைசாற்றி நிற்கின்றன. எதிர்காலத்திலும் எத்தனையோ உயிர்கள் பலியாகப் போகின்றன என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இதில் முக்கியமான விடயம் யாதெனில், காஸா யுத்தத்தை ஒட்டுமொத்த உலகமும் ஆட்சேபிப்பது தான். துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மனித அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்பியபோதிலும், அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நிலைமை தான் மத்திய கிழக்கின் துரதிர்ஷ்டம்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இரு விடயங்களைப் பதிலாகக் கூற முடியும். முதலாவது விடயம், இஸ்ரேலின் ஆளுந்தரப்பு எதிர்கொள்ளும் அரசியல் நிர்ப்பந்தம். இரண்டாவது விடயம் மத்திய கிழக்கின் கூட்டணி நிர்ப்பந்தங்கள்.
காஸா யுத்தம் எத்தனை உயிரிழப்புக்களை ஏற்படுத்தியிருந்தாலும், ஹமாஸ் இயக்கம் இல்லாதொழிக்கப்பட வேண் டும் என்பது இஸ்ரேலியர்களின் நாட்டமாகும். இந்தப் போர் தொடர வேண்டும் என்பதையே 87 சதவீத இஸ்ரேலியர்கள் விரும்புவதாக கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த விருப்பத்திற்கு இணங்கினால் தான், தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை பெஞ்சமின் நெத்தன்யாஹு அறிந்து வைத்திருக்கிறார். ஜோன் கெரியின் நட்பை விடவும் இஸ்ரேலிய மக்களின் வாக்குகள் அவருக்கு முக்கியமானவை.
அடுத்து, கூட்டணிகள் என்ற விடயத்தை ஆராய்வோம். காஸா நெருக்கடியில் பல நாடுகளும் இயக்கங்களும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல், எகிப்து, சவூதி அரேபியா ஆகியவை ஒரு புறத்தில் இருக்கின்றன. மறுபுறத்தில் கட்டார், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கின்றன. சமகால அரசியல் நிலவரம் காரணமாக, எந்தப் பக்கத்துடன் சேர்வதெனத் தெரியாமல் அமெரிக்கா தடுமாறுகிறது.
அமெரிக்கா சொல்லி இஸ்ரேல் கேட்கவில்லை என்றால், அது வியப்பிற்குரிய விடயம் தானே. ஜோன் கெரி முன்மொழிந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கான காரணம், இந்தக் கூட்டணி சிக்கல் தான். கட்டாரும், துருக்கியும் வரைந்து ஹமாஸின் ஒப்புதலைப் பெற்ற போர் நிறுத்தத்தைத் தான் அவர் முன்மொழிந்தார்.
எகிப்து முன்மொழிந்த போர் நிறுத்தத்தை ஹமாஸ் நிராகரித்தது என்றால் அதற்கும் கூட்டணி நெருக்கடி தான் காரணம். எகிப்தின் சமகால தலைவர் அப்துல்லா அல் சிஸி ஹமாஸின் தவிர்க்க முடியாத கூட்டாளியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பரம எதிரி. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தியவர். அவருடன் சேர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் வகுத்த போர் நிறுத்தத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்பது ஹமாஸின் கேள்வி.
மத்திய கிழக்கு நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட எந்தத் தரப்பும் தனியாக போர் நிறுத்தத்தை முன்வைக்க முடியாது. இந்தத் தரப்புகளுக்கு இடையிலான கூட்டணிகள் அவ்வளவு சிக்கலானவை.
அமெரிக்கா ஹமாஸுடன் பேசாது. ஏனெனில், அமெரிக்காவில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கமாக பட்டியல் இடப்பட்டுள்ளது. இஸ்ரேலும், ஹமாஸும் பரம வைரிகள் என்பதால், அவையும் பேசப் போவதில்லை. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடைசெய்த எகிப்தை ஹமாஸ் நம்ப மாட்டாது. சவூதி அரேபியாவை ஈரானும், எகிப்தை கட்டாரும் சகித்துக் கொள்ளப் போவதில்லை.
இந்த நிலையில், இந்த சகல தரப்பினருக்கும் பொதுவான ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பது தான் சண்டையை நிறுத்துவதற்கு சிறந்த வழியாக அமையும்.
அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதில் தான், காஸா யுத்தத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.