நைஜிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் தனி நாடு கோரி போகோ ஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபோக் பகுதியில் பள்ளியில் தேர்வு எழுதி கொண்டிருந்த 300 மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

sirumiசிறையில் இருக்கும் தங்களது இயக்கத்தவர்களை விடுவிக்காவிட்டால், கடத்தப்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டினர். இதற்கிடையே மாணவிகளை தீவிரவாதிகள் மதமாற்றம் செய்து விட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

அண்டை நாடுகளின் உதவியோடு மாணவிகளை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் மாணவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல், நைஜிரியாவில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வரும் வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் சிறுமிகளே என தெரியவந்துள்ளது.

காத்ஷினா பகுதியில் 10 வயது சிறுமியின் உடலில் வெடிகுண்டு கட்டப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த புதன்கிழமை அன்றுநைஜிரியாவின் கானோ நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண் ஒருவர் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இதில் 6 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுமிய பயன்படுத்தப்பட்டு உள்ளார். என்று போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே காத்ஷினாவில் பெண்கள் உள்பட 3 போகோ ஹரம் தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படலாம் என்றும் தாக்குதல் நடத்த மாணவிகள் கட்டாயப்படுத்தப்படலாம் என்றும் நாட்டின் முன்னாள் கல்வித்துறை மந்திரி ஒபே இசக்வேஸ்லி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று நைஜிரியா அரசை அந்நாட்டு மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மன அழுத்தத்தால் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 11க்கும் அதிகமான மாணவிகளின் பெற்றோர் இவ்வாறு உடல் நலப் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப் படுகின்றனர் என்ற தகவல் அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Share.
Leave A Reply