கடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், “ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்!” என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள்.

இது அவர்களது வழமையான இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் Niche market என்று அழைக்கப் படக் கூடிய, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத வெளிநாட்டு குடியேறிகளை குறி வைத்து தான், லைக்கா தனது வியாபாரத்தை ஆரம்பித்தது.

செய்மதி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மிகக் குறைந்த செலவில் உலக நாடுகளுக்கு இடையில், தொலைபேசி அழைப்புகள் சாத்தியமாகி உள்ளன. மேற்கத்திய பன்னாட்டு கம்பனிகள், தமது உலகமயமாக்கலை இலகுவாக்கும் நோக்குடன் அது கொண்டு வரப் பட்டது. லைக்கா, லெபரா, அவற்றின் தாய் நிறுவனமான ஞானம் என்பன, அந்த சேவையை வெளிநாட்டு குடியேறிகளுக்கு வழங்கி பிரபலமடைந்தன.

ஞானம், லைக்கா, லெபரா தொலைபேசி அட்டைகள், குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு தொடர்பு படுத்தி தருவதாக விளம்பரம் செய்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது? உலக நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்புக்கு, ஒரு செய்மதி நிறுவனத்திற்கு வாடகை கட்ட வேண்டும்.

அதே மாதிரி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில், உள்நாட்டு தொடர்புகளுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கு வாடகைப் பணம் செலுத்த வேண்டும். (புலம்பெயர்ந்த நாடொன்றில் வாழும் ஒருவரின் தொலைபேசியில் இருந்து செல்லும் அழைப்பிற்கு, அந்த தேச எல்லை வரையிலான கட்டணம்.)

மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால், லைக்கா நிறுவனமும் அவற்றில் தங்கி உள்ளது. ஒரு தடவை, லைக்கா பெருந்தொகை வாடகைப் பணம் கட்டவில்லை என்று, சம்பந்தப் பட்ட நிறுவனம் சேவையை துண்டித்து விட்டது.

மலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை.

ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும்.

ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றும் படி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

லைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும்.

ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம்.

நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்!

நிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப் பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

லைக்கா நிறுவனத்தின் அலுவலகங்கள், இலகுவில் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசத்தில் இருக்கும், அல்லது அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக, இடைத் தரகர்களும், சில்லறை வணிகர்களும் தான், பாவனையாளர்களின் கோபாவேசத்திற்கு பலியாகின்றனர். எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர், மக்களிடம் தர்ம அடி வாங்கி இருக்கிறார்கள்.

லைக்கா நிறுவனம் பாவனையாளர்களை மட்டும் சுரண்டவில்லை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையாக சுரண்டப் படுகின்றனர். பெருமளவு தொழிலாளர்கள், லைக்கா சிம் அட்டைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 8 – 10 மணிநேரம், தெருவில் நின்று போவோர் வருவோரிடம் கூவிக் கூவி விற்க வேண்டும். ஏற்கனவே லைக்காவின் திருட்டுக்களை தெரிந்து கொண்டவர்கள், காது கூசும் வண்ணம் நாலு திட்டு திட்டி விட்டு செல்வார்கள். “லைக்கா, லெபரா… இவை எல்லாம் கொள்ளைக் கோஷ்டிகள்…மாபியா குழுக்கள்…” என்று பலர் சொல்வதை என் காதாரக் கேட்டிருக்கிறேன்.

விற்பனைப் பிரதிநிதிகளும் பாவப் பட்ட ஜென்மங்கள் தான். பன்மொழிச் சமூகங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, லைக்கா பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

அந்தந்த நாட்டில், எது குறைந்த பட்ச ஊதியமோ, அதைத் தான் சம்பளமாகக் கொடுப்பார்கள். அதற்கு மேலே ஒரு சதம் கூட்ட மாட்டார்கள். விற்பனைப் பிரதிநிதிகள், ஒவ்வொரு நாளும், குறைந்தது பத்து சிம் அட்டைகளை “அக்டிவேட்” செய்ய வேண்டும். அதாவது, தெருவில் போகும் அப்பாவிகளை கையைப் பிடித்து இழுத்தாவது, சிம் கார்ட் அக்டிவேட் செய்து கொடுத்து விட வேண்டும்.

இல்லாவிட்டால், அன்றைக்கான போக்குவரத்து செலவு கிடைக்காது! ஒரு சில பிரதிநிதிகள், ஐம்பது கி.மி. தூரத்தில் உள்ள நகரங்களுக்கும் பயணம் செய்து, அங்கே வேலை செய்து விட்டு திரும்புகின்றனர். அவர்களது நிலைமையை எண்ணிப் பாருங்கள்.

விற்பனைப் பிரதிநிதிகளான தொழிலாளர்களை, லைக்கா நேரடியாக பணிக்கு அமர்த்துவதில்லை. அதற்கென்று, “முகவர் நிறுவனங்கள்” இருக்கின்றன. அனேகமாக, லைக்கா மனேஜர் ஒருவரே, தனது பெயரில் ஒரு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வைத்திருப்பார்.

குறிப்பிட்ட அளவு தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தி இருப்பார். இந்த முகவர் நிறுவனங்களின் ஆயுட்காலம், அதிக பட்சம் ஒரு வருடம் தான். அதற்குள் வரி ஏய்ப்பு மற்றும் பல திருட்டுக்களை செய்து விட்டு, நிறுவனத்தை திவாலாக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, வேறொரு இடத்தில், இன்னொருவர் வேலை வாய்ப்பு நிறுவனத்தை திறப்பார்.

லைக்கா நிறுவனத்தின் வண்டவாளங்கள் இவ்வளவு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னும் பல “தொழில் இரகசியங்கள்” உள்ளன. இல்லாவிட்டால், எப்படி கோடிக் கணக்கில் இலாபம் சம்பாதிக்க முடியும்?

பாவனையாளர்களையும், தொழிலாளர்களையும் சுரண்டி சேர்த்த பணத்தை, மென்மேலும் பெருக்குவதற்காக, லைக்கா நிறுவனம் தமிழ்ப் படம் தயாரிக்கிறது. ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் முதலிடுகின்றது. முதலாளித்துவ உலகில் இதெல்லாம் சகஜம். இப்போது தான் லைக்காவின் சுயரூபம் தெரிந்தது மாதிரி பலர் நடந்து கொள்கின்றனர்.

உலகில் எந்த முதலாளிக்கும் இன உணர்வு கிடையாது. அவர்களிடம் உள்ளதெல்லாம் பண உணர்வு மட்டுமே. தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யார் காலிலும் விழுவார்கள். நமது நாடுகளில் அரசியலும் முதலாளித்துவத்திற்கு சார்பானது தானே? சிங்கள இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதம் பேசும் சீமானும், முதலாளிகளின் நண்பர்கள் தானே? அவர்களுக்கும் லைக்காவுக்கும் தொடர்பு ஏற்பட்டதில் என்ன அதிசயம் இருக்கிறது?

இன்று ராஜபக்சவை, லைக்காவை எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் அப்படித் தான். இனம் இனத்தோடு தானே சேரும்? போலித் தமிழ் இன உணர்வாளர்களும் முதலாளிய ஆதரவாளர்கள் தான். அதில் என்ன சந்தேகம்? அவர்களே பல தடவைகள் நேரடியாகக் கூறி இருக்கிறார்கள்.

லைக்கா முதலாளி, ராஜபக்ச, சீமான், விஜய், போலித் தமிழ் இன உணர்வாளர்கள்…. இவர்கள் யாருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. மாறாக, வர்த்தகப் போட்டியாளர்கள்.

நிதி மூலதனத்தில் யாருக்கு எந்தளவு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான போட்டி நடக்கிறது. முதலாளியத்தை ஆதரிப்பவர்கள், தங்களது வர்க்க நலன் சார்ந்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அது இயற்கையானது. அவர்கள் என்றைக்குமே சரியாகத் தான் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மட்டும் தான், இவர்களது சுயரூபம் தெரியாமல் நம்பி ஏமாறுகிறார்கள்.

-கலையரசன்-

Share.
Leave A Reply