2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் பிரபாகரன், வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்துவது என்ற முடிவை கூறியபோது, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 4 தளபதிகளும் எதிர் கருத்து எதையும் சொல்லவில்லை.
ஆனால், வான்புலிகள் தரப்பில் இருந்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அதிலுள்ள பெரிய மைனஸ் பாயின்ட் ஒன்றை பிரபாகரனிடம் சுட்டிக் காட்டினார்கள் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.
அது என்னவென்றால், பிரபாகரன் திட்டமிட்ட அந்த தற்கொலைத் தாக்குதலுடன், வான்புலிகளின் சரித்திரமே முடிந்துவிடும் என்பதுதான்.
வான்புலிகள் தாக்குதல் நடந்தவுடன், அதை வைத்து விடுதலைப் புலிகளின் கஷ்ட்ரோ தலைமையிலான வெளிநாட்டு பிரிவு, பெரிய பிரசாரம் ஒன்றையே வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் செய்தது. ஏராளமான பணம் சேர்ந்தது.
வான்புலிகளுடன் பிரபாகரன்… காஸ்ட்ரோ பிரிவு வெளியிட்ட போட்டோக்களில் ஒன்று
இதற்காக வான்புலிகள் பிரிவினருடன் பிரபாகரன் பேசுவது போன்ற போட்டோக்கள் சில எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்டன.
இந்த போட்டோக்களில் வான்புலிகள் பிரிவில் உள்ள 8 பேர் இடம்பெற்றிருந்தனர். வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்கள், “இதோ, 8 பிரதான விமானிகள் உள்ளார்கள்.
ஆனால், போதியளவு விமானங்கள் கிடையாது. நீங்கள் (வெளிநாட்டு தமிழர்கள்) பணத்தை வாரி வழங்கினால், ஒரு வாரத்திலேயே புதிய விமானங்கள் வன்னியில் கொண்டுபோய் இறக்கப்படும். அத்துடன் இலங்கை ராணுவம் சட்னிதான்” என்றுதான் பிரசாரம் செய்து பணம் சேகரித்தார்கள்.
போட்டோக்களைப் பார்த்து, பணம் கொடுத்தவர்கள் ஏராளம் (வங்கிகளில் கடன் எடுத்தெல்லாம் கொடுத்தார்கள்)
ஆனால், காஸ்ட்ரோவின் வெளிநாட்டு பிரிவு ஆட்களுக்கு வான்புலிகள் பிரிவில் எத்தனைபேர் இருந்தார்கள் என்றோ, அதில் எத்தனை பேருக்கு விமானம் செலுத்த தெரியும் என்றோ தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே!
வான்புலிகளுடன் பிரபாகரன்… காஸ்ட்ரோ பிரிவு வெளியிட்ட போட்டோக்களில் ஒன்று
அதை அவர்கள் தெரிந்து கொள்வதை விடுங்கள். அவர்கள் காண்பித்த போட்டோவிலேயே 4 பேரின் சீருடைகளில்தான் ‘விங்’ குத்தப்பட்டு இருந்தது என்பதைகூட அவர்கள் புரிந்து கொண்டார்களோ, தெரியாது.
எந்தவொரு பெரிய விமானப்படையும், தமது படையில் ‘பறக்கும் பயிற்சிபெற்றவர்களுக்கு’ மட்டுமே, யூனிபோர்மில் குத்துவதற்கு ‘விங்’ கொடுப்பார்கள்.
இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவில், விமானத்தை செலுத்தும் பயிற்சி பெற்ற 4 பேர்தான் இருந்தார்கள்.
அதிலும் இருவர், விமானத்தை தனியே செலுத்திச் செல்லும் அளவுக்கு பயிற்சி அற்றவர்கள். மற்ற இருவருடன் உதவியாளராக அல்லது, கோ-பைலட்டாக செல்லும் அளவில்தான் அவர்களுக்கு பயிற்சி இருந்தது.
2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் பிரபாகரன் போட்ட திட்டத்தின்படி, வான் புலிகளின் இரு விமானங்களை இரு வான்புலி விமானிகள் செலுத்திச் சென்று தாக்குதல் நடத்த வேண்டும்.
அது தற்கொலைத் தாக்குதல் என்பதாக இல்லைதான். ஆனால், அப்படியொரு தாக்குதலுக்கு போனால், இந்த இரு விமானங்களோ, அவற்றை செலுத்திச் செல்லும் இரு விமானிகளோ திரும்பி வரப் போவதில்லை என்பது. 99.99% நிச்சயம்.
தனியான விமானத்தை செலுத்திச் செல்லக்கூடிய இரு விமானிகளும் (ரூபன், சிரித்திரன்) அந்த தாக்குதலோடு போய்விட்டால், அதன்பின் வான் புலிகளின் விமானங்களே எழ முடியாது என்பதே நிலை. மொத்தத்தில், அதுவே வான்புலிகளின் இறுதிப் பறத்தலாக இருக்கும்.
இதைத்தான் பிரபாகரனிடம் சொன்னார்கள் வான்புலி பிரிவில் இருந்து வந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் (கலந்து கொண்டவர்களில் இந்த இரு விமானிகளும் இல்லை).
“ஆனால், இதைவிட எமக்கு வேறு வழியில்லை. ராணுவம் தாக்குதலை நிறுத்தாவிட்டால், நிலைமை தற்போது உள்ளதைவிட மோசமாகிவிடும். ராணுவத்தை தாக்க விடாமல் நிறுத்த வேண்டும் என்றால், தெற்கு இலங்கையில் இரண்டு முக்கிய இடங்களை முழுமையாக அழிக்க வேண்டும். அதற்காகதான், இரு வான்புலி விமானங்களையும் அனுப்புகிறேன்” என்றார் பிரபாகரன்.
வான்புலி விமானங்களை வைத்து பிரபாகரன் அழிக்க திட்டமிட்ட இரு இலக்குகளும் –
1) கொழும்புவில் உள்ள ராணுவ தலைமையகம் (Gallface-க்கு முன்னால் உள்ளது)
2) கொழும்பு கட்டுநாயகா விமானத்தளம் (இங்குதான் விமானப்படையின் அனைத்து போர் விமானங்களும் உள்ளன)
புலிகள் இருந்த சிறிய பகுதியை உக்கிரமாக தாக்கி முன்னேறிக்கொண்டு இருந்த ராணுவத்தை தடுத்து நிறுத்துவதற்கு, வான் புலிகளை இறுதி ட்ரம்பாக பயன்படுத்த நினைத்தார் பிரபாகரன்.
கரும்புலிகள் தாக்குதலுக்கு ஆனுப்பி வைக்கப்படுமுன், பிரபாகரனுடன் எடுத்த போட்டோ
2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் நடந்த அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் இலங்கை அரசால் தற்போது விடுவிக்கப்பட்டு, இலங்கையில் வசிக்கிறார்.
அவரிடம் பேசியபோது, “அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் மிகுந்த பதட்டத்துடன் இருந்தார். அவரால் கோர்வையாக பேச முடியாத அளவில் பதட்டம் காணப்பட்டது.
இந்த தாக்குதல்தான், தம்மிடம் உள்ள இறுதி ஆயுதம் என்றே அவர் நினைப்பதாக தோன்றியது. இதனால், இலக்கு இம்முறை எக்காரணம் கொண்டும் தவறவே கூடாது என்பதை மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார்” என்றார்.
பிரபாகரனின் பதட்ட மனோநிலையை வேறு விதமாகவும் பார்க்கலாம்.
கரும்புலிகளை தற்கொலை தாக்குதலுக்கு அனுப்புவதற்கு முன் பிரபாகரனுடன் நிற்க வைத்து போட்டோ எடுப்பார்கள்.
அந்த போட்டோக்களில் பிரபாகரன், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருப்பது வழக்கம்.
கரும்புலிகளை அணைத்துக்கொண்டு போட்டோ எடுத்ததாக எந்த போட்டோவும் கிடையாது. எப்போதும், ஓரளவு இடைவெளியை மெயின்டெயின் பண்ணுவார்.
வான்புலிகள் இருவரும் இறுதி தாக்குதலுக்கு செல்வதற்குமுன்..
ஆனால், வான்புலிகள் இருவரை (கிட்டத்தட்ட தற்கொலை) தாக்குதலுக்கு பிரபாகரன் அனுப்ப முடிவு செய்தபோது எடுக்கப்பட்ட போட்டோவை இடப்புறம் பாருங்கள்.
அதில் அவரது கரங்களை பாருங்கள். பாடி லேங்குவேஜை பாருங்கள். இருவரையும் இறுகப் பிடித்தபடி காணப்படுகிறார்.
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் முன் இறுதியாக யாரையாவது பற்றிக்கொள்வது என்பதான பாவனை தெரிகிறது இல்லையா?
ஒரு விஷயம் நிஜம். இந்த தாக்குதல் பிரபாகரன் திட்டமிட்டபடி நடந்திருந்தால், இலங்கை ராணுவம் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
அதை தற்போது, இலங்கை ராணுவத்தை சேர்ந்தவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
அதன்பின் மீண்டும் யுத்தத்தை தொடங்க குறைந்தபட்சம் 1 ஆண்டு அவகாசமாவது தேவைப்பட்டு இருக்கும். அதற்குள், விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைத்திருக்கும்.
2009-ம் ஆண்டு, பிப்ரவரி 20-ம் தேதி.
வான்புலிகளின் இரு விமானங்களையும், ரூபன், சிரித்திரன் ஆகிய இருவரும் இறுதித் தாக்குதலுக்காக செலுத்திச் சென்றார்கள்.
வெளியே தரை பாதுகாப்பு மிக கடுமையாக இருந்தது. இந்த தொடரில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் எல்லா இடங்களிலும் தயாராக இருந்தன.
வன்னியில் இருந்து விமானம் வானில் எழுந்து, வவுனியாவை கடந்து, மதவாச்சி என்ற இடத்தை கடக்கும் முன்னரே, இந்த விமானங்கள் பறப்பது பற்றிய தகவல் ராணுவ தலைமையகத்துக்கு போய்விட்டது.
கொழும்புவில் உள்ள ராணுவ தலைமையகத்தை தாக்க சென்ற விமானம் கொழும்பு நகரின்மேலே பறக்க தொடங்கியபோதே, உயரமான பில்டிங்குகளின் மொட்டை மாடிகளில் இருந்து விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கின.
ராணுவ தலைமையகத்தை அணுகும் முன்னரே, விமானத்தில் குண்டுகள் பாய்ந்தன. காக்பிட்டில் இருந்த விமானியின் மீதும் ஒரு குண்டு பாய்ந்தது.
விமானம் திசைமாறி, தடுமாறி, இலங்கை உள்நாட்டு வரிவிதிப்பு இலாகா பில்டிங்கில் போய் மோதி சிதறி வெடித்தது.
கொழும்பு கட்டுநாயகா விமானத்தளத்தை தாக்கும் நோக்குடன் சென்ற விமானம், விமானத் தளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு சாதனங்களில் வீச்சுக்குள் வந்தபோது, சுடப்பட்ட நிலையில், விமானம் அப்பகுதியில் இருந்த வயல் ஒன்றில் வீழ்ந்தது. விமானியும் உயிரிழந்தார்.
அத்துடன், வான் புலிகளின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.
விமானம் தரையில் வீழ்ந்தபோதும், விமானத்தில் பொருத்தப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை என்பதை, கீழேயுள்ள போட்டோவில் பார்க்கவும். (தொடரும்)
ஈழப் போரின் இறுதி நாட்கள்-33: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-13
ஈழப் போரின் இறுதி நாட்கள்-32: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-12