மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருப்போரின் நலன் கருதி ‘ரட்டவிரு பியச’ வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பன்னீராயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதன் முதற்கட்டமாக 2,000 வீடுகளின் நிர்மாண பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அவற்றில் ஐநூறு வீடுகள் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளன என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளை ரிவர்சைட் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்;

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இதனடிப்படையில் 2,500 பேருக்கு கல்விப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் இவ்வாண்டில் மேலும் மூவாயிரம் சிறார்களுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளேன்.

அத்துடன் கணினி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆங்கில மொழியினை கற்பிக்கும் வேலைத்திட்டம் உள்ளிட்டு அக்குடும்பங்களின் மேம்பாட்டு வேலைத்திட்டம் ஆகியனவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுச் சென்று நாடு திரும்பிய பெண்கள் நெசவுக் கைத்தொழிலில் ஈடு படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இச்சுய முயற்சி தொழில் வாய்ப்புக்கள் மூலம் ஆகக்கூடுதலான வருமானங்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதனால் அப்பெண்கள் மீளவும் வெளிநாடுகளுக்கு செல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐந்து வயதுகளுக்கு குறைந்த சிறு பிள்ளைகள் இருக்கும் தாய் மார்கள் எக்காரணம் கொண்டும் தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கிடையாது.

தொழில் வாய்ப்புகளுக்கு செல்லும் பெண்களின் குடும்ப பின்னணிகள் குறித்து ஆராயப்பட்டு முடிவு எடுக்கப்படும். இவ்விடயங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு  பணியக உத்தியோகத்தர்கள் பெரும் அர்ப்பணிப்புக்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பெண்களினதும் அவர்களினதும் குடும்ப நன்மைக் கருதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளை எடுக்கும் போது பெண்கள் அமைப்பினர் எமக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கிலும் எமது பணியகத்திற்கு நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது போன்ற பெண்கள் அமைப்பினர் ஒரு சில அரசியல் கட்சியினர் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை ஏற்படுத்த விரும்புவதில்லை. அவர்களுக்கு பிரச்சினைகள் இருக்க வேண்டும்.

பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இத்தகைய விடயங்கள் மூலமே அவர்களின் வாழ்க்கை நடைபெற்று வருகின்றது.

பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்களை குறைத்தமையானது மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளுக்கமைய பூமியின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றுக்கமையவே   மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டினை எதிர்கட்சியினர் உண்மைக்கு புறம்பானவகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எவ்வித சவாலும் இல்லை. கூட்டமைப்பு இலகுவாகவே அமோக பெரும்பான்மை பலத்துடன் ஊவா மாகாண சபையில் ஆட்சியைக் கைப்பற்ற எமது நாட்டில் சக்திமிகு எதிர்கட்சியொன்றில்லை.

நவீன யுகத்திற்கமைய எதிர்கட்சி மாற்றமடையவில்லை. பலவீனமான எதிர்கட்சியே எமது நாட்டில் இருந்து வருகின்றது.

இந்நாட்டிற்கு ஆகக்கூடிய அன்னிய செலவாணியைத் தேடித்தரும் தொழில் துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்பே இருந்து வருகின்றது. அத்துறை சார்ந்தவர்களுக்கு அனைத்து வரப்பிரசாதங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியமொன்று மட்டுமே இதுவரை அவர்களுக்கு கிடைக்காமலிருக்கின்றது என்றார்.

Share.
Leave A Reply