இலங்கை அர­சியல் களம்  இரண்டு முனை­களில் இப்­போது பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல் ஜன­வரி மாதத்தில் நடை­பெறும் என்ற அர­சியல் எதிர்­பார்ப்பு பல ­மா­கி­யி­ருக்­கின்­றது. அத­னை­யொட்டி, களத்தில் இறங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் அர­சியல் கட்­சிகள் முழு வேகத்தில் இறங்­கி­யி­ருக்கின்­றன.

மறு­பக்­கத்தில், கொழும்புத் துறை­மு­கத்­திற்கு சீனப் போர்க்­கப்பல் இரண்­டா­வது தட­வை­யாக வருகை தந்­தது தொடர்பில் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எழுந்­துள்ள அர­சியல் சர்ச்­சைகள் அர­சியல் களத்தைப் பர­ப­ரப்­ப­டையச் செய்­தி­ருக்­கின்­றன.

இது சர்­வ­தேச மட்­டத்­திற்கு நீளும் வகையில் பல நாடு­க­ளையும் முகம் சுளிக்கச் செய்­தி­ருப்­ப­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றார்கள்.

ஜனா­தி­ப­தி­யாக இரண்­டா­வது பதவிக் காலத்தில் பதவி வகித்துக் கொண்­டி­ரு க்­கின்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே, ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்கு முனைந்­தி­ருக்­கின்றார்.

மோச­மான ஒரு யுத்தச் சூழ­லி­லேயே, முதற் தட­வை­யாக மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி பத­விக்குத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். ஜனா­தி­ப­தி­யாகப் பதவியேற்­றதும், யுத்த நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்­திய அவர், 2009 ஆம் ஆண்டு யுத்­தத்தில் அடைந்த மகத்­தான வெற்­றியை மூல­த­ன­மாகக் கொண்டு, தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­பா­கவே ஜனா­தி­பதி தேர்­தலை நடத்தி, அதிலும் அவரே வெற்­றி­பெற்­றி­ருந்தார்.

அதே யுத்த வெற்றி என்ற அர­சியல் மூல­த­னத்­தையும், தனக்­கி­ருந்த அர­சியல் அதி­கார பலத்­தையும் பயன்­ப­டுத்தி 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து ஒருவர் எத்­தனை தட­வைகள் வேண்­டு­மா­னாலும் ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிக்­கலாம் என்ற திருத்­தத்தைக் கொண்டு வந்தார்.

இந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­திற்கு முன்னர் ஒருவர் இரு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டி­யாது என்ற கட்­டுப்­பாடு அர­சி­ய­ல­மைப்பில் இருந்து வந்­தது. இந்தக் கட்­டுப்­பாட்டை அவர், 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்­டத்தின் மூலம் நீக்கி, மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்தலில் தான் போட்­டி­யி­டு­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்திக் கொண்டார்.

சட்ட ரீதி­யாக இந்த மாற்றம் கொண்டு வரப்­பட்­டுள்ள போதிலும், அது தொடர்பில் உண்­மை­யான – சட்­ட­ரீ­தி­யான பொருள் கோடல் என்ன என்­பது குறித்து இப்­போது சூடான விவா­தங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.

ஒரு சாரார் சட்­டத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும், பத­வியில் இருக்­கின்ற ஜனா­தி­பதி அவ்­வாறு மூன்­றா­வது தட­வை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்று வாதிட்டு வரு­கின்­றனர்.

இந்த 18 ஆவது சட்­டத்­தி­ருத்தம் கொண்டு வரப்­பட்­ட­போது, அவர் அந்தப் பத­வியில் இருந்த கார­ணத்­தினால், அவர், திருத்­தப்­பட்ட புதிய சட்ட விதி­க­ளுக்கு உட்­ப­ட­வில்லை என்­பது அவர்­களின் வாத­மாகும்.

திருத்தச் சட்டம் உரு­வாக்­கப்­பட்ட பின்னர் நடை­பெ­று­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வரே மூன்­றா­வது தட­வை­யா­கவும் போட்­டி­யிட முடியும் என்­பது அவர்­க­ளு­டைய முடிவு. ஏற்­க­னவே பத­வியில் உள்­ள­வ­ருக்கு இந்தச் சட்டம் பொருந்­த­மாட்­டாது என்­பது அவர்­களின் பொருள்கோட­லாக உள்­ளது.

இந்தப் பின்­ன­ணி­யில்தான், மூன்­றா­வது முறை­யாக தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா, இல்­லையா என்­பது குறித்து உச்ச நீதி­மன்­றத்­திடம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ விளக்க ஆலோ­சனை கோரி­யி­ருக்­கின்றார்.

அவ­ரு­டைய மனுவை ஏற்­றுக்­கொண்ட உச்ச நீதி­மன்­றத்தில், பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் தலை­மையில் ஒன்­பது நீதி­ய­ர­சர்கள் அடங்­கிய நீதி­ய­ரசர் குழு­வொன்று இந்தக் கோரிக்கை குறித்து ஆராய்ந்து, அதன் முடிவை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­தி­ருக்­கின்­றது.

உச்ச நீதி­மன்­றத்­திடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆலோ­சனை தொடர்பில், ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் சட்ட விளக்­கங்கள் அடங்­கிய 38 ஆலோ­ச­னைகள் உச்ச நீதி­மன்­றத்­தி டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவை எல்­லா­வற்­றையும் உள்­ள­டக்கி ஆய்வு செய்த பிர­தம நீதி­ய­ரசர் தலை­மை­யி­லான ஒன்­பது பேர் அடங்­கிய நீதி­ய­ரசர் குழு­வினர் தமது பொருள் கோடல் விளக்­கத்தை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

உச்ச நீதி­மன்­றத்தின் இந்த விளக்­கத்தின் உள்­ள­டக்கம் என்ன என்­பது ஜனா­தி­பதி மாளி­கை­யி­னாலோ அல்­லது ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­தி­னாலோ உட­ன­டி­யாகப் பகி­ரங்­கப்­படுத்தப்­ப­ட­வில்லை. அவ்­வாறு அது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டுமா இல்­லையா என்­பது யூகிக்க முடி­யாமல் இருக்­கின்­றது.

அதே­நேரம், ஜனா­தி­பதி தேர்­தலில் ஒருவர் போட்­டி­யி­ட­லாமா இல்­லையா என்­பதைத் தீர்­மா­னித்து ஒரு முடிவைத் தெரி­விப்­ப­தற்கு தேர்தல் ஆணை­யா­ள­ருக்கே அதி­காரம் இருக்­கின்­றது. தனி மனி­த­ரா­கிய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச, தேர்தல் ஆணை­யா­ளரின் இந்த அதி­கா­ரத்தை அவ­ருக்­குள்ள உரி­மையை மீறும் வகையில் நீதி­மன்­றத்­திடம் விளக்கம் கோரி­யி­ருப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

அடுத்த தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா இல்­லையா என்று ஜனா­தி­பதி உச்ச நீதி­மன்­றத்­திடம் ஆலோ­சனை கோரி­யி­ருப்­பது அவ­ரு­டைய தனிப்­பட்ட விடய­மாகும். அந்த முடிவைப் பொது­வா­ன­தாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்ற பொருள்­படும் வகை­யிலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூற்று அமைந்திருக்­கின்­றது.

இது ஒரு புற­மி­ருக்க, ஜன­வரி மாதத்தில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாகத் தகவல் வெளி­யா­கி­யுள்ள அதே­நே­ரத்தில், பாப்­ப­ரசர் புனித பிரான்சிஸ் அவர்­களின் இலங்கை வருகை பற்­றிய உறு­தி­யான தக­வல்­களும் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வது பற்­றிய ஐயப்­பாட்­டையும், தேர்­த­லுக்­கான திகதி குறிப்­பது தொடர்­பிலும் பல்­வேறு வினாக்­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு குழப்­ப­க­ர­மான பின்­ன­ணி­யில்தான் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை ஆத­ரிக்க முன்­வர வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு விடுத்­துள்ள அழைப்பு ஒன்றின் ஊடாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ச கோரி­யி­ருக்­கின்றார்.

ஏன் இந்த அழைப்பு?

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான போர் வெற்­றியும், மீண்டும் புலி வரு­கின்­றது என்ற அச்­ச­மூட்­டு­கின்ற பூச்­சாண்டி அர­சியல் கோஷ­மும்தான் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குழு­வி­னரின் அர­சியல் தந்­தி­ரோ­பாய பாணி­யாக இருந்து வரு­கின்­றது.

பேரின மக்­களின் அர­சியல் ஆத­ரவைத் தக்க வைத்துக் கொள்­வ­திலும், அதனை மேலும் மேலும் வலுப்­ப­டுத்திச் செல்­வ­தி­லுமே ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கத் தரப்­பினர் தீவிர கவனம் செலுத்தி வந்­தி­ருக்­கின்­றனர்.

இந்த பேரி­ன­வாத அர­சியல் போக்கில் இருந்து அவர்கள் இம்­மி­ய­ளவும் இது­வ­ரையில் மாற­வில்லை. யுத்தம் முடி­வுக்கு வந்த ஐந்து வருட காலத்தில், எந்த ஒரு சந்­தர்ப்­பத்­தி­லும்­கூட, தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் பிரச்­சினை இருக்­கின்­றது.

அவர்­க­ளு­டைய அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன என்ற ஆறு தசாப்­தத்­திற்கும் மேற்­பட்ட காலம் நீடித்­துள்ள அர­சியல் ரீதி­யான உண்­மையை, நிலைப்­பாட்டை அவர்கள் பகி­ரங்­க­மாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. உளப்­பூர்­வ­மாக உணர்ந்து கொண்­டி­ருப்­ப­தாகக் காட்­டிக்­கொள்­ளவும் இல்லை.

தமி­ழர்­க­ளா­யினும் சரி, முஸ்­லிம்­க­ளா­யி­னும்­சரி அவர்­க­ளுடன் அர­சியல் பேரம் பேசி, நிபந்­த­னை­களின் அடிப்­ப­டை­யி­லான இணக்­கப்­பாடு என்ற அத்­தி­வா­ரத்தின் மீது அவர்கள் அர­சியல் நடத்­து­வ­தற்குத் தயா­ரில்லை.

மாறாக மேலா­திக்க அர­சியல் போக்கின் அடிப்­ப­டை­யி­லேயே நாட்டில் அர­சி­யலை அவர்கள் நடத்தி வரு­கின்­றார்கள். விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இடமே இல்லை. மற்­ற­வர்கள் இணங்கி வர­வேண்­டு­மே­யொ­ழிய, நாங்கள் இணங்கி வர­மாட்டோம் என்­பதே அவர்­களின் அர­சியல் சித்­தாந்­த­மாக இருக்­கின்­றது.

இந்தச் சூழ்­நி­லை­யில்தான் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவுக்கு வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ர­வ­ளிக்க முன்­வர வேண்டும் என்று இந்த அர­சாங்­கத்தில் அதி­கார பல­முள்­ள­வர்­களில் ஒரு­வ­ரா­கிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் சகோ­த­ர­ரு­மா­கிய பஷில் ராஜ­பக் ஷ அழைத்­தி­ருக்­கின்றார்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான வெற்றி வாகையும், புலி வரு­கின்­றது புலி வரு­கின்­றது என்ற புலிப் பூச்­சாண்­டியும் பேரின மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதியாகப் புளித்துப் போய் விட்­டதோ என்ற சந்­தே­கத்­தையே அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷவின் இந்த அழைப்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­ய­டை­வ­தற்கு ஒருவர் 51 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­றி­ருக்க வேண்டும் என்­பது தேர்தல் திணைக்­கள விதியாகும்.

இந்த நிலையில் 75 வீத­மாக உள்ள சிங்­கள வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் அர­சியல் வாக்குறுதிகளையும், அவ­ரு­டைய  கொள்­கை­க­ளையும்  ஏற்று  வாக்­க­ளித்­தாலே போதும், அவர் இல­கு­வாக தேர்­தலில் வெற்றி பெற்­று­விட முடியும் என்ற துணி­வி­லேயே காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெற்று வந்­தி­ருக்­கின்­றன.

ஆனால், அர­சாங்­கத்தின் போக்கில் சிங்­கள மக்கள் மத்தியில் ஏற்­பட்­டி­ருப்­ப­தாகச் சொல்­லப்­ப­டு­கின்ற அதி­ருப்­தியும், ஏதேச்­ச­தி­கா­ரத்தை நோக்­கிய ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் அர­சியல் போக்கும், ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற சிந்­தனைப் போக்­கையும் அரசியல் செயற்­பாட்­டையும் சிங்­கள அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றன.

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான இந்த எதிர்ப்பு அர­சியல் அலை­யா­னது நாட்டின் தென்­ப­குதி மக்கள் மத்­தியில் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது என்­பதே அர­சியல் அவ­தா­னி­களின் கணிப்­பாகும்.

அண்­மையில் நடந்து முடிந்த ஊவா மாகாண சபைக்­கான தேர்தல் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள அர­சியல் செல்­வாக்கின் சரிவை, துல்­லி­ய­மாக எடுத்துக்காட்­டி­யி­ருக்­கின்­றது என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

இந்த அர­சியல் யதார்த்­தத்தை உணர்ந்த நிலை­யி­லேயே அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்­கத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க முன்­வர வேண்டும் என்று கோரி­யி­ருக்­கின்றார்.

அமைச்சர் பஷில் ராஜ­பக்­ ஷ­வுக்கு முன்­பாக இந்த ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து உரை­யாற்­றிய நிதி அமைச்சரா­கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைக்க முன்­வர வேண்டும் என்று அழைத்­தி­ருந்தார்.

இது­கால வரை­யிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இந்த அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கவே இல்லை என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ, அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­கதோர் அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவிற்கு ஆதரவளித்து, கூட்­ட­மைப்பு தனது நேர்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சியல் ரீதி­யா­கவோ, இரா­ஜ­தந்­திர வழி­மு­றை­யிலோ தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விற்கு இது­வ­ரையில் ஆத­ரவு வழங்கிய­தில்லை என்று அமைச்சர் பஸில் ராஜ­பக் ஷ ஆதங்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.

அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ­விற்குப் பதி­ல­ளித்­துள்ள கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன், அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காக இது­வ­ரையில் தாங்கள் பல தட­வைகள் காட்­டிய கண்­ணி­ய­மான நல்­லெண்­ணத்தை அர­சாங்கம் சரி­யான முறையில் பயன்ப­டுத்தத் தவ­றி­விட்­டது என்­பதைச் சுட்­டிக்­காட்டி, இருந்தாலும், அமைச்சர் பஸில் ராஜ­பக்­ ஷவின் அழைப்பை ஆழ­மாகப் பரி­சீ­லிக்கப் போவ­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கசப்­பு­ணர்வைப் போக்கி நேர்­மையை வெளிப்­ப­டுத்­து­வார்­களா?

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி பத­வியில் நீடித்­தி­ருக்க வேண்டும் என்­பதில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த வகை­யிலும் தேவை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஏனெனில் விடு­த­லைப்­பு­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்னர், யுத்­தத்தை முடித்­ததும், இனப்­பி­ரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்த அவர், யுத்­தத்தில் வெற்றி பெற்­றதன் பின்னர், அது­பற்றி அக்­க­றை­யற்ற போக்­கி­லேயே நடந்து கொண்டிருக்­கின்றார்.

யுத்தம் முடி­வுக்கு வந்­த­போ­திலும், பிரச்­சி­னைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. பிரச்­சி­னை­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­காக அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற தவிர்க்க முடி­யாத அவ­சி­யத்தை அவர் உணர்ந்து கொண்­ட­தாகக் காட்­டிக்­கொள்­ளவே இல்லை. இது தமிழ் மக்கள் மத்­தியில் மிகவும் ஆழ­மான கசப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

அதுமட்­டு­மல்­லாமல், யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­திலும், அவர்­க­ளுக்­கான மறு­வாழ்வை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­திலும், யுத்­தத்தால் அழிந்­துள்ள பிர­தே­சங்­களை மீளக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் அபி­லா­சைகள்.

எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றை நிறை­வேற்­றத்­தக்க வகையில் அவர்­களின் பங்­க­ளிப்பைப் பெறு­வ­தற்கும் ஜனா­தி­ப­தியும், அரச தரப்­பி­னரும் தவ­றி­விட்­டார்கள். அது மட்­டு­மல்­லாமல் மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு, மீள்­கட்­ட­மைப்பு உள்­ளிட்ட அனைத்துச் செயற்­பா­டு­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு மேலும் மேலும் பாதிப்பு ஏற்­ப­டத்­தக்க வகை­யி­லேயே அரச தரப்­பினர் செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். இன்னும் செயற்­ப­டு­கின்­றார்கள்.

மறு­பக்­கத்தில் யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, யுத்தம் நடை­பெற்ற பகு­தி­களில் இருந்து அகற்­றப்­பட்­டி­ருக்க வேண்­டிய இரா­ணு­வத்­தி­னரை அங்­கேயே அனைத்து நவீன வச­தி­க­ளு­டனும் நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்­தி­யி­ருப்­பது மட்­டு­மல்­லாமல், அந்த மக்­க­ளு­டைய சிவில் வாழ்க்­கையில் ஆக்­கி­ர­மிப்பு ரீதி­யான தலை­யீட்­டிற்கும் அர­சாங்கம் அனு­ம­தித்­தி­ருப்­பதை அந்த மக்­களால் ஜீர­ணிக்க முடி­யா­தி­ருக்­கின்­றது.

யுத்தம் நடை­பெற்ற பகு­தியில் ஜன­நா­ய­கத்தை மீண்டும் நிலை­நி­றுத்­து­வ­தாகக் கூறி நடத்­தப்­பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களின் பின்னர், அந்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­களைக் கொண்டு தங்­களைத் தாங்­களே நிர்­வ­கித்துக் கொள்­ளத்­தக்க வகையில் சுதந்­தி­ர­மாகச் செயற்­ப­டு­வ­தற்கு அர­சாங்கம் அனு­ம­திக்­க­வில்லை.

அந்த நிர்­வாகச் செயற்­பா­டு­களில் அர­சி­யலைப் புகுத்தி, பல்­வேறு தடை­களை ஏற்­ப­டுத்தி இடர்ப்­பா­டு­களில் அந்த நிர்­வா­கங்­க­ளையும் மக்­க­ளையும் அர­சாங்கம் சிக்க வைத்­தி­ருப்­ப­தையும் அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வு­ரி­மையைப் பறித்­தெ­டுக்கும் நோக்கில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சிங்­களக் குடி­யேற்றம், வாழ்­வா­தார உரிமை மறுப்பு, நில உரிமை அப­க­ரிப்பு போன்ற, அர­சாங்­கத்தின் பல்­வேறு செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் மீது கசப்­ப­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

யுத்தம் முடி­வுக்கு வந்­தபின் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக அமைச்சர் பஸில் ராஜ­பக் ஷ கூறு­கின்ற அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்த முடி­யாமல் போயுள்ள, பத­வியில் உள்ள ஜனா­தி­ப­தி­யினால், மூன்­றா­வது பத­விக்­கா­லத்தில் அத்­த­கைய அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­துவார் என்­ப­தற்கு எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­தமும் கிடை­யாது.

அதற்கு, அர­சியல் ரீதி­யான சமிக்­ஞை­க­ளையும் காண முடி­ய­வில்லை. இந்த நிலை­மையில் தமிழ் மக்கள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவாகவே இருக்க முடியும்.

மனித உரிமை மீறல் தொடர்பில் பொறுப்பு கூறத் தவறியிருப்பது, போர்க்குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பது, இதன் காரணமாக ஐ.நா. மட்டத்திலான சர்வதேச விசாரணைக்கு ஆளாகியிருப்பது, போன்ற இக்கட்டுக்களில் இருந்து அரசாங்கமும், ஜனாதிபதியும் தப்புவதற்கு வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அத்துடன் எதேச்சதிகாரப் போக்கிலான ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டிருப்பதனால், அதனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று உள்நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள அரசியல் சக்திகளின் எதிர்ப்பையும் முறியடிப்பதற்கு இந்த ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இனப்பிரச்சினைக்கு சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமான ஒரு தீர்வுத் திட்டத்தை ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷ முன்வைக்க வேண் டும்.

அதன் அடிப்படையில் சர்வதேச பிரதி நிதித்துவத்தின் முன்னிலையில் தமிழர் தரப்புடன் திறந்த மனதோடு பேச்சுக்கள் நடத்துவதற்கு உரியதொரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

இதனை ஜனாதிபதி நடைமுறைப் படுத்துவார் என்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இரா ணுவத்தை வெளியேற்ற வேண்டும். அங்குள்ள மாகாண சபைகள் அரசியலமை ப்பில் உறுதியளித்துள்ளவாறாக அதிகாரங்களுடன் செயற்படுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இதுபோன்ற செயற்பாடுகளில் ஜனாதி பதியும் அரசாங்கமும் தாமதமின்றி ஈடுபட்டு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான அரசியல் நேர்மையை வெளிப்படுத்தினால் தமிழ் மக்கள் நூறு வீதம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். ஒத்துழைப்பார்கள்.

கூட்டமைப்பின் நேர்மையைக் காட்டுமாறு கோரியுள்ள அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பிலான அரசியல் நேர்மையை முதலில் வெளிப்ப டுத்துவதற்கு முன்வரவேண்டும்.

இதற்கு முன் வருவார்களா?

Share.
Leave A Reply