ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் மின்னாமல் முழங்காமல் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. மூலவிளைவுகள், பக்க விளைவுகள் என்று குறிப்பிடுவது போல் மாகாண சபை ஆட்சி முறையிலும் பல மாற்றங்கள் வந்து விடக்கூடும் என ஆருடம் கூறுவது போல் கிழக்கு மாகாண சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25.11.2014) எதிர்பாராத நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் இரண்டாம் பருவகால தேர்தல் 2012ஆம் ஆண்டு செப்ெடம்பர் மாதம் (8.9.2012) நடந்து முடிந்ததன் பின் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை யாருடன் கூட்டுச்சேர்ந்து யார் அமைக்கப்போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்புக்களும் எதிர்வு கூறல்களும் இடம்பெற்ற வேளையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக ஆகிக்கொண்டு ஆட்சியை அமைத்தவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆகும்.
இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாண சபை யின் ஆட்சிப்பங்காளர்களாக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் தாம் ஆளும் ஐக்கிய மக்கள் சு.கூ. வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தலைமையிலான குழுவினரான மாகாண சபை உறுப்பினர்களான எம். எஸ். சுபைர் மற்றும் ஸிப்லி பாறூக் ஆகிய மூவருமே ஆட்சிக்கு வழங்கிய ஆதரவிலிருந்து விலத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தாம் மூவரும் ஆளும் தரப்புக்கு கிழக்கு மாகாண சபையில் வழங்கிய ஆதரவை நிறுத்தி தனித்து இயங்கப் போவதாகவும் இவ்வாறானதொரு தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீடக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இவர்கள் மூவரின் அல்லது அ.இ. மக்கள் காங்கிரஸின் இந்த விலகல் கிழக்கு மாகாண ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். குறிப்பாக சொல்லப்போனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிக்கு கிழக்கில் விரைவில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகின்றன.
இது சாத்தியமானதா? இல்லையா? என்பது பற்றி ஆராய்வதற்கு முன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சிப்பீடம் எவ்வாறு அமைக்கப்பட்டது. அதன்தற்போதைய ஆட்சிப்பலம் என்ன என்பது பற்றி சுருக்கமாகப் பார்ப் போம்.
மூன்று மாவட்டத்தையும் 37 மொத்த உறுப்பினர்களையும் கொண்ட கிழக்கு மாகாண சபையின் 2012ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.
கட்சி பெற்ற ஆசனங்கள் ஐ.ம.சு. கூட்டு 14
த.தே.கூட்ட 11
முஸ். காங்கிரஸ் 07
ஐ.தே.கட்சி 04
தே.சு.முன்னணி 01
இந்த முடிவுகளின் படி ஐ.ம.சு கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் 07 உறுப்பினர்களும் தே. சுதந்திர முன்னணியின் 1 உறுப்பினருமாக 22 உறுப்பினர்கள் பலத்துடன் ஐ.மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவிக் கொண்டது.
இதில் குறிப்பிடக்கூடிய முக்கியமான விடயமென்னவென்றால், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியன கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட்டே தமது உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் தாம் தனித்து இயங்கப்போகின்றோம் என அறிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியின் உறுப்பினர்கள் மூவரும் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தே தெரிவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறித்த மூன்று உறுப்பினர்களும் கட்சியின் நியதிக்கு மாறாக செயற்பட முடியுமா என்பது சட்டம் சார்ந்த பிரச்சினையாகும்.
தற்பொழுது எதிர்பார்க்கப்படுகின்ற அல்லது எதிர்வு கூறுகின்ற இன்னொரு விடயம் கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு கூட்டமைப்புக்கு ஆதரவு நல்கிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறும் முடிவொன்று அக்கட்சியின் உயர்பீடத்தால் எடுக்கப்படுமாயின் இப்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றமொன்று நடைபெற வாய்ப்புண்டு.
அதாவது கிழக்கில் ஆட்சிபுரியும் ஐ.மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி கவிழக்கூடும் என்ற அபிப்பிராயங்கள் பொதுவாக பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு மின் செய்தியாகக் காணப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனித்துவமான கொள்கைப்பற்றுக் கொண்ட கட்சி. கிழக்கு மாகாண சபை யில் தமது கட்சியின் தனித்துவம் மீறப்படாமல் தன் சின்னத்தில் போட்டியிட்டு 7 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. சு. கூட்டமைப்பின் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
ஆளும் அரசாங்கத்தில் அங்கம் பெறும் கட்சியாக இருக்கும் காரணத்தினால் சேர்ந்தே போட்டியிட வேண்டுமென அரசாங்கத்தினால் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் அவற்றை உதாசீனம் செய்து விட்டு தனித்துப்போட்டியிட்டார்கள் அதனால் மு. காங்கிரஸினால் 7 ஆசனங்களைக் கைப்பற்ற முடிந்தது.
மறுவார்த்தையில் கூறுவதானால், அரசாங்க தரப்பினருடன் இணைந்தோ அவர் களுடைய சின்னத்திலோ போட்டியிட்டிருப்பார்களேயானால் குறித்த எண்ணிக்கை உடைய ஆசனங்களைப் பெற முடியாமலும் போயிருக்கலாமென்ற விமர்சனங்கள் இருக்கத்தான் செய்தது.
கிழக்கில் சிறுபான்மை சமூகத்தின் கூட்டு இணைவுடன் ஒரு ஆட்சி அமைக்கப்பட வேண்டும். அதற்கு எத்தகைய விட்டுக் கொடுப்புகளையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த ஒரு ஆட்சி அமைப்பதன் மூலம் சிறுபான்மை சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்க வேண்டுமென்ற அழைப்பையும் கோரிக்கையையும் த.தே. கூட்டமைப்பினர் மிக விசுவாசமாக தேர்தலுக்கு முன்னும் பின்னும் விட்டிருந்துங்கூட அந்த விசுவாசமான அழைப்புக்கள் எல்லாம் உதா சீனம் செய்யப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடனும் அதன் உயர் பீடத்துடனும் பல்வேறு சந்திப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுங்கூட அவை புறக்குடத்து நீராகவே ஆகியது. முடிவு முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்ததுடன் இரண்டு மாகாண அமைச்சர் பதவிகளையும் சுவீகரித்துக் கொண்டது.
இதற்கு இடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும். கிழக்கின் முதல் அமைச்சராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் ஆளும் அரசாங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மிக தந்திரோபாயமாக காயை நகர்த்தி கிழக்கின் முதல் அமைச்சராக தமது கட்சியைச் சேர்ந்த நஜீப் ஏ.மஜீதுவை முதலமைச்சராக நியமித்ததன் மூலம் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது.
ஒன்று தனது கட்சியை சேர்ந்த ஒருவரை முதல் அமைச்சராக ஆக்கியமை. மற்றொன்று கிழக்கின் முதலமைச்சராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற ஏனைய கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றியமையாகும். இதில் இன்னொரு விடயம் இரண்டரை வருடங்களுக்குப் பின் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என்பதாகும்.
இப்படியான அரசியல் சூழ்நிலையில் தான் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலும் அதனைத் தொடர்ந்து கட்சி மாற்றங்களும் தவல்களும் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் தொடர் நிலையாக கடந்த புதன்கிழமை (26.11.2014) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் ஐ.தே.கட்சியு டன் இணைந்து கொண்ட சம்பவமும் முஸ் லிம் அரசியல் சமூகங்களுக்கிடையே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
இந்த அரசியல் சூழ்நிலையில் அனுகூலங்கள் பிரதி கூலங்களுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளப்போகின்றது அது எடுக்கப்போகும் முடிவு முஸ்லிம் சமூகத்தின் சமூக அரசியல் சார்ந்த போக்குகளில் கணிசமான மாற்றங்களைக் கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்புகளாகும்.
குறிப்பாக கிழக்கு மாகாண ஆட்சி முறையில் அதிரடியான மாற்றங்களை உருவாக்கி விடலாமென்ற எதிர்பார்ப்புக்கள் எதிர்வு கூறல்கள் வியாக்கியானங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன்று காரசாரமான உரையாடல்களாக மாறியிருக்கிறது.
இதன் நடுவே முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹசன் அலி இவ்வாறு ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
அதில் இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட சிறுபான்மை சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் எத்தகைய தீர்வுகளை முன்வைப்பார்கள் என்பதிலேயே முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைப் பிரகடனம் (தேர்தல் விஞ்ஞாபனம்) உட்பட்ட சம கால அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்தே தீர்க்கமான முடிவை எடுப்போம் என தெரிவித்துள் ளார்.
இவரின் இவ்வகை அறிவித்தலுக்குப் பின்னாலான முடிவு எதுவாக இருக்கப்போகிறது என்பது பற்றி குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கிடையே பல்வேறு அபிப்பிராயங்களும் கருத்துக்களும் இருந்து வருகிற போதும் இன்றைய சூழலில் முஸ்லிம் மக்களின் தீர்மானங்கள் ஒரு திசை சாய்ந்ததாக இருப்பதே கசப்பான உண்மை.
முஸ்லிம் மக்கள் மீது அண்மைக்காலமாக கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் அநியாயங்களின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? இதை மிக நிதானமாகவும் கவனமாகவும் ஆராய்ந்து முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு நல்க வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டுமென முஸ்லிம் மக்கள் உள்ளூர வெம்பிக் கொண்டிருப்பதை கேட்க முடிகிறது.
ஜனாதிபதி தேர்தலின் போக்குகளும் அதுபற்றி விமர்சனங்களும் ஒருபுறமிருக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகிற முடிவு கிழக்கு மாகாண ஆட்சியில் எவ்வித மாற்றங்களை திருப்பங்களை உண்டாக்கப்போகிறது என்பதே இன்று காணப்படும் பிரச்சினை.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் போல் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை இடை நிறுத்திக் கொள்ளுமாயின் ஆட்சி மாற்றமொன்றைத் தவிர வேறு நிகழ்வுகள் இடம்பெற வாய்ப்பில்லை. அவ்வாறு இல்லையாயின் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.
ஏலவே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டிருந்த அ.இ.மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்கள் அமீர் அலி தலைமையிலான குழுவினர் தனித்து நின்று இயங்கப்போகிறோமென அறிவித்திருக்கும் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆதரவை விலத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமாயின் எதிரணி தரப்பில் த.தே. கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் ஐ.தே.கட்சியின் 4 உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸின் 7 உறுப்பினர்கள் எதிர்த்தரப்பு ஆகின்றபோது ஆளும் ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண ஆட்சி வீழ்ச்சி அல்லது மாற வேண்டிய நிலைவரம் ஏற்படும்.
கட்சி உறுப்பினர்
த.தே.கூ. 11
மு. காங்கிரஸ் 07
ஐ.தே.கட்சி 04
இந்த நிலைமைகளுடன் மக்கள் காங்கிரஸின் மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து கொள்வார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி தர்மசங்கட நிலைக்கு உள்ளாகும். இதில் இன்னுமொரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் அ. இ. மக்கள் கட்சி ஆகிய இரண்டும் தமது ஆதரவை வாபஸ்பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் அமை ச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களான கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த சம்மாந்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமீர் நிந்தவூரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆரிப்ஷம்சுதீன் போன்றவர்கள் தங்களின் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலையேற்படும்.
ஏனெனில் சமூகம் சார்ந்த மாற்றங்களுக்கு இவர்கள் உடன்பட்டுப் போகவில்லை யாயின் தம் ஆட்சிக்கு உட்பட்ட உள்ளூராட்சி சபைகளையும் மற்றும் நிலைகளை யும் பறிகொடுக்க வேண்டி வரலாமென்ற அபிப்பிராயமே முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
எனவே தற்போதைய இறுக்கமான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் தம் சமூகம் சார்ந்த நலனுக்காக தலைமைத்துவங்களின் ஆணைகளை புறக்கணிக்கும் நிலையொன்று வளர்ந்து வருகிற சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கிழக்கின் முஸ்லிம் தலைமைத்துவங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதிலேயே கிழக்கு மாகாணத்தின் ஆட்சி நிர்ணயிக்கப்படப்போகிறது என்ற உண்மை தெரியாத ஒரு விடயமல்ல.