ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்ள நிலையில், ஆங்­காங்கே அதற்கு சில எதிர்ப்­பு­களும், முணு­மு­ணுப்­பு­களும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெரும்­பாலும், இந்த தேர்­தலில் யாரையும் ஆத ­ரிக்­காமல் ஒதுங்­கியே நிற்கும் என்ற கருத்துத்தான் வலுப்­பெற்று வந்­தி­ருந்தது.

எந்த வேட்­பா­ள­ரையும் ஆத­ரிக்­காமல் – தமிழ் மக்­களே விரும்­பிய வேட்­பா­ளரை ஆத­ரிக்­கலாம் என்ற கோரிக்­கையை இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விடுக்கும் என்றே பலரும் எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.

ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும், முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும், ஆத­ரவு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பின்னடைவைக் கொடுத்து விடலாம் என்ற கருத்து ஒன்று உரு­வா­கி­யி­ருந்­தது.

அதா­வது கடும்­போக்கு சிங்­கள வாக்­கா­ளர்­களின் வாக்­கு­களை மைத்­தி­ரி­பால சிறி­சேன உடைக்க வேண்­டி­ய­வ­ராக இருப்பதால், அவர்­களின் ஆத­ரவை இழந்து விடக் கூடாது என்­ப­தற்­காக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சற்று ஒதுங்கி நிற்கலாம் எனக் கரு­தப்­பட்­டது.

இந்தத் தேர்­தலில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­க­டிக்­கப்­பட வேண்டும், ஆட்சி மாற்றம் ஏற்­பட வேண்டும் என்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே உறு­தி­யான முடிவை எடுத்­தி­ருந்­தது.

எனவே தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்போ, தமிழ்­மக்­களோ சாரும் போது, அது அவருக்கு சுமை­யாக அமைந்து விடலாம் என்ற அச்சம் ஏற்­பட்­டி­ருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­ததால் சிங்­ கள மக்கள் அவரை ஆத­ரிக்­காமல் ஒதுங் கிக் கொள்­வரோ என்ற கவலை இருக்­கவே செய்­தது.

எனினும், இவற்­றை­யெல்லாம் மீறி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க முடி­வெ­டுத்­தி­ருக்­கி­றது.

இந்த தீர்­மானம் முற்­றி­லு­மா­கவே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவைத் தோற்க­ டிக்க வேண்டும் என்ற அடிப்­படைக் கொள்கையில் இருந்து எடுக்­கப்­பட்ட முடிவே தவிர, வேறெந்தக் கார­ணங்­க­ளையும் அடிப்­ப­டை­யாக கொண்­ட­தல்ல.

அவ்­வாறு வேறு கார­ணங்­களை வைத்து, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புக்கு எந்த அடிப்­ப­டையும் கிடை­யாது. ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு டன் அவர்­க­ளுக்கு எந்த உடன்­பாடும் ஏற்பட்டிருக்கவில்லை.

தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது தொடர்­பான, திட்­டங்கள் எதையும் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேர்தல் அறிக்கையிலோ அல்­லது தேர்தல் மேடை­க­ ளிலோ வாக்­கு­று­தி­யாக வழங்­கவும் இல்லை.

எனவே, தனிப்­பட்ட ரீதி­யாக, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் எந்தக் கார­ணத்­தையும் தமிழ் மக்­களின் முன்­பாக வைக்க முடி­யாது.

ஆனால், மஹிந்த ராஜ­ப­க் ஷவைத் தோற்க­டிக்க வேண்டும் என்­ப­தற்கு அவர்­க­ளி டம் ஆயிரம் கார­ணங்கள் இருக்­கின்­றன.

அது­பற்றித் தமிழ்­மக்கள், தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­பிடம் கேள்வி எழுப்பப் போவதும் இல்லை.

ஏனென்றால், தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் பேசித் தீர்க்க முயன்று தோற்றுப் போன நிலையில் இருக்­கி­றது.

கொடுத்த வாக்­கு­று­தி­களை மகிந்த ராஜ­பக் ஷ காப்­பாற்­ற­வில்லை என்ற நிலை யில், அவரைத் துணிந்து எதிர்க்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இருக்­கி­றது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­ப­தற்­காகவே, எதி­ர­ணியின் பொது­வேட்­பா­ளரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடிவு செய்­தி­ருக்­கி­றது.

அதே­வேளை, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் எழுத்­து­மூல உடன்­பாடு எதையும் செய்து கொள்­ளா­விட்­டாலும், அவர் மீது தமக்கு நம்­பிக்கை உள்­ள­தாகக் கூறி­யி­ருக்­கிறார், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன்.

இதே நம்­பிக்­கையை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, மீதும் வைத்து தான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பேச்­சுக்­களை நடத்தியி­ருந்­தது.

எனினும், அவர் அந்த நம்­பிக்­கையை சிதைத்து விட்ட நிலையில், புதி­யவர் ஒருவர் மீது நம்­பிக்கை வைக்க முயன்றிருக்கிறது கூட்­ட­மைப்பு.

இது­கு­றித்து நிறை­யவே விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வெளியே இருப்­ப­வர்கள் மட்­டு­மன்றி, உள்ளே இருப்­ப­வர்கள் கூட, முற்­றி­லு­மாக இந்த முடிவை ஆத­ரிக்­கி­றார்கள் என்று கூற முடி­யாது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இருக்கும் கடும் போக்­கா­ளர்­க­ளுக்கு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இந்த முடிவு அதிருப்­தியைக் கொடுத்­தி­ருப்­ப­தா­கவே தெரி­கி­றது. ஒரு­சிலர் அதனை வெளிப்­ப­டுத்­தியும் இருக்­கி­றார்கள்.

இருந்தபோதிலும் இந்தத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முடி­வுக்கு எதி­ராக தமிழ் மக்கள், வாக்­க­ளிக்கும் நிலை ஏற்­படும் என்று ஒரு­போதும் கருத முடி­யாது.

ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த முடிவை எடுப்­ப­தற்கு முன்­னரே, தமிழ் மக்கள் தாம் யாருக்கு வாக்­க­ளிக்கப் போகிறோம் என்­பதை ஏற்­க­னவே முடிவு செய்து விட்­டார்கள் என்று தான் கூற வேண்டும்.

பொது­வாக, ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் தமிழ் மக்கள் அவ்­வ­ள­வாக அக்­கறை கொள்­வ­தில்லை என்­றாலும், அவர் கள் எப்­போதுமே, ஆட்­சியில் உள்ள ஜனா­தி­ப­திக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்து வந்­துள்­ளனர்.

எதி­ர­ணியின் வேட்­பாளர் மீது குறைந்­த­பட்ச நம்­பிக்­கையை, தமிழ் வாக்­கா­ளர்கள் எப்­போ­துமே வெளிப்­ப­டுத்தி வந்திருக்கின்றனர்.

நாட்டின் பிற­ப­கு­தி­களில், தோல்­வி­ய­டையும், எதி­ரணி வேட்­பா­ளர்கள் கூட, வாக்­குகள் குறை­வாகக் கிடைத்­தாலும், வடக்கு, கிழக்கில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற்று விடு­வ­துண்டு.காரணம், அர­சாங்­கத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­பதை, தமிழ் வாக்காளர்கள் ஒரு மர­பா­கவே கருதி வந்­தி­ருக்­கி­றார்கள்.

காலம்­கா­ல­மாக ஆட்­சியில் இருந்து வந்­துள்ள, அர­சாங்­கங்கள், எது­வுமே, தமிழ்­மக்­களை கவரக் கூடி­ய­தா­கவோ, அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­வ­தா­கவே இருந்­தி­ருக்­க­வில்லை.

எனவே தான், எதி­ர­ணியின் மீது அவர்­க­ளுக்கு இயல்­பான கவர்ச்சி – ஈர்ப்பு உரு­ வா­கி­றது. தமிழ்த் தேசி­ய­வாத உணர்­வையும் தாண்டி, இந்த அரச எதிர்ப்பு உணர்வு தான் தமிழ் மக்­களை வாக்­க­ளிக்கத் தூண்­டு­கி­றது.

இதனை எதி­ர­ணியின் மீதான ஆத­ரவு அலை என்று குறிப்­பிட முடி­யாது.

அரச எதிர்ப்பு அலை, இயல்­பா­கவே எதிர்த்­த­ரப்­புக்கு சாத­க­மாக மாறி­வி­டு­கி­றது. இந்த நிலை இம்­முறை மட்­டு­மன்றி, கடந்த தேர்­தல்­க­ளிலும் வெளிப்­பட்­டி­ருக்­கி­றது, அடுத்­த­டுத்த தேர்­தல்­க­ளிலும் வெளிப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன.

எனவே, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த முடி­வை­யிட்டு, அந்தக் கட்சி பெரிதாக கவலை கொள்ள வேண்­டி­யி­ருக்­காது.

கடந்­த­முறை சரத் பொன்­சே­காவை ஆத­ரிக்கும் சர்ச்­சைக்­கு­ரிய முடிவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்­தி­ருந்­தது. அப்போது, கடு­மை­யான விமர்­ச­னங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­கொண்­டது.

இருந்­தாலும், வடக்கு கிழக்கில் மட்டும் தான் அவரால், மஹிந்த ராஜ­ப­க்ஷவை விடக் கூடு­த­லான வாக்­கு­களைப் பெற முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அழைப்­புக்கு தமிழ்­மக்கள் முழு ஆத­ரவு அளிக்­க­வில்லை. அதி­க­ள­வானோர் வாக்­க­ளிக்க முன்­வ­ர­வில்லை.

என்­றாலும் வாக்­க­ளிக்க வந்­த­வர்கள், மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தனர்.

ஆனால், இம்­முறை அந்­த­ள­வுக்கு மோச­மா­ன­தொரு நிலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கோ, எதி­ர­ணியின் பொதுவேட்பாள­ருக்கோ இல்லை.

தமிழ்­மக்­களின் வாக்­க­ளிப்பு பாரம்­ப­ரியம், எதி­ர­ணியின் வேட்­பா­ள­ருக்கு சாத­க­மா­கவே இருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முடிவு அவ­ரது கைகளை இன்னும் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த விட­யத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்­றுக்குப் பல­முறை யோசித்தே முடிவை எடுத்­தி­ருக்­கி­றது.

இதன் விளை­வுகள் குறித்து, பல்­வேறு மட்­டங்­க­ளிலும், ஆலோ­ச­னை­களை நடத்தியிருக்கிறது.

எவ்வாறாயினும், இந்த முடிவுக்காக அவர்கள் வருந்த வேண்டிய நிலை ஏற்படாது.

இவ்வாறு கூறுவதற்கு, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி மீது உள்ள நம்பிக்கை காரணமல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையின் மீதும் அவ்வாறு கூறவில்லை.

தமிழ் வாக்காளர்களின் வாக்களிப்பு பாரம்பரியத்தின் அடிப்படையில் தான் அவ்வாறு கூற முடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போனாலும், தமிழ் வாக்காளர்களின் தீர்ப்பு அதுவாகத் தான் இருக்கும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தனக்கு வடக்கில் இம்முறை 30 தொடக்கம், 35 வீத வாக்குகள் தான் கிடைக்கும் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்காது என்று அவரே உணரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்ததில் ஆச்சரியமில்லை.

– என்.கண்ணன்

Share.
Leave A Reply