ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய ஹெல உறுமய, தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 49 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், வெறுமனே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட குழுவினரால் மட்டும்  எவ்வாறு  ஜனாதிபதித்  தேர்தலில்  வெற்றி பெற முடியுமென பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

இரத்தினபுரி பொலிஸ் முன்றிலில் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்;

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது மகிந்த ராஜபக்ஷ குடும்பம் என பிரசாரப்படுத்தப்படுகின்றது. யுத்தகளத்தில் நேருக்கு நேர் நின்று சண்டை புரிந்தது இராணுவத்தினரும் முப்படையினருமாவர். இதனைவிட யுத்தம் காரணமாக ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தினர், முப்படைகள் உயிரிழந்தனர் அல்லது உயிர்த் தியாகம் செய்தனர்.

இதனை நாம் என்ன சொல்வது? இவர்கள் யாரும் யுத்தத்திற்கு பங்களிப்பு செய்யவில்லையா?.

நாம் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமானபோது எம்முடன் 7 பேர் அரசிலிருந்து வெளியேறினர். அதன் பின்னர் 14 பேர், தற்போது 27 ஆகிவிட்டது. இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அரசிலிருந்து மிகக் கூடுதலானவர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் 9 ஆம் திகதி (ஜனவரி) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து வீட்டுக்குச் செல்வது உறுதி.

யுத்தம் காரணமாக நாட்டு மக்கள் கட்சி பேதமின்றி உயிரிழந்துள்ளனர். அதேபோல் யுத்த வெற்றியின்போது நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் தமது இன, மத, மொழி, கட்சி பேதமின்றி கொண்டாடினர். மகிந்த ராஜபக்ஷவை “ராஜா’, “மகாராஜா’ என்றனர்.

எனினும் நான் என்றும் ராஜாவாக விரும்பவில்லை. இலங்கையில் யாரும் அரசர்கள் இல்லை. அரசிகள் இல்லை. அவ்வாறான குடும்பங்கள் இல்லை. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஜனாதிபதி அரசராக வர்ணிக்கப்படுகின்றார்.

2005 ஆம் ஆண்டு உத்தம புருஷராக இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டு முதல் ராஜாவாக மாறிவிட்டார். அவர்களது சகோதரர்களும், குமாரர்களும் இளவரசர்களாக மாறிவிட்டனர். சிலர் தம்மை யுக புருஷர்கள் என காட்டிக் கொள்கின்றனர்.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் அவரது செயற்பாட்டிலும் பேச்சிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் அமைச்சர்கள், அமைச்சரவை மற்றும் முப்படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு வந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் அரச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வந்தன. புதுக்கடை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு அலரி மாளிகையில் எழுதப்படுகின்றது.

இவையனைத்தும் எதிர்வரும் 9 ஆம் திகதி முடிவுக்கு வரும். பொலிஸாரும் அரச சேவையாளர்களும் நீதிமன்றங்களும் தமது கடமையை சரிவரச் செய்வர். இதற்கு நீங்கள் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

நாடு கஸினோ, கசிப்பு, போதைப்பொருள், எதனோல், கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைக்காரர்களின் கையிலுள்ளது. வியாபாரிகளிடம் கப்பம் பெறப்படுகின்றது. வியாபாரிகள் அனைவரும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடிமைகளாகவுள்ளனர்.

இதிலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர். பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தவறு செய்கின்றனர். தண்டனை வழங்கப்படுவதில்லை. வழக்குப் பதிவு செயயப்படுவதில்லை. நீதிமன்றம், பொலிஸ் நடவடிக்கைகள் அல்லது முறைகள் சின்னாபின்னமாகியுள்ளன.

இரத்தினபுரியில் விளையும் மாணிக்கக்கற்களை அகழ்வது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அல்லது அவரது ஆதரவாளர்கள்.
வெளிநாட்டு கம்பனிக்காரர்களுடன் குறிப்பாக சிங்கப்பூர் கம்பனியுடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டு  மாணிக்கக்கற்கள் அகழ்கின்றனர். இது சட்டவிரோதமானது.

அத்துடன் அவிசாவளை, சீதாவாக்கை ஆற்றுப்படுக்கைகளிலும் மாணிக்கக்கற்கள் அகழப்படுகின்றன. மொரகந்த பகுதியிலும் மாணிக்கக்கற்கள் அகழப்படுகின்றன. இவர்கள் அனைவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள், அமைச்சர்கள், குடும்பத்தினர்களாவர்.

தேர்தல் பிரசார நடவடிக்கையில் சமுர்த்தி ஊழியர்கள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள் போன்றோர் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு கிராம சேவையாளர்கள் மூலம், பணம், செல்போன், கைக்கடிகாரம் என்பன பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 500 ரூபா நோட்டும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கென அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை என்பன தயார் நிலையிலுள்ளன. அவர்கள் வழங்கும் பணத்தாள்களில் (5000) போலித் தாள்களும் இருக்கும்.

அது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பசியுடன் இருக்கும்போது எதனையும் வழங்காத அரசு தற்போது  பெருமளவு பணத்தை வழங்கத் தயாராக உள்ளது. தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இவை வழங்கப்படுகின்றன. இவை அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

முண்டியடித்து வாங்குங்கள். இவற்றை வாங்கிக் கொண்டு நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அன்னத்திற்கும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் வெற்றிலைக்கும் வாக்களியுங்கள். நாடா? மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமா? என்பதனை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ஷ தெளிவான தோல்வியை நோக்கிப் போகின்றார். இது நான் சொல்லவேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். எமது மேடைகளை எரிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதுதான் ஜனநாயகம். எமக்கு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இதுதான் இன்றைய ஜனநாயகம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமக்கு 2 வருடம் இருக்கும்போதே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி 2 வருடத்தின் பின்னரே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அதன் பின்னர் தமது புதல்வருக்கு ஜனாதிபதி பதவியை வழங்கத் தீர்மானித்துள்ளார்.

தற்போதைய கருத்துக்கணிப்பின்படி 65 சதவீதமான வெற்றி எங்களுக்குள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் மறுநாள் அதாவது 9 ஆம் திகதி இரத்தினபுரியில் குடிகொண்டிருக்கும் வெளிநாட்டு மாணிக்கக்கற்கள் அகழ்வோர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.

ஏனையவர்கள் துரத்தப்படுவர். இந்த சமன் தெய்வத்தின் புனித பூமியிலிருந்து சமன் தெய்வம் சாட்சியாகக் கூறுகின்றேன், 9 ஆம் திகதி அவர்கள் வெளியேற்றப்பட்டு இரத்தினபுரியிலுள்ளவர்களுக்கு மாணிக்கக்கற்கள் அகழ சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.

Share.
Leave A Reply