ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே எஞ்சியுள்ளன. யாருக்கு வாக்களிக்க போகிறோம்? இலங்கையில் அன்று தொடங்கி இன்றுவரை ஆட்சி செலுத்திய எல்லா சிங்கள ஆட்சியாளர்களும் கொடிய யுத்தத்தை முன்னெடுத்தமையிலும் தொடர்ச்சியாக இன அழிப்பை மேற்கொண்டு வந்தமையிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாயிருக்கவில்லை.
எனவே.. இறுதி யுத்தத்தை நடத்தியவரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் முதுசமான யாழ் நூலகத்தையும் தன்கையாலேயே கொளுத்திய (1981ம் ஆண்டு) குற்றவாளி ரணிலுக்கு (மைத்திரி வென்றால் பிரதமராகபோகும்) நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்?
இறுதி யுத்தத்தத்தை நடத்தியவரை பழி வாங்க வேண்டுமாயின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவுக்கு நாம் எப்படி வாக்களித்தோம்? யுத்தத்தின் பிரதான தளபதியே அவர்தானே?
இன்று எதிரணி வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன தான் இறுதி யுத்தத்தின் போது பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ஆகும். அப்போது ஜனாதிபதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தமை காரணமாக மைத்திரியே பாதுகாப்பு அமைச்சராக செயல் பட்டார்.
கண்மூடித்தனமான குண்டுவீச்சில் பல்லாயிரம் மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான சுதந்திரபுரம் அகதிகள் முகாம் மற்றும் சூழ உள்ள பகுதிகள் மீது 5000 வரையிலான எறிகணைகள் மே மாதம் 15, 16, 17ம் திகதிகளில் வீசப்பட்டமைக்கு இந்த மைத்திரியே அனுமதி வழங்கியவராகும். ஜனாதிபதி நாடுதிரும்புகையில் யுத்தம் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் எந்த வேட்பாளரை நாம் தமிழ் மக்களின் பாதுகாவலனாக கொண்டாட முடியும்? மகிந்த குற்றவாளி என்றால் மைத்திரி அதிலிருந்து எவ்வகையில் வேறுபட்டவர்?
இப்படியானதொரு நிலையை சீர்தூக்கி பார்த்தால் உண்மையிலேயே எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களால் விரும்பி வாக்களிக்கும் தகுதி நிலைக்கு உரியவர்களல்ல.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த ஜனாதிபதி தேர்தலிலாவது ஒரு மூன்றாவது பாதையை தேர்வு செய்திருக்க முடியும்.கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களில் விட்ட பிழைகளுக்கு பிராயச்சித்தம் செய்வதாக அது இருந்திருக்கும்.
இடதுசாரிய முன்னணி சார்பில் தோழர் துமிந்த நாகமுவ அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எமது நாட்டிலுள்ள சிங்கள அரசியல் வாதிகளில் மிக சொற்பமானோரே இலங்கையின் இனப்பிரச்சனை சார்ந்தும் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் சாதகமான கொள்கைகளை கொண்டிருக்கின்றார்கள்.
அதில் இந்த இடதுசாரிய முன்னணியின் தலைவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆகும். இதுபோன்ற அரசியல் சிந்தனை கொண்டவர்கள் ஆட்சியதிகாரங்களிலும் பாராளுமன்றங்களிலும் செறிவாக இருக்கின்ற வேளைகளில் மட்டுமே இலங்கை போன்ற நாடுகளில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு குறைந்த பட்ச பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. இதனை கடந்தகால வரலாறுகளில் நாம் காணமுடியும்.
ஆனால் எமது இனத்தின் பெயரால் அதன் உரிமைகளின் பெயரால் அரசியல் செய்கின்ற தமிழ் தலைமைகள் ஒருபோதும் இந்த இடதுசாரிகளின் பக்கம் ஒருபோதும் தலை வைத்தும் படுப்பதில்லை. அது எமது தமிழ் தலைமைகள் கொண்டிருக்கும் மேட்டுக்குடி சிந்தனைகளின் வெளிப்பாடு ஆகும்.
இன்றைய ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமிழ் மக்களின் நோக்கில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளேயாகும் என்பது வெள்ளிடை மலை.
இந்த நிலையில் குறைந்த பட்சம் தமிழ் மக்களின் வாக்குகளை இடது சாரிகளை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு திசை திருப்பியிருக்க முடியும்.ஆனால் அவர்கள் அதை செய்யவில்ல்லை. ஒரு போதும் செய்ய போவதுமில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருபுறம் ஜனாதிபதியை யுத்த குற்றவாளி என கூறிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களின் லட்சக்கணக்கான வாக்குகளை அதே யுத்தத்தை நடாத்தி முடித்த தளபதி பொன்சேகாவுக்கு அளிக்கச் செய்ததன் மூலமே சர்வதேசத்தில் இலங்கையரசு எதிர்கொண்டிருந்த யுத்தக்குற்றத்தை கடந்து செல்லுதல் என்கின்ற மிகப்பெரிய சவாலானது நீர்த்துப்போக செய்யப்பட்டது.
2010 ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினரினால் எடுக்கப்பட்ட சரத் பொன்சேகா ஆதரவு நிலைப்பாட்டு முடிவானது ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களிக்க கூடாது என்கின்ற நிலைப்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட முட்டாள் தனமான முடிவாகும்.
அதைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி மகிந்தவிற்கே வாக்களிக்க சொல்லியிருந்தாலும் அந்த முடிவானது அவரது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஒரு இணக்கப்பாடான பணிகளை தமிழ் மக்களுக்காக முன்னெடுப்பதற்கு வழிகோலியிருக்கும் .
உதாரணமாக வடமாகாணசபையை ஒரு உத்வேகமான மக்கள் பணிக்காக பயன்படுத்துவதற்கு இருக்கக்கூடிய தடைகள் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அடையாளம் காணுபவற்றை தாண்டிச்செல்ல அந்த ஜனாதிபதியுடனான இணக்க வழிமுறை நிச்சயம் பயன்பட்டிருக்கும்.
கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளாத சமூகம் ஒரு போதும் முன்னேறமுடியாது என்பதே சமூகவியல் வல்லுனர்களின் கருத்து. இதையே நமது முன்னோர்கள் “நல்லமட்டுக்கு ஒரு சூடு” என்றார்கள்.
ஆனால் நாமோ பிழைக்கு மேல் பிழைகளை விட்டுக்கொண்டு விடுதலை வேண்டி யாசித்துக்கொண்டிருக்கின்றோம். இத்தனை படிப்பினைகளுக்கு பின்னரும் ஏன் எமது தலைமைகள் மீண்டும் மீண்டும் அழிவுப்பாதையின் ஊடே எம்மக்களுக்கு வழிகாட்டுகின்றனர்? மக்கள் நலன் பின்னடிக்கப்பட்டு தலைவர்களின் நலன்கள் முன்னிறுத்தப்படுகின்றன?
தந்தை செல்வா அமிர்தலிங்கம் காலத்திலெல்லாம் எடுக்கப்பட்ட தேர்தல் அரசியல் தீர்மானங்கள் பெரும்பாலும் மக்களின் நலன் சார்ந்த விடயங்களுடன் பின்னிப்பிணைந்தே இருந்து வந்திருக்கின்றன.
ஆனாலும் தமது பதவியை தக்கவைத்து கொள்வதற்காக பல தடவைகளில் தமிழ் கட்சிகளின் தீர்மானங்கள் தவறுதலாகவும் எடுக்கப்பட்டுத்தான் இருக்கின்றன என்கின்ற உண்மைகளை மறைக்க முடியாது.
ஆனால் தமிழ் மக்களை வழி நடத்திய கடந்தகால அரசியல் தலைவர்கள் பணத்துக்காக ஒருபோதும் தமிழ் மக்களை விலை பேசியதாக வரலாறு இல்லை .1977ம் ஆண்டு இலங்கையின் எதிர்கட்சி தலைவராக பரிணமித்த அமிர்தலிங்கம் போன்றோர் இந்த பணப்பெட்டிகள் விடயத்தில் என்றும் யோக்கியர்களாகவே இருந்துவந்துள்ளனர்.
1989ம் ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடுவதற்காக அமிர்தலிங்கம் தனது கொழும்பு வீட்டையும் விற்றுத்தான் பணத்தை பெற்றுக்கொண்டதாக செய்திகளுண்டு. ஆனால் இப்போது தமிழ் தலைவர்களாக மக்கள் நம்பியிருக்கும் கூட்டத்தினரோ யோக்கியம் என்னும் சொல்லுக்கு வெகுதூரமாக சென்றிருக்கின்றனர்.
இன்று சமூக அக்கறையற்ற சுயநலமிகளே அரசியலில் நிரம்பியிருக்கின்றார்கள். அவர்களே இன்று தலைவர்கள் வேஷம் போடுகின்றனர்.
சமூகம் பற்றிய தீர்க்கமான பார்வையோடு இந்த சமூகத்தை மாற்றவேண்டும் சமஉரிமை பெற்ற சமூகத்தவராக நமது மக்களும் வாழவேண்டும் சாதி வேற்றுமைகளும் பெண்ணடிமைத்தனமும் குழிதோண்டி புதைக்கப்படவேண்டும்.என்று குரல் கொடுத்து இந்த மக்களுக்காக வாழ்ந்த தலைவர்களை சமூக செயற்பாட்டாளர்களை எல்லாம் கொன்றொழித்துவிட்டு மேட்டுக்குடிகளும் பித்தலாட்டக்காரர்களும் பணமுதலைகளும் இன்று தலைவர்களாக வலம் வருகின்றார்கள்.
ஆங்கிலத்தில் பாண்டித்தியமும் அட்வகேட் உத்தியோகமும் மட்டுமே தமிழர்களின் தலைவர்களாவதற்குரிய தகுதியாகிப் போயுள்ளமை கொடுமை. கொழும்பிலே பிறந்து கொழும்பிலே வளர்ந்து வடக்கு கிழக்கில் வாழும் பத்து பாமரத் தமிழனின் பெயர் சொல்ல தெரியாத ‘பெரிய’மனிதர்களே வடக்கு கிழக்கு வாழ் தமிழனின் தலை விதியை தீர்மானிக்கின்றவர்களாக மாறியிருப்பது மகா கொடுமை.
ஒவ்வொரு தேர்தலிலும் வெளிநாட்டு தூதரகங்களே தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்கு செலுத்தப்படவேண்டும் என்று நிர்ணயிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கு நமது சமூகத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது இந்த கூட்டம்.
வருடமொருமுறை அம்பாறைக்கு வந்து செல்லும் மாவை சேனாதிராஜா அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி கிளையின் ஆயுள்கால தலைவராக அம்பாரை மக்களுக்கு தலைவர்கள் இல்லாத குறையை தீர்த்து வைக்கும் உபகாரியாக உலாவருகின்றார்.
இவர்களுக்கெல்லாம் இந்த மக்களின் வாழ்வியல் இன்பதுன்பங்கள் பற்றி என்ன தெரியும்? அம்பாறை தமிழர்கள் ஒருபுறம் முஸ்லிம்களோடும் மறுபுறம் சிங்களவர்களோடும் இணைந்து வாழ தெரியாமலும் பிரிந்து வாழ முடியாமலும் படும் பாடுகள் மாவைக்கு புரியுமா? ஆனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் அம்பாறைக்கு செல்லும் பாதை மாவைக்கு ஞாபகம் வருகின்றது.
இந்த அக்கரைப்பற்றிலும் திருக்கோவிலிலும் பாணமையிலும் வாழும் தமிழ் மக்களோ சபிக்கப்பட்ட ஜென்மங்கள். தமிழர்கள் என்னும் ஒரே காரணத்தால் இந்த கூட்டமைப்புக்கு வாழ்க்கைப்பட்டு துன்பத்தில் உழல்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு வாழ் மற்றைய தமிழர்களை போலவே அவர்களும் அப்பாவித்தனமாக ஏமாறுகின்றனர். டாலர்களும் ஈரோக்களும் சூட்ககேசுகளில் சரியாக கைமாறுகின்றதா எனப்பார்த்து தமிழ் மக்களின் வாக்குகளை விலைபேசி விற்கின்ற கொள்ளையர்கூட்டத்திடம் தமது இறைமையை கையளித்துவிட்டு வாளாதிருக்கின்றார்கள்.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை கூர்ந்து அவதானித்தால் அதில் ஒரு இடத்தில் கூட வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு வார்த்தைதானும் இல்லை.
தமிழ் மக்களுக்கு எதுவுமே தரமுடியாது என்று பகிரங்கமாக அறிக்கை விடும் தைரியம் கொண்ட மைத்திரி சிறினா தமிழ் மக்களின் வாக்குகளை தமக்காக விலை பேசி வாங்கும் முயற்சியில் கடந்த வாரம் வெற்றிபெற்றுவிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமறைவாகி இந்தியாவில் இருந்து கொண்டு சுமந்திரன் பேரங்களை பேசி முடித்துவிட்டதும் நாடுதிரும்பி மைத்திரிக்கான ஆதரவை அறிவித்தார். இதன்பெயரில் ஆறுகோடி ரூபா பெறுமதியான ஈரோக்கள் கைமாறப்பட்டன என்கின்ற செய்திகள் பல கசிந்திருக்கின்றன. இதுபற்றி பல இணையத்தள செய்தி ஊடகங்கள் விளக்கமாக எழுதியிருக்கின்றன.
அந்தளவு தூரம் மக்களின் வாக்குகளை விலைபேசி விற்கின்ற கூட்டமாக இன்றைய தமிழ் தலைமைகள் மாறியுள்ளமை தமிழ் மக்களுக்கு பிடித்த சாபக்கேடாகும். இந்த தமிழ் மக்களின் வாக்குகளை விலை பேசி விற்ற பணம் பிரிக்கப்படுவதில் இப்போது கூட்டமைப்பு கட்சிகளிடையே பாரிய புடுங்குபாடுகள் உருவாகியுள்ளன.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்தியும் சிவாஜிலிங்கமும் சிவகரன் போன்றோர் மைத்திரிக்கு வாக்களிக்கும் முடிவை எதிர்த்து நிற்கின்றார்கள்.
இன்று(03.01.2015) இது குறித்த ஒரு பத்திரிகையாளர் மாநாடு அனந்தி சசிதரனால் (எழிலன்) கூட்டப்பட்டுள்ளது. அவருடன் அவருக்கு ஆதரவாக தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு மைத்திரியை ஆதரித்ததன் மூலம் “இராஜதந்திர ரீதியாக தமிழ்மக்களை வழிநடத்தும் உன்னதமான நிலையில் இருந்து கூட்டமைப்பு தவறி வரலாற்றுத்துரோகம் செய்துவிட்டது.”என தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளிகிளம்பியுள்ள இந்த ஜனநாயக பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில்தான் கடந்த கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் தன்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10 கோடி ரூபா பணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டும் வலுப்பெறுகின்றது.
அப்படியென்றால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தமிழ் மக்கள் அடிமாடுகளாக விற்கப்படுகின்றர்களா? என்ன கொடுமையுது.இந்த அரசியல் வியாபாரிகளின் சொல்கேட்டுத்தான் இம்முறையும் வாக்களிக்கப்போகின்றோமா?
மானமுள்ள தமிழன் மறத்தமிழன் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடி என்றெல்லாம் தற்பெருமை பேசும் தமிழினமே உன் வாக்குரிமை தமிழ் தேசியகூட்டமைப்பால் விலை பேசி விற்கப்பட்டிருக்கிறதே!
உனது இறைமையை அன்னியனல்ல தமிழனே விலை பேசி வியாபாரம் செய்திருக்கின்றான். இதை நீ அனுமதிக்கப்போகின்றாயா? மகிந்தவுக்கு வாக்களிப்பது தவறு என்றால் தமிழனை விலை பேசி வாங்குவதன் மூலம் ஜனாதிபதியாக வர விரும்பும் மைத்திரியை ஆதரிப்பது மகாமகா தவறு தமிழா!