ராஜேந்திரன் வர வர கெட்டப் நாயகனாக மாறி வருகிறார். கொடூரமான வில்லனாக அறிமுகமாகி, ரணகளமான காமெடியானாக மாறி கலக்கி வந்த அவர் தற்போது விதம் விதமான கெட்டப்பில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

நான் கடவுள் படத்தில் பார்த்த ராஜேந்திரனாக இப்போது அவர் இல்லை. மாறாக காமெடி பீஸாகி விட்டார்.

அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய ஆரோமலே பாட்டைக் கேட்டு காது நரம்பு கிழிந்து போனவர்கள் பட்டியல் ரொம்பவே நீளம்.

ஆனாலும் ராஜேந்திரன் விடுவதாக இல்லை.

தொடர்ந்து காமெடியில் ரசிகர்களை நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்.

வில்லாதி வில்லனாக வலம் வந்த ராஜேந்திரன் திடீரென திருடன் போலீஸ் படத்தில் பெண் வேடத்தில் வந்த காட்சியைப் பார்த்து எலும்பு சிலிர்த்துப் போனவர்கள் அதிகம்.

இந்த நிலையில் தற்போது காலகட்டம் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார் ராஜேந்திரன். பாஸ்கர்.. இவர்தான் இந்த காலகட்டம் படத்தின் இயக்குநர்.

இவர் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். நடிகர் நடிகையரை டான்ஸ் ஆட வைத்தவர். இவர்தான் தற்போது இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கும் படம்தான் காலகட்டம்.

பவன் ஹீரோவாக நடிக்கிறார். இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை சத்யஸ்ரீ என்ற அழகான ஹீரோயின் இதில் அறிமுகமாகியிருந்தாலும் கூட நாம, ராசேந்திரனை மட்டும் பார்ப்போம்.

காலகட்டம் பழைய காலத்து படங்களில் வரும் எம்.ஜி.ஆர். போலவே தகதகன்னு இதில் மிளிர்கிறார் ராஜேந்திரன்.

அதாவது எம்.ஜி.ஆர். போலவே பளார் டிரஸ்ஸிலும், பொளேர் கலர் கண்ணாடியும் போட்டு கண்களை கூச வைக்கிறார். தலையில் விக் வேறு.

வாகாக சீவி விட்ட அந்த ஸ்டைல் தலை முடியலங்கராம்… ஆஹாஹா.. ஓஹோஹோ! ஒரு காலத்தில் சுதாகர் போன்ற அக்காலத்து டாப் டக்கர் ஹீரோக்களின் சட்டைகளை அலங்கரித்து வந்த மெகா சைஸ் காலர் போட்ட ராஜேந்திரனைப் பார்க்கும்போது அவருக்கே கூட அடையாளம் தெரியாது பாஸ்!.

ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா… டொடோடோடொய்ங்….

என்று எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலன் படத்தில் பாடுவாரே.. அந்தப் பாட்டுதான் இந்த ஸ்டில்லில் ஒன்றைப் பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.. ராஜேந்திரனின் “உதட்டு அழகு” அப்படி இருக்கு இதில்!

பெல்ட் என்ன, பெல்பாட்டம் பேன்ட் என்ன, ஆரஞ்சுக் கலர் சட்டை என்ன… ஓவர் கோட் என்ன..

அத்தாத்தண்டி செயின் என்ன.. கூலர் என்ன.. எங்கேயோ போய்ட்டீங்க ராஜி! இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டருக்குப் பார்க்கனும்!

Share.
Leave A Reply