கரூர்: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அடுத்த கூடலூர் கிழக்கு ஊராட்சி ரெங்கபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் பாரதிபிரியா(14). சின்னதாராபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பிச் சென்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோஜ் (25), திடீரென அவரை வழிமறித்தார்.
அப்போது பாரதி கீழே விழுந்ததும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அவரை சரமாரி குத்தினார்.
பின்னர் மனோஜ், தானும் வயிற்றில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த பாரதிபிரியாவை கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்தார்.
மனோஜ் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணை யில், பாரதிபிரியாவை மனோஜ் பல வருடங்களாக காதலித்து வந்தார்.
இதற்கு அவர் மறுத்து வந்ததால் கொலை செய்தது தெரியவந்தது. மாணவியின் சடலம், கரூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலையில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் கைவிடப்பட்டது.