சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில், 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, கம்பகா மாவட்டத்தில், அதிகளவு வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அங்கு, 1.637 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
இதையடுத்து, கொழும்பு மாவட்டத்தில், 1.586 மில்லியன் வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் 1.049 மில்லியன் வாக்காளர்களும், குருநாகல மாவட்டத்தில் 1.266 மில்லியன் வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் தொகுதி அடிப்படையில், நுவரெலிய – மஸ்கெலிய தொகுதியிலேயே அதிகளவு வாக்காளர்கள் உள்ளனர். அங்கு, 302,836 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்து, ஹோமகம தொகுதியில், 174,909 வாக்காளர்களும், கடுவெல தொகுதியில் 173,355 வாக்காளர்களும், மட்டக்களப்பு தொகுதியில் 172,499 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 14,088,500 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இம்முறை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.