நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றது.
நாடு முழுவதும் 12,316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் பிரதானமாக இரண்டு வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பொது எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக மைததிரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்ற நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையிலேயே கடுமையான போட்டி காணப்படுகின்றது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் வரலாற்றில் முதற்தடவையாக இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவிவகித்த ஒருவர் மூன்றாவது தடவையாக போட்டியிடுகின்றார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
அந்தவகையில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் தேர்தலில் 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் 12316 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நடைபெறவுள்ளது. மேலும் நாடு முழுவதும் 1419 வாக்குகளை எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய தபால் மூல வாக்குகள் 303 நிலையங்களிலும் சாதாரண வாக்குகள் 1109 நிலையங்களில் எண்ணப்படும்.
எனினும் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்கள் நாட்டின் 22 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் 1076 சாவடிகள் கம்பஹாவில் 1053 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதுடன் குறைந்தளவிலான வாக்கு சாவடிகளாக மன்னார் மாவட்டத்தில் 76 கிளிநொச்சி மாவட்டத்தில் 96 என நிறுவப்படவுள்ளன.
காலையிலேயே வாக்களியுங்கள்
காலை ஏழு மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதுடன் மக்கள் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகளை விநியோக்கும் பணிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன.
எனினும் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம். வாக்காளர் அட்டை இல்லாவிடினும் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்காளர் இடாப்பில் பெயர் இருப்பின் தனது ஆள் அடையாளத்தை உறுதி செய்து வாக்கினை பிரயோகம் செய்ய முடியும்.
71100 பொலிஸார் பாதுகாப்பில்
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக 71 ஆயிரத்து 100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 66100 சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களும் 5000 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஒரு நிலையத்தில் 2 பொலிஸார்
ஒரு வாக்காளிப்பு நிலையத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கி ஏந்திய 2 பொலிஸ் காண்ஸ்டபிள்கள் அல்லது சார்ஜன்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
அந்தவகையில் 12316 வாக்களிப்பு நிலையங்களுக்கும் 240000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
தேர்தலின் போது அவசர நிலமை ஒன்று ஏற்படும் இடத்து அதனை சமாளிக்கும் விதமாக 43 பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சர்களின் கீழ் விஷேட அதிரடிப்படையினரை உள்ளடக்கிய படையணியொன்றும் உருவாக்கப்ப்ட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
கூடுதல் கவனம்
தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லல், வாக்களிப்பு நிலையம் அருகே ஏதேனும் ஒரு முறையில் பிரச்சாரம் செய்தல், களவாக வாக்கு போட முற்படல் உள்ளிட்ட செயற்பாடுகள் குரித்து இம்முறை கூடுதல் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 இலட்சம் அரச ஊழியர்
12316 வாக்களிப்பு நிலையங்களுக்கு 10 பேர் வீதம் பணியில் ஈடுபடவுள்ளனர். எவ்வாறெனினும் 2 அரச உத்தியோகத்தர்கள் வரை கடமையில் அமர்த்தப்படுவர்.
வாக்குப் பெட்டிகள்
நேற்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தலைமை அதிகாரிகளினால் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் வாக்களிப்பு நிலையத்துக்கு அறிக்கையிட்டுள்ளனர். அத்துடன் நேற்று மாலை அங்கு அதிகாரிகள் வாக்களிப்பு ஒத்திகை ஒன்றிலும் ஈடுபட்டனர்.
22 தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகள் தேர்தலை உரிய முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவடைந்தன. அந்தவகையில் 48 மணிநேர இடை வெளிக்குப் பின்னர் இன்று தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது.
19 வேட்பாளர்கள்
கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. அதன்படி டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. அந்தவகையில் ஜனவரி எட்டாம் திகதி தேர்தலுக்காக 19 வேட்பாளர்கள் களமிறங்கினர். டிசம்பர் மாதம் எட்டாம் திகதி முதல் பிரசாரப் பணிகள் ஆரம்பமாகின.
அசம்பாவிதம் இடம்பெற்றால் ரத்து?
இது இவ்வாறு இருக்க வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் வாக்கெடுப்பு இரத்து செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வீண் குழப்பம் ஏற்படுத்தல் நடமாடுதல் மதுபாவனை போன்றன தடை செய்யப்பட்டுள்ளன.
கம்பஹாவில் அதிக வாக்காளர்கள்
வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 1637537 வாக்காளர்கள் உள்ளனர்.
குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி காணப்படுகின்றது. இங்கு 253058 பேர் உள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றன. இதன்போது 19 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
வாகாளர் அட்டை விநியோகம்
வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டன. வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி விசேடதினமாக பிரகடனப்பட்டு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.
சர்வதேச கண்காணிப்பு
தேர்தல் கண்காணிப்பை பொறுத்தமட்டில் பொதுநலவாயம், ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து 55 கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
பொதுநலவாய அமைப்பிலிருந்து 9 கண்காணிப்பாளர்கள் இலங்கை வந்துள்ளனர். சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனைவரும் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
உள்நாட்டு கண்காணிப்பாளர்கள்
உள்நாட்டிலும் பல அமைப்புக்களுக்கு தேர்தலை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பான பெப்பரல் அமைப்பின் சார்பிலும் 15000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கள் டிசம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளிலும் பின்னர் சில விசேட தினங்களிலும் இடம்பெற்றன.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை தேர்தல் திணைக்களம் ஏற்றுக்கொண்டது. சுமார் 540000 பேர் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.
2 வருடங்கள் முன்பதாக…
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு வருடங்கள் பதவிக்காலம் உள்ள நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த 2010 ஆம் ஆஆண்டு இண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி ஆறு வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்றாலும் நான்கு வருடங்கள் முடிவில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதி நடத்துவதற்கு அரசியலமைப்பில் உள்ள அதிகாரத்தின்படி தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.
18 ஆவது திருத்தம்
மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பாராளுமன்றததில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இரண்டு தடவைகளே ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக போடடியிட தீர்மானித்துள்ளார்.
கடந்த தேர்தல்கள்
முதலாவது ஜனாதிபதி தேர்தல் கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது தேர்தல் 1988 ஆம் ஆண்டிலும் மூன்றாவது ஜனாதிபதி தேர்தல் 1994 ஆம் ஆண்டிலும் நான்காவது ஜனாதிபதி தேர்தல் 1999 ஆம் ஆண்டிலும் ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் 2005 ஆம் ஆண்டிலும் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் 2010 ஆம் ஆணடிலும் நடைபெற்றன.
இதற்கு முன்னர் ஜே.ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ,ஆகியோர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக பதவி வகித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்து வருகின்றார். 2005 ஆம் ஆண்டு முதலாவது தடவையாகவும் கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.
இம்முறை ஆளும் கட்சியிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகின்ற நிலையில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகின்றார்.