ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.

நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம்.

ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 – -96 வரை, ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.

நீதிபதி (குறுக்கிட்டு): வீட்டு வாடகை படி, பயணப்படி, கார், டிரைவர், தொலைபேசி உட்பட, ஏதாவது வசதிகளை, முதல்வர் என்ற முறையில் பெற்றிருந்தாரா?

வழக்கறிஞர்: இல்லை. மாதத்துக்கு, ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கினார். இந்த காலக் கட்டத்தில், எந்த சொத்தும், நகையும் வாங்கவில்லை.

முதல்வராவதற்கு முன்பிருந்தே, கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம், அவரின் தாயார் சந்தியா தொடங்கிய நாட்டிய பள்ளி ஆகியவற்றின் மூலமும், வங்கியில் ஜெயலலிதா வைத்திருந்த வைப்பு நிதியின் மூலம் வந்த வட்டி பணத்தின் மூலம், போயஸ் கார்டன் விரிவாக்கத்தின் போது, சில கட்டடங்களை கட்டினார்.

இதற்கான டைல்ஸ், மார்பிள்ஸ், மர சாமான்கள், மின்சார பொருட்கள் வாங்கியதற்கு, மும்பையிலிருந்து, ´பில்´ கொடுத்துள்ளனர். ஆனால், ஊழல் தடுப்பு பொலிசார், இதையெல்லாம் பார்க்காமல், தங்கள் இஷ்டப்படி பல மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்து கோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியதாக கணக்கு காட்டி உள்ளனர்.

போயஸ் கார்டனில் இரண்டு மேனேஜர், ஆறு பணியாளர்கள், ஆறு டிரைவர்கள் வேலை செய்வதாகவும், இருவர், வீட்டை சுத்தம் செய்வதாகவும், இவர்களுக்கு மாதந்தோறும் இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்ததாகவும், ஊழல் தடுப்பு பொலிசார் மிகைபடுத்தி காண்பித்து உள்ளனர்.

நீதிபதி: ´4991´ என்ற எண்ணில் தொடங்கும், தொலைபேசி யாருடையது? அரசுடையதா? தனியாருடையதா?

வழக்கறிஞர்: தனியார் தொலைபேசி. 1995, செப்.,7ம் திகதி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், சிவாஜி கணேசன் பேத்தி சத்ய லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.

இதற்காக, பெண்ணின் தாய்மாமன், ஒரு கோடி ரூபாய் செலவழித்தார். இவை அனைத்தும், செக்’காக கொடுக்கப்பட்டு உள்ளது. உணவு, வரவேற்பு பந்தல், மின் விளக்குகள், கட்-அவுட் செலவை, கட்சியினர் விருப்பத்துடன் செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு, 6.40 கோடி ரூபாய் செலவழித்ததாக, மிகைப்படுத்தி காட்டப்பட்டு உள்ளது.

நீதிபதி: திருமண அழைப்பிதழ் அனுப்ப எவ்வளவு செலவானது?

வழக்கறிஞர்: 2.24 இலட்சம் ரூபாய் செலவானது. 1991 – -96 காலக் கட்டத்தில், கோடநாடு எஸ்டேட்டில், சில கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறுவது தவறு. இக்கட்டடங்கள், 1991க்கு முன்னரே கட்டப்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதா, நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?

வழக்கறிஞர்: இரண்டு இலட்சம் ரூபாய் வாங்கினார்.

நீதிபதி: எத்தனை படங்கள் நடித்துள்ளார்?

வழக்கறிஞர்: ஏறக்குறைய, 200 படங்கள் நடித்துள்ளார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட, ஆறு நிறுவனங்களை விற்று, அபராதத்தை செலுத்தும் படி, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள், 1991க்கு முன்பிருந்தே செயல்பட்டவை. இதற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: நீங்கள், எத்தனை நாள் வாதிடப்போகிறீர்கள்?

வழக்கறிஞர்: ஜெயலலிதா தரப்பில், 15 நாட்கள் வாதிட போகிறோம்.

நீதிபதி: (அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பார்த்து) நீங்கள் எத்தனை நாள் வாதிடுவீர்கள்?

பவானி சிங்: நான்கைந்து நாட்கள். இவ்வாறு, நேற்று விசாரணை நடந்தது.

Share.
Leave A Reply