மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வந்ததும் நாங்கள் தான். அவரை ஆட்சியில் இருந்து விரட்டியதும் நாங்களே. நாம் சொன்னதை செய்து காட்டியுள்ளோம் என தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய மூவின மக்களின் ஆதரவு எம்மை வெற்றியடையச் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டது.
ஜனாதிபதித் தேர்தலின் பொது எதிரணியின் வெற்றியினைத் தொடர்ந்து பொது எதிரணியின் பிரதான எதிர்க்கட்சியின் ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஓமல்பே சோபித தேரர்
இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவிக்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் பிரதான பணியினை ஜாதிக ஹெல உறுமய செய்துள்ளது.
அதேபோல் மாற்றத்தின் முதல் காரணக்காரர்கள் சுயாதீனமாக செயற்பட்ட ஊடகவியலாளர்களே. ஊடகங்கள் எவரினதும் அழுத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது சாதாரணமாக செயற்பட்டனர்.
எனினும் ஒரு சிலர் தமது மனச்சாட்சியினையும் மறந்து முன்னாள் ஜனாதிபதிக்கு துணை போனார்கள். அதற்கு எம்மிடம் மன்னிப்பு உண்டு.
மேலும் மக்கள் தமது முடிவினை மிகச் சரியாக செய்துள்ளனர். இனிமேல் மைத்திரி அரசாங்கத்தில் மக்கள் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை. மூவின மக்களும் சுயமாக செயற்பட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதுரலியே ரத்ன தேரர்
சர்வாதிகாரத்தின் மத்தியிலும் பண பலத்தின் மத்தியிலும் ஜனநாயகம் போராடி வெற்றி கொண்டுள்ளது. இலங்கை மக்கள் தமது மனச்சாட்சிக்கு உண்மையானவர்கள் என்பதையும் கற்ற மக்கள் சரியாக தீர்மானமெடுப்பார்கள் என்பதுவும் இம்முறை நிரூபணமாகி விட்டது.
மூவின மக்களும் இன, மத பாகுபாடின்றி ஒற்றுமையாக வாக்களித்து மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை கவிழ்ப்போம் என நாம் வாக்குக் கொடுத்தோம். செய்து காட்டியுள்ளோம்.
மேலும் பெற்ற வெற்றியினை இனிமேல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமாதானத்தினை நாட்டில் நிலை நாட்டவே அனைவரும் கைகோர்த்தோம்.
அதில் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டுக்குமே நாம் நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் தேசிய அரசின் வேலைத் திட்டத்தினை சரியாக செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பிக்க ரணவக்க
இதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க
கடந்த 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை அமைக்க நாம் பாடுபட்டோம். அன்று ஜனாதிபதியை ஆட்சி பீடம் அமர்த்தியதும் நாம் தான்.
அதேபோல் தற்போது ஜனாதிபதியை விரட்டியடித்ததும் நாம்தான். அன்று சொன்னதை இன்று செய்து காட்டியுள்ளோம். பண பலத்தையும் இராணுவ பலத்தினையும் வைத்து ஆட்சியினை தீர்மானிக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைத்தார்.
ஆனால் இன்று அவர் தனது பதவியினை துறந்து நிற்க வேண்டிய அவசியம் எம்மால் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் அரசியல் அனுபவம் இல்லாத சிறுபிள்ளையே பாதுகாப்புச் செயலாளர் கோதபாய. அவரை வைத்து ஆட்சியை தீர்மானிக்க நினைத்தது முட்டாள் தனமான செயற்பாடே.
அரசியல் சாணக்கியம் என்னவென்பதை நன்கு படித்து தெரிந்து மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு போராடட்டும். அது வரையில் சுயாதீனமான ஆட்சி இலங்கையில் நடைபெறும்.
மேலும் வடக்கு கிழக்கு மக்களின் 12 வீத வாக்குகள் எமக்கு உதவியது. எனினும் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் அதனை பெற்றுக்கொடுக்க நாம் போராடியதை மறந்து விடக் கூடாது.
நாம் ஒன்பது லட்சம் வாக்குகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். இன்று ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என அனைவரும் ஒன்றாக ஒரு மேடையில் வந்துள்ளனர். இதை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்தோடு பொது எதிரணியின் ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியினை வழங்கக் கோரியது பொய்யாகி விடக் கூடாது. கொடுத்த வாக்கினை காப்பாற்ற வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பது எமக்குள் முரண்பாடில்லை. நாட்டில் மூவின மக்களுக்குமான ஆட்சி முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.